ட்விஸ்ட்.. அம்மா, அப்பா, தங்கை, பாட்டி சுட்டுக்கொலை.. வாக்குமூலத்தில் மகன் சொன்ன பகீர் காரணம்!
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் 20 வயது இளைஞர் தனது அம்மா, அப்பா, தங்கை, பாட்டி என்று மொத்த குடும்பத்தையும் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மிகவும் சிக்கலான இந்த வழக்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோஹ்டாக் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி ரோஹ்டாக் பகுதியில் வசித்து வரும் பிரதீப் மாலிக், அவரின் மனைவி பாப்லி மாலிக், மகள் நேஹா மற்றும் பாட்டி ரோஷினி ஆகியோர் வீட்டு அறையில் துப்பாக்கியால் சுடப்பட்டு பிணமாக கிடந்தனர்.
பார்ட்டிக்கு சென்றுவிட்டு திரும்பிய மகன்.. மொத்த குடும்பமும் இறந்து கிடந்ததை போலீசுக்கு தகவல் கொடