ஹிஜாப்.. மாணவி முஸ்கானை அல்கொய்தா ஏன் பாராட்டியது? விசாரணையை தொடங்கிய கர்நாடக போலீஸ்
பெங்களூர்: ஹிஜாப் போராட்டத்தின்போது ‛அல்லாஹு அக்பர்' கோஷமிட்ட மண்டியா மாணவி முஸ்கானை அல்கொய்தா அமைப்பின் தலைவர் பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறினார்.
Recommended Video
கர்நாடக மாநிலம் உடுப்பியில் ஹிஜாப் பிரச்சனை எழுந்தது. மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையே கல்வி நிறுவனங்களில் சீருடை முறையை பின்பற்ற கர்நாடக அரசு உத்தரவிட்டது.
ஹிஜாப் தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மாணவிகள் மனுத்தாக்கல் செய்தனர். மார்ச் 15ல் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு கர்நாடக அரசின் உத்தரவை உறுதி செய்தது.

மண்டியா மாணவி
முன்னதாக ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மாணவர்கள் கல்லூரிகளில் போராட்டங்களை நடத்தினர். பிப்ரவரி மாதம் 8 ம் தேதி மண்டியாவி்ல உள்ள தனியார் கல்லூரியில் ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது முஸ்கான் என்ற மாணவி முன்பு ‛ஜெய்ஸ்ரீராம்' என்று கோஷமிடப்பட்டது. இதையடுத்து அந்த மாணவி தனது கையை உயர்த்தி ‛அல்லாஹு அக்பர்' என பதில் கோஷமிட்டபடி நடந்து சென்றார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அல்கொய்தா தலைவர் பாராட்டு
இந்நிலையில் மாணவி முஸ்கானை பாராட்டி அல்கொய்தா அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி வீடியோ வெளியிட்டு இருந்தார். கவிதை நடையில் அவரை பாராட்டினார். முஸ்கான் ஒரு தைரியமான பெண், எங்கள் சகோதரி மிக முக்கியமான உயரத்தை அடைந்துவிட்டார். அல்லா அவருக்கான பரிசை வழங்குவார் என புகழ்ந்து பேசினார்.

நிரூபணம்-அமைச்சர்
இந்நிலையில் அல்கொய்தா தலைவரின் புகழ்ச்சி குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ‛‛ஹிஜாப் தொடர்பான பிரச்சனையின் பின்னணியில் வேறு யாரோ இருக்கிறார்கள் என ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் கூறிவந்தோம். ஏனென்றால் இந்த விஷயத்தை குழந்தைகள் இவ்வாறு கையாளமாட்டார்கள். ஹிஜாப் தொடர்பான தீர்ப்பின் போது உயர் நீதிமன்றமும் சில கண்ணுக்கு தெரியாத சக்திகள் இருப்பதாக சந்தேகித்தது. அல் கொய்தா சார்பில் வீடியோ வெளியிடப்பட்டு இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

விசாரணை, கண்காணிப்பு
இந்த சம்பவம் நடந்தது எப்படி, ஏதேனும் தொடர்பு ஏதேனும் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் கண்டுபிடித்து விடுவார்கள். இதுதொடர்பாக போலீசார் மற்றும் மத்திய, மாநில உள்துறை அமைச்சகங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன'' என்றார்.

மாணவியின் தந்தை கண்டிப்பு
முன்னதாக, முஸ்கான் கானின் தந்தை முகமது ஹூசைன் பேசும்போது, ‛‛அல்கொய்தா அமைப்பின் தலைவர் இப்படி பேசியது தவறு. அந்த வீடியோ பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. அவர் யார் என்பதும் தெரியாது. செய்தி பார்த்து தான் தெரிந்து கொண்டோம். அவர் பேசியது கூட புரியவில்லை. நாங்கள் இந்தியாவில் நிம்மதியாக இருக்கிறோம். சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகிறோம். அவருக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. அவர் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்'' என அல்கொய்தா அமைப்புக்கு கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications