அச்சம் வேண்டாம்.. கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வது எப்படி.. வழிகாட்டும் ஒரு குட்டி ஸ்டோரி!
சென்னை: கொரோனா.. எங்கோ சீன தேசத்தில் இருக்கும் ஒரு நோய் என்றுதான் முதலில் இந்த பெயர் அறிமுகமானது. சில மாதங்களில், இந்தியாவிலும் நோய் பரவுகிறது என்றார்கள். பன்றிக் காய்ச்சல் போல சீசனுக்கு வந்துவிட்டு போய்விடும் என்றுதான் நினைத்துக் கொண்டு இருந்தோம். நாடு முழுக்க லாக்டவுன் போட்டபோதுதான், ஓஹோ.. இது வேறு மாதிரி போல என்ற எண்ணம் தோன்றியது.
Recommended Video
ஆனால், எப்போதுமே அது செய்திகளில் கேட்கப்படும் நோயாக இருந்தததே தவிர, நமக்கெல்லாம் எங்கே வரப்போகிறது என்ற எண்ணம்தான், நம்மில் பெரும்பாலானோருக்கு இருந்திருக்கும். ஆனால் சொந்தக்காரர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என ஒவ்வொருவருக்காக கொரோனா தாக்கி, கடைசியில் நமக்கும் பாதித்தபோதுதான், திகைத்துப் போயிருப்போம்.

அதுவும் மருத்துவமனையில் படுக்கை வசதியே இல்லாதபோது பாதிப்பு ஏற்பட்டிருந்தால். அப்படியான நிலைமையில் நண்பருக்கு ஏற்பட்ட தடுமாற்றமும், அதிலிருந்து அவர் மீண்டு எழுந்ததும்தான் இப்போது உங்களுக்கு சொல்லப்போகும் சேதி. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அறிகுறிகளுடன் பாதிப்பை ஏற்படுத்துகிறது கொரோனா. எனவே இந்த அனுபவத்தையும் அறிந்து கொள்வது உங்களுக்கு வழிகாட்டுதலாக அமையக்கூடும்.
இதோ நமது நண்பரின் அனுபவம் அவரது வார்த்தைகளில் தருகிறோம், உங்களுக்கும் அவசர காலங்களில் உதவக் கூடும்:
ஆரம்பத்தில் தொண்டையில் லேசான கரகரப்பு. மாலை நேரத்தில் ரொம்பவே டயர்ட். அப்புறம் காய்ச்சல், இப்படித்தான் ஆரம்பித்தது அறிகுறி. வெயிலுக்கு இதமாக பிரிட்ஜ் வாட்டர் குடித்ததுதான் இதற்கு காரணமாக இருக்க கூடும் என்ற சந்தேகத்தில், பாராசிட்டமால் மாத்திரையை அவ்வப்போது எடுத்துக் கொண்டு ஒர்க் பிரம் ஹோம், செய்தபடியே இருந்தேன்.
ஆனால் மறுநாள், உடல் சோர்வு ரொம்பவே அதிகமாக இருந்தது. பகல் நேரத்திலேயே தூக்கம் கண்களை சொக்கியது. இதனால் வேலையில் வேகம் குறைந்தது. ஆனாலும் பாராசிட்டமாலும், தொண்டை கரகரப்புக்கு செரிகாப் என்ற சிரப்பும் குடித்தபடி வேலையை பார்த்தேன். ஆனால் மாலை 6 மணிக்கு தூக்கம், இரவு 9 மணிக்கு தூக்கம் என மாறி மாறி கண்களை சொக்கியது. இது இதுவரை இல்லாத அனுபவம் என்பது மட்டும் புரிந்தது.
கொரோனா நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்வார்களே என்ற நினைப்பிலும், ஆர்டிபிசிஆர் சோதனை செய்ய போனால் வேலை கெட்டுவிடுமே, அங்கு ரொம்ப நேரம் காத்திருக்கனுமே என்ற நினைப்பிலும் மாத்திரையை போட்டுக் கொண்டு வேலையை பார்த்துக்கொண்டே இருந்தேன். ஆனால் 5வது நாளும் இதே நிலைமை தொடர்ந்ததால் குடும்ப டாக்டரை பார்க்க சென்றேன். அவர் ஸ்டெதஸ்கோப் வைத்து பரிசோதித்து விட்டு நுரையீரல் கிளியராக இருக்கிறது. கொரோனா என பயப்பட வேண்டாம். ஆன்டி பயாட்டிக் எழுதி தருகிறேன் என நல்ல பவர்ஃபுல் டோஸ் கொடுத்தார். ஆனால் அதற்கும் கட்டுப்படவில்லை காய்ச்சல்.
டாக்டரிடம் 2 நாட்கள் கழித்து ஃபாலோஅப் செய்ய சென்றேன். அப்போதும் ஆக்சிஜன் அளவும், நுரையீரல் செயல்பாடும் திருப்திகரமாக இருப்பதாக கூறினார். அவர் நன்கு அனுபவமுள்ள டாக்டர் என்பதால் நானும் வீடு திரும்பினேன். ஆனால் முதல் அறிகுறி தோன்றிய 10வது நாள் நடக்கும்போது மூச்சு வாங்கியது. மாஸ்கை கழற்றினால்தான் மூச்சு விட முடியும் என்ற நிலை இருந்தது. மீண்டும் டாக்டரிடம் ஓடினேன். அவர் ஆக்சிஜன் அளவு நல்லா இருக்கு, ஆனா நுரையீரலில் தொற்று இருப்பதை போல தோணுது. எதற்கும் ஆர்டிசிபிஆர் அல்லது சிடி ஸ்கேன் எடுத்து பாருங்க என கூறிவிட்டார்.
10 நாட்களாக காய்ச்சல். இப்போ வந்து இப்படி சொல்கிறாரே. கொரோனா இல்லை என்று நினைத்து மெத்தனமாக இருந்துவிட்டோமே. எவ்வளவு பாதித்திருக்குமோ தெரியவில்லையே என்ற அச்சம் நெஞ்சை படபடக்க வைத்தது. இருப்பினும் ஆபீசில் லீவு எடுத்துக் கொண்டு, கூட்டமாக இருந்த ஒரு சிடி ஸ்கேன் மையத்தில் நாள் முழுக்க காத்திருந்து ஸ்கேன் எடுத்தேன். அப்போது கூட கொரோனாவாக இருக்காது என்ற எண்ணம்தான். ஆனால், நுரையீரலில் 36 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஸ்கேன் சென்டரில் கூறியபோது, தலையே சுற்றி விட்டது.
முதலிலேயே பார்த்திருந்தால், இந்த நிலைமை வந்திருக்காதே என்ற குற்ற உணர்வு துரத்தியது. அடுத்து என்ன செய்வது என்ற எண்ணம் தலைக்குள் ஓடியது. இதற்கு நடுவே, மூச்சு திணறல், காய்ச்சல், உடல் சோர்வு என பல உடல் உபாதைகளும் சேர்ந்து கொண்டது. பெரும்பாலானோர் இப்படியான நிலைமையை சந்தித்திருப்பீர்கள். உடல் அல்லது மனம் ஏதாவது ஒன்றாவது திடமாக இருப்பது நல்லது. ஆனால், கொரோனா பாதித்து தாமதமாக அதை அறியும்போது, நமக்கு இரண்டுமே பலவீனமாகியிருக்கும். ஆனால், எக்காரணத்தைக் கொண்டும், மனதிடத்தை மட்டும் கைவிட்டு விடாதீர்கள்.
