காவிரி: பெங்களூரில் செப்.26-ல் பந்த்- 100 அமைப்புகள் ஆதரவு- தமிழர் பகுதிகளில் '1991’ பதற்றம்!
பெங்களூர்: காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா தலைநகர் பெங்களூர் மாநகரத்தில் நாளை மறுநாள் (செப்.26) முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டத்துக்கு கன்னட திரை உலகம் உட்பட 100க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் பெங்களூரில் தமிழர் வாழும் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.
காவிரியில் தமிழ்நாடு அரசு வினாடிக்கு 24,000 கன அடி நீரை கோரியது. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையம் வினாடிக்கு 5,000 கன அடி நீரைத்தான் திறக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில், உச்சநீதிமன்றமும் வினாடிக்கு 5,000 கன அடி நீரை மட்டும் தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்த கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.

மண்டியா பந்த்: காவிரியில் இந்த சொற்ப நீரைக் கூட கர்நாடகா திறந்துவிடக் கூடாது என கன்னட விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மண்டியா, மைசூர், சாம்ராஜ்நகர் மற்றும் தமிழ்நாடு-கர்நாடக மாநில எல்லைகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மண்டியாவில் நேற்று முழு அடைப்புப் போராட்டமும் நடத்தப்பட்டன.
பெங்களூர் டார்கெட்: மேலும் பெங்களூர் நகரத்துக்கு காவிரி நீர்தான் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் பெங்களூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை என கூறி மண்டியா மாவட்டத்தில் பெங்களூர் நகருக்கான குடிநீர் நீரேற்று நிலையத்தையும் முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
பெங்களூர் பந்த் -100 அமைப்புகள் ஆதரவு: இந்த தூண்டுதலைத் தொடர்ந்து பெங்களூரில் வரும் 26-ந் தேதி (நாளை மறுநாள்) போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட விவசாயிகள் சங்கத் தலைவர் குருபூரு சாந்தகுமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அன்றைய தினம் பெங்களூர் டவுன்ஹாலில் இருந்து மைசூர் வங்கி வரை பிரம்மாண்ட பேரணியையும் நடத்த திட்டமிட்டுள்ளனர். தற்போதைய நிலையில் பெங்களூர் முழு அடைப்புப் போராட்டத்துக்கு 100க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக குருபூரு சாந்தகுமார் தெரிவித்துள்ளார். கன்னட திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், கர்நாடகா சினிமா வர்த்தக சபையினரும் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகா பந்த்?: அதே நேரத்தில் கர்நாடாக தழுவிய முழு அடைப்புதான் நடத்த வேண்டும் என கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் வலியுறுத்தி வருகிறாராம். ஆகையால் பெங்களூர் முழு அடைப்பைத் தொடர்ந்து கர்நாடகா தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்படக் கூடும் என கூறப்படுகிறது.

1991- பதற்றத்தில் தமிழர்கள்: தமிழர் பகுதிகளில் பதற்றம்: காவிரி பிரச்சனை வெடித்தது என்றாலே பெங்களூர் நகரில் வசிக்கும் தமிழர்கள் பகுதிகளில் பதற்றம் உருவாகிவிடும். 1991-ம் ஆண்டு காவிரி பிரச்சனையின் போது தமிழர்கள் மீது கன்னடர்கள் அப்படி ஒரு மிக மோசமான தாக்குதல்களை நடத்தி தமிழர்களை 'அகதிகளாக' தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்த பெருங்கொடுமை நிகழ்ந்தது. தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட வன்முறை நிகழ்த்தப்பட்டன. இதனால் தமிழர் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது. இதனிடையே முழு அடைப்பு உள்ளிட்ட எந்த ஒரு போராடத்தையும் மாநில அரசு தடுக்காது; ஆனால் போராட்டங்களால் எந்த ஒரு பலனுமே இல்லை என்கிறார் கர்நாடகா மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார்.












Click it and Unblock the Notifications