ரூ.17 கோடிக்கு அடகு? சித்தராமையாவுக்கு கோலார் தொகுதி கிடைத்தது எப்படி? விட்டுகொடுத்த MLA பகீர்!
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவர்(காங்கிரஸ்) சித்தராமையா கோலார் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் தான் அந்த தொகுதியை சிட்டிங் எம்எல்ஏவான ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த சீனிவாச கவுடா விட்டு கொடுத்ததன் பின்னணியில் ரூ.17 கோடி பணம் தொடர்பான கதை உள்ளதாக அவரே ஒருவரிடம் போனில் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. இதுதான் தற்போது கர்நாடகா அரசியல்களத்தில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபை தொகுதி நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க பாஜக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. பாஜகவை தோற்கடித்து கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது.
இதுதவிர ஜனதாதளம்(எஸ்) மற்றும் ஆம்ஆத்மி கட்சிகளும் தங்களின் செல்வாக்கை நிரூபிக்க தயாராகி வருகின்றன. இதனால் அங்கு நான்கு முனை போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் பாஜக, காங்கிரஸ் இடையே தான் நேரடியான போட்டி இருக்கும்.

கோலாரில் போட்டியிடும் சித்தராமையா
இந்நிலையில் தான் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தான் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா தொகுதி மாறி போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தற்போது பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதி எம்எல்ஏவாக உள்ள அவர் வரும் தேர்தலில் கோலார் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த தொகுதியில் தற்போது ஜனதாதளம்(எஸ்) கட்சியின் சீனிவாசகவுடா 4வது முறையாக எம்எல்ஏவாக உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டிய நிலையில் சித்தராமையா போட்டியிட்டால் தொகுதியை விட்டு கொடுப்பதாக அறிவித்தார்.

காரணம் என்ன?
தற்போது சித்தராமையா போட்டியிடுவதாக அறிவித்த நிலையில் தேர்தலில் களமிறங்குவதில் இருந்து சிட்டிங் எம்எல்ஏ சீனிவாச கவுடான பின்வாங்கி உள்ளார். விரைவில் அவர் சித்தராமையாவை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். கோலார் சிட்டிங் எம்எல்ஏவின் ஆதரவு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் சித்தராமையின் குருபா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எஸ்சி, எஸ்டி உள்பட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அதிகம் இருக்கும் நிலையில் அவர்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதால் எளிமையாக ஜெயிக்கலாம் என சித்தராமையா நினைத்து களமிறங்கி உள்ளார்.

வெளியான ஆடியோ
இந்நிலையில் தான் தற்போது ஒரு ஆடியோ வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில் சீனிவாசகவுடா எம்எல்ஏ ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த சன்னகவுடாவுடன் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. அந்தவ ஆடியோவில் சன்னகவுடா, ‛‛வணக்கம் அண்ணா, வேமகல்லில் இருந்து சன்னகவுடா பேசுகிறேன். நீங்கள் ஏன் கட்சியில் இருந்து விலகுகிறீர்கள். இந்த முறை தொகுதியில் போட்டியிடாதது ஏன்?'' என கேள்வி கேட்கிறார்.

ரூ.17 கோடி விவகாரம்
அதற்கு சீனிவாசகவுடா எம்எல்ஏ, ‛‛கடந்த தேர்தலுக்காக ரூ.17 கோடி கடன் வாங்கினேன். அதனை இன்னும் திரும்ப கொடுக்கவில்லை'' என்கிறார். இதையடுத்து சன்னகவுடா, ‛‛நாங்கள் தான் உங்களுடன் இருக்கிறோம் அல்லவா'' என்கிறார். இதை கேட்ட சீனிவாசகவுடா, ‛‛ரூ.17 கோடி கடன் உள்ளது. உங்களால் எப்படி கடனை அடைக்க முடியும். எனக்கு எம்எல்சி பதவி மற்றும் அமைச்சர் பதவி வழங்குவதாகவும் சித்தராமையா கூறியுள்ளார். மேலும் தேர்தலுக்கு பிறகு நான் தான் தொகுதியில் சுற்றி வருவேன். இதனால் பயப்பபட வேண்டாம்'' என பேசியுள்ளார்.

பாஜக குற்றச்சாட்டு
தற்போது இந்த ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி சித்தராமையா விளக்கம் அளிக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது. சீனிவாச கவுடாவின் ரூ.17 கோடி கடன் காரணமாகும், பதவி ஆசை காட்டியும் அவரிடம் இருந்து சித்தராமையா கோலார் தொகுதியை கைப்பற்றி உள்ளதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது. இதுபற்றி சித்தராமையாவிடம் கேட்டபோது, ‛‛ஆடியோ தொடர்பாக எதுவும் தெரியாது'' என்றார். காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமார் கூறுகையில், ‛‛நாங்கள் இப்போது யாருக்கும் எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. அதற்கான தேவையும் இல்லை'' என கூறினார்.












Click it and Unblock the Notifications