முதலில் செய்ய வேண்டியது அலுவலக தலைமைக்கு தகவல் சொல்ல வேண்டியது. அதைத்தான் நானும் உடனே செய்தேன். அவர்களும் முழு ஒத்துழைப்பு தருகிறோம், பயப்படாதீர்கள் என்ற வார்த்தையை கூறினார்கள். அதுவே உங்களுக்குள் ஆயிரம் யானை பலத்தை கொடுத்துவிடும். அதன்பிறகு, எந்த மருத்துமனையில் சிகிச்சைக்கு சேருவது என ஓடிக்கொண்டே இருந்தது. வீட்டில் வந்து படுக்கையில் படுத்து ஓய்வு எடுத்தபடி யோசித்தேன். தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டால், பெட் இல்லை என பதில் மட்டுமே வந்தது. நேரிலேயே போய் விடலாம் என்று, அந்த நிலைமையிலும் முகக் கவசம் அணிந்தபடி, கிளம்பினேன். வாடகை வாகனம் நல்லதுதான். நமக்கு உடலுக்கு ஓய்வு கிடைக்கும். ஆனால், நம்மால் வாடகை வாகனத்தின் டிரைவருக்கு பரவி விடக்கூடாதே என்று மனசு கூறியது. எனவே, சொந்த வாகனத்தை கிளப்பியபடி முன்னணி மருத்துவமனைகள் சிலவற்றுக்கு நேரில் சென்று விசாரித்தேன். ஆனால் இப்படியெல்லாம் வராதீர்கள், மாநகராட்சி கூறினால்தான் படுக்கை ஒதுக்கீடு எனக் கூறி அனுப்பி விட்டனர். அதற்குள்ளாக உடலில் சோர்வு மேலும் அதிகரித்தது. இதற்குமேல் முடியாது என வீட்டில் வந்து படுத்துவிட்டேன்.
எந்த மாத்திரை சாப்பிட வேண்டும் என்பது பற்றி எந்த வழிகாட்டுதலும் மாநகராட்சியிடமிருந்து கிடைக்கவில்லை. எனவே பாராசிட்டமாலும், சத்து மாத்திரையையும் மட்டுமே சாப்பிட்டு செய்வதறியாது விழிக்க வேண்டியதாயிற்று. நுரையீரலில் தொற்று அதிகமாக இருப்பதுதான் ஒரே பயமாக இருந்தது. தொற்று குறைவாக இருந்தாலாவது, வீட்டிலேயே காய்ச்சல் மாத்திரையை சாப்பிட்டு காலம் கடத்தலாம். இப்போது அது முடியாது. படுக்கை வசதியும் இல்லை. ஆனால் தளரவில்லை. தொடர்ந்து மாநகராட்சிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். நள்ளிரவு நேரத்தில் ஒரு நல்ல மனிதர் போனை எடுத்தார். ஒரு ஆஸ்பத்திரி பெயரை கூறி அங்கே இடமிருக்கிறது, ஆம்புலன்ஸ் அனுப்புகிறேன், சேர்ந்து கொள்ளுங்கள் என்றார். அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன். ஆடைகளை எடுத்து ஆயத்தமானேன்.
2 மணி நேரம் கழித்து அதிகாலை 2 மணிக்கு மாநகராட்சி அனுப்பிய வாகனம் வந்தது. அதில் ஏறி ஆசுவாசமாக உட்கார்ந்து கொண்டேன். இனி அதாவது, 12 நாள் கழித்துதான் கொரோனாவுக்கு முதல் சிகிச்சையே ஆரம்பிக்க போகிறார்கள். இதுவரை ஆக்சிஜன் அளவு 93க்கு கீழே போகவில்லை, எனவே தப்பித்து விடலாம் என்று மனசு உற்சாகமூட்டியது. ஆனால் மாநகராட்சி ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட ஆஸ்பத்திரியில் சென்று இறக்கிவிட்டபிறகுதான் தெரிந்தது, இதற்கு வீட்டிலேயே இருந்திருக்கலாம் என்று.
