முஸ்லிம் மாணவனை "தீவிரவாதி" எனக் கூறிய பேராசிரியர்.. வெடித்த சர்ச்சை.. பாய்ந்தது அதிரடி "ஆக்சன்"!
பெங்களூர்: பெங்களூரில் உள்ள கல்லூரி ஒன்றில் பயிலும் முஸ்லிம் மாணவனை 'தீவிரவாதி' எனக் கூறிய பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த நடவடிக்கையை கல்லூரி நிர்வாகம் எடுத்துள்ளது.
மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பேராசிரியரிடம் துறை ரீதியான விசாரணை நடந்து வருவதாகவும், அதன் முடிவில் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் வெறுப்பு
சமீபகாலமாகவே, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் சமூகத்தில் அதிகரித்திருப்பதை பார்க்க முடிகிறது. அனைத்து சமூகங்களிலும் தீயவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அதற்காக, அவர்கள் சார்ந்த ஒட்டுமொத்த சமூக மக்களையும் தீயவர்கள் என நினைப்பது அறிவிலித்தனம். அதுபோலவே, அனைத்து மதங்களிலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். இதற்கு எந்த மதமும் விலக்கு கிடையாது. ஆனால், ஒன்று இரண்டு பேர் செய்யும் தவறுக்காக இஸ்லாமியர்கள் அனைவரையும் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது மிகப்பெரிய தவறு. அனைத்துக்கும் மேலாக, சொந்த நாட்டு குடிமக்களையே அந்நாட்டுக்கு எதிரானவர்களாக சித்தரிப்பது மிகப்பெரிய கொடுமை. அப்படியொரு சம்பவம்தான் கர்நாடகாவில் நடந்துள்ளது.

"நீ ஒரு தீவிரவாதி"
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் மணிப்பால் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஒரு வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த பேராசிரியர் ஒருவர், சமூக விஷயங்கள் குறித்து விவாதிக்க ஆரம்பித்திருக்கிறார். அப்போது திடீரென அந்த வகுப்பில் படிக்கும் ஒரு முஸ்லிம் மாணவனை "நீ ஒரு தீவிரவாதி" என அவர் கூறியதாக தெரிகிறது.

விளாசிய மாணவன்
இதனால் கோபம் அடைந்த அந்த மாணவன், "எப்படி நீங்கள் என்னை தீவிரவாதி எனக் கூறலாம்? நீங்கள் ஒரு பேராசிரியர். அனைவரின் முன்னிலையிலும் நீங்கள் என்னை தீவிரவாதி எனக் கூறுகிறீர்கள். ஒரு முஸ்லிமாக இருந்துகொண்டு, தினம் தினம் இதுபோன்ற வெறுப்பு பேச்சுகளை எதிர்கொள்வது வேடிக்கையான விஷயம் அல்ல" எனக் கூறுகிறார். அதற்கு அந்த பேராசிரியரோ, "நீ எனது மகன் போல.." என்கிறார்.

சஸ்பெண்ட் - விசாரணை
இதற்கு பதிலளித்த அந்த மாணவன், "உங்கள் மகனிடம் இப்படிதான் பேசுவீர்களா? உங்கள் மகனை நீங்கள் தீவிரவாதி எனக் கூப்பிடுவீர்களா? அப்படி கூப்பிட்டால் அதுவும் தவறுதான். இது வகுப்பறை. நீங்கள் பாடம் கற்பிக்கிறீர்கள். நீங்கள் என்னை தீவிரவாதி என கூப்பிட்டிருக்க கூடாது" என கூறுகிறார். இந்நிலையில், இதனை மற்றொரு மாணவன் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட, சிறிது நேரத்திலேயே அந்த வீடியோ படு வைரலாக பரவி பெரும் சர்ச்சையை கிளப்பியது. விஷயம் பூதாகாரம் ஆனதை உணர்ந்த மணிப்பால் பல்கலைக்கழக நிர்வாகம், சம்பந்தப்பட்ட பேராசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. மேலும், அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.