For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்டா விவசாயிகளின் கோரிக்கை நியாயமானதே: மத்திய நிபுணர் குழு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர்களைக் காக்க தண்ணீர் வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை நியாயமானதுதான் என்று அங்கு ஆய்வு செய்த மத்திய நிபுணர்குழுவினர் கூறியுள்ளனர். அவர்கள் தங்கள் அறிக்கையினை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த அறிக்கையின் மீதான தீர்ப்பு நாளை வழங்கப்படும்.

தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை திறந்துவிட கர்நாடகம் மறுத்துவிட்டதால் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனே 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தற்கு எவ்வளவு தண்ணீர் தேவை, டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்களின் நிலை என்ன என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு நிபுணர் குழுவை அனுப்பி வைத்தது.

இதைத்தொடர்ந்து மத்திய வேளாண் அமைச்சக துணை ஆணையர் பிரதீப்குமார் ஷா தலைமையில் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர்கள் மகேந்திரன், ஜேக்கப் ஆகியோர் கொண்ட குழு டெல்டா மாவட்டங்களில் பயிர்களை பார்வையிட்டனர்.

அப்போது நிபுணர் குழுவை விவசாயிகள் சந்தித்து பயிர்களைக் காக்கத் தேவையான தண்ணீர் தேவையைப் பற்றி விவரித்தனர். இன்னும் 3 முறை தண்ணீர் பாய்ச்சினால்தான் நெல் அறுவடை செய்ய முடியும் என்று கூறினார்கள்.

திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட கலெக்டர்களும் தண்ணீர் தேவை குறித்து மத்திய குழுவிடம் மனு கொடுத்தனர். பருவமழை பொய்த்துப் போனதால் ஜூன் மாதம் திறக்கவேண்டிய மேட்டூர் அணை தண்ணீர் செப்டம்பர் மாதம்தான் திறக்கப்பட்டதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ மத்திய நிபுணர் குழுவிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதி வரை சென்று நிபுணர் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.

இந்த ஆய்வு குறித்து மத்திய குழுவைச் சேர்ந்த நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் மகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 3 மாவட்டங்களில் சில இடங்களில் பயிர் பாதிப்பு கடுமையாக இருக்கிறது. சில இடங்களில் குறைவான பாதிப்பு இருப்பதும் தெரிய வந்தது.

பருவம் தவறி நடவுப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலையில் மீதம் உள்ள நெல் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் தேவை என விவசாயிகள் கோரிக்கை வைப்பது நியாயமானதே. எங்கள் அறிக்கையில் விவசாயிகளின் தண்ணீர் தேவை, பயிர் சேதம் குறிப்பிடப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

இதனையடுத்து மத்திய நிபுணர் குழுவினர் டெல்லி புறப்பட்டு சென்று உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அறிக்கையை படித்துப் பார்த்தபின்பு வியாழக்கிழமை நீதிபதிகள் தீர்ப்பு கூறுகிறார்கள். டெல்டா மாவட்டத்தில் பயிர்களை காப்பாற்ற தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

English summary
A three-member team constituted by the Central Water Commission (CWC) visited the delta districts to assess the samba crop failure due to the non-release of water from Cauvery river to Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X