ஆம்.. அங்குதான் நமக்கு அடுத்த டாஸ்க். படுக்கை வசதி, டிவி வசதியுடன் கூடிய மருத்துவமனையில் சிகிச்சை என்று நினைத்து சென்ற எனக்கு, அங்கே திருமண மண்டபம் மாதிரியான ஒரு இடத்தில் 100 பேருக்கு 2 நர்ஸ் மட்டுமே உள்ள சிகிச்சை மையம் என்பது அப்போதுதான் புரிந்தது. அதில் சிலர் என்னை விட மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தனர். படுக்கைகளுக்கு இடையே துணி கூட போடப்படவில்லை. யாரிடமிருந்து யாருக்கு தொற்று பரவுமோ என்ற அச்ச சூழ்நிலை. தண்ணீர் கேட்டால் கூட முகத்தை திருப்பிக் கொண்டு சென்றார் இருந்த ஒரு நர்சும்.
படுக்கையில் விரிப்பு இல்லை, தலையணை இல்லை. ஒரு மாத்திரை கூட தராமல் கடந்தது இரவு. காலை 6 மணிக்கெல்லாம் விழிப்பு வந்தது. அப்போதும் தண்ணீர் தரவில்லை. மாத்திரையும் இல்லை. கேஜிஎப் திரைப்படத்தில் சுரங்கத்திற்குள் மாட்டிக் கொண்ட அப்பாவிகள் போல என்னையும் சேர்த்து அத்தனை பேரும் காட்சியளித்தோம். நுரையீரல் பாதிப்பு இருக்கும் நிலையிலும், மாத்திரை கூட தராத ஒரு இடத்திலா வந்து மாட்டினோம் என மனசு துடிதுடித்தது. இப்படியே இருந்தால் நமது நிலை என்னவாகும் என்ற எண்ணம் அலைமோதியது.
அரசிடம் கணக்கு காட்டிவிட்டு, அந்த பணத்தை வாங்கி பையில் போடும் மருத்துவமனை இது என்பதை புரிந்து கொள்ள வெகு நேரம் பிடிக்கவில்லை எனக்கு. அடுத்து என்ன.. இங்கே இருக்க கூடாது.. தப்பிக்க என்ன வழி.. இதுதான் ஓடிக்கொண்டே இருந்தது. அலுவலக உயரதிகாரியை தொடர்பு கொண்டேன். நிலைமையை கூறினேன். எப்படியாவது ஒரு மருத்துவமனையில் படுக்கை வசதி வேண்டும் என்றேன். எப்படி சிக்கியுள்ளேன் என்பதை அவரும் புரிந்து கொண்டார். தீவிரமாக தனது தொடர்புகள் அனைத்தையும் முடுக்கிவிட்டார். அப்படித்தான் அங்கிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு மருத்துவமனையில் ஒரு படுக்கை காலியாக இருப்பது தெரியவந்தது.
அப்பாடா.. என்று கூறி பேக்குடன் கிளம்பினால் வாசலிலேயே மறித்தனர் காவலாளிகள். அப்படியெல்லாம் போக முடியாது. 3 நாள் இருந்தால்தான் அரசு பணம் தரும் இல்லை என்றால் நீங்கள்தான் தர வேண்டும் என்றனர். இந்த கொடுமை வேறா.. தாமதித்தால் அங்கேயுள்ள ஒரு படுக்கையும் போய் விடுமே என்ற எண்ணம். உயிர் காப்பதுதான் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்ற எண்ணம். இவை அனைத்தும் சேர்ந்து பணம் தர சம்மதித்தேன். தண்ணீரே தராதவர்கள், பணத்திற்கு ரசீது மட்டும் உடனே தருவார்களா. 2 மணி நேரம் தாமதம் செய்தனர். எப்படியோ அங்கேயிருந்து வெளியே வந்தபோது சுதந்திர காற்றை சுவாசித்தது போல இருந்தது.
வேறு வழியில்லாததால் ஒரு வாடகை காரை பிடித்துக் கொண்டு, அடுத்த மருத்துவமனைக்கு கிளம்பினேன். டிரைவருக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக மூச்சு மூக்கு வரை நன்கு மாஸ்கை இழுத்துவிட்டு பின் சீட்டின் ஒரு மூலையில், ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டு முகத்தை அங்கே வைத்துக் கொண்டேன். அடுத்த ஒன்றரை மணி நேரத்தில், அலுவலக அதிகாரி கூறிய மருத்துவமனை வந்தது. நல்லவேளையாக மருத்துவமனை கோட்டாவிலுள்ள அந்த பெட்டை பிடித்து வைத்திருந்தார்கள். அங்கே படுத்ததுதான் தெரியும். அப்படியே நம்மை அவர்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். அதுவரை பட்ட அவஸ்தைகள் கானல் நீராக கலைந்துபோனது. கொரோனாவுக்கான ஒரிஜினல் சிகிச்சை அப்போதுதான் ஆரம்பித்தது.
பயப்படாதீர்கள், 36 சதவீத தொற்றுதான், உங்களுக்கு இணை நோய் இல்லை எனவே அச்சப்படாமல் இருங்கள் என டாக்டர்கள் கூறினர். சிகிச்சை ஆரம்பித்து ஒரு நாள் கழித்துதான் காய்ச்சல் விட்டது. அதாவது சுமார் 12 நாள் கழித்துதான் காய்ச்சல் விட்டது. எனக்கு கவலையும் விட்டது. 5 நாட்கள் அங்கேயே சிகிச்சை. அனைத்து வகை சிகிச்சையும் அளித்தார்கள். ஆக்சிஜன் தேவையில்லை என்றபோதிலும் ரெம்டெசிவிர் தேவைப்பட்டது. அதன்பிறகுதான் உடலில் கூடுதல் தெம்பு கிடைத்தது. 5 நாள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினேன். ஒரு மாதமாக இருமல் இருந்தபோதிலும், காய்ச்சல் அல்லது மூச்சு திணறல் கிடையாது. தொற்று குணமாகிவிட்டது என்பதற்கான அறிகுறி என்றனர் டாக்டர்கள். அதேநேரம், லேசான இருமல், முன்பு போல துரிதமாக வேலை பார்க்க முடியாத சிறு பலக்குறைவு இருக்கத்தான் செய்கிறது.
அவித்த முட்டையின் வெள்ளைக் கரு, கொண்டைக் கடலை வேக வைத்தது, பப்பாளி, அன்னாசி போன்ற உடலுக்கு சூடு கொடுக்கும் பழங்களின் ஜூஸ் தினமும் எடுக்கலாம். ஜீரணத்தில் பிரச்சினை இல்லை என்றால் ஆட்டுக்கால் சூப் வாரத்திற்கு ஒருமுறையாவது குடிக்கலாம். தொற்று ஏற்பட்டு இத்தனை நாட்களாகியும், மருத்துவமனைகளுக்கு அலைந்து திரிந்தாலும், மன தைரியத்தை கைவிடாமல் இருங்கள். அப்படி இருந்தால், நல்லவர்கள் உதவியுடன் நீங்கள் மீண்டு எழுவீர்கள் என்பதற்கு எனது ஸ்டோரியே ஒரு நல்ல எடுத்துக் காட்டு. அலட்சியம் வேண்டாம், அதே நேரம், அச்சமும் வேண்டாம். ஆரம்பத்திலேயே பார்த்து தக்க வழிகாட்டுதல்களை பெற்று, இந்த பிரச்சினையிலிருந்து அனைவரும், மீண்டு எழுவோம்.
உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ, நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ, கொரோனா பாதித்து அவர்கள் அதை எப்படி சமாளித்து மீண்டார்கள் என்பதை நீங்கள் தெரிவிக்கலாம். [email protected] என்ற மெயில் ஐடிக்கு உங்கள் அனுபவத்தை அனுப்புங்கள். போட்டோ, வீடியோ இருந்தாலும் அனுப்பலாம். உங்கள் அனுபவம், இன்னொருவருக்கு வழிகாட்டி எனப்தை மறக்காதீர்கள்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications