For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரபாகரன் மகன் கொல்லப்பட்ட விதத்தை நினைக்கையில் நெஞ்சம் பிளக்கிறது, ஈரக்குலை நடுங்குகிறது: ராமதாஸ்

By Siva
Google Oneindia Tamil News

Ramadoss
சென்னை: பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பட்ட விதத்தை நினைத்துப் பார்க்கும் போதே நெஞ்சம் பிளக்கிறது; ஈரக்குலை நடுங்குகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் சிங்களப் படையினரிடம் சிக்கிய விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் மிகக் கொடூரமான முறையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கான புகைப்பட ஆதாரங்களை லண்டனிலிருந்து வெளியாகும் தி இண்டி பெண்டண்ட் நாளிதழும், சேனல்-4 தொலைக்காட்சியும் வெளியிட்டுள்ளன.

அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள 4 புகைப்படங்களில் முதல் இரு படங்களில், இலங்கை ராணுவத்திற்கு சொந்தமான பதுங்கு குழியில் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டிருக்கும் சிறுவன் பாலச்சந்திரன் கவலை தோய்ந்த முகத்துடன் ரொட்டி போன்ற ஒன்றை தின்று கொண்டிருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அடுத்த இரண்டு படங்களில் உடல் முழுவதும் குண்டு பாய்ந்த காயங்களுடன் அச்சிறுவன் இறந்து கிடக்கும் காட்சிகள் உள்ளன. பால் மனம் மாறாத பச்சைக் குழந்தையை சிங்கள இன வெறியர்கள் எவ்வளவு கொடூரமாகவும், காட்டு மிராண்டித்தனமாகவும் படுகொலை செய்திருக்கிறார்கள் என்பதை இந்த புகைப்படங்கள் விளக்குகின்றன. சிங்களப்படையினரின் இந்த மிருகத்தனமான செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டு கிடக்கும் படங்களை சேனல்-4 தொலைக்காட்சி ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதற்கு சர்வதேச அரங்கில் கடும் கண்டனம் எழுந்த போது விடுதலைப்புலிகளுக்கும் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் சிக்கி பாலச்சந்திரன் இறந்துவிட்டதாக இலங்கை அரசு காரணம் கூறியது.

ஆனால், இப்போது வெளியாகியுள்ள புகைப்படங்களை ஆய்வு செய்த புகழ் பெற்ற தடயவியல் வல்லுனர் டெரிக் பவுண்டர், இந்த புகைப்படங்கள் அனைத்தும் உண்மையானவை என்றும், பாலச்சந்திரனை முதல் குண்டிலேயே சுட்டு சாய்த்து விட்டு, அச்சிறுவன் பின்புறமாக தரையில் வீழ்ந்து கிடந்த நிலையில் மேலும் 4 குண்டுகளை நெஞ்சில் சுட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட விதத்தை நினைத்து பார்க்கும் போதே நெஞ்சம் பிளக்கிறது; ஈரக்குலை நடுங்குகிறது.

ஐ.நா தூதர்களிடமும், இந்திய அரசிடமும் தகவல் தெரிவித்துவிட்டு வெள்ளைக்கொடி ஏந்தி வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் உள்ளிட்டோர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டது, மருத்துவ உதவி கூட வழங்காமல் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையை மன உளைச்சலுக்கு ஆளாக்கி கொன்றது, போரின் இறுதிக் கட்டத்தில் பிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்களை சித்ரவதைக்கூடத்தில் வைத்து இன்று வரை கொடுமைப்படுத்தியும், கொலை செய்தும் வருவது என சிங்களப் படையினரின் போர் குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் தொடர்ந்து வருகின்றன.

இலங்கை அரசின் இத்தகைய போர்க்குற்றங்களுக்கு இதுவரை எத்தனையோ ஆதாரங்கள் வெளியாகியுள்ளன; போர்க்குற்றங்களை எத்தனையோ சர்வதேச அமைப்புகள் கண்டித்திருக்கின்றன. ஆனால், இலங்கை அரசு இதுவரை திருந்தவில்லை. இதற்குக் காரணம் இந்தியா போன்ற நாடுகள் இலங்கையை எச்சரிக்காமல், அந்நாட்டு அதிபர் ராஜபக்சே வரும்போதெல்லாம் சிவப்புக் கம்பளம் விரித்துக் கொண்டிருப்பது தான்.

இப்போது வெளியாகியுள்ள கொடூரமான ஆதாரங்களுக்குப் பிறகாவது இலங்கை மீது கடுமையான அரசியல், பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கவும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி, சர்வதேச நீதிமன்றத்தின் கூண்டிலேற்றி, கடுமையான தண்டனை பெற்றுத்தரவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Dr. Ramadoss told that it is shocking to imagine the way LTTE chief Prabhakaran's son was killed brutally by the Sri Lankan army.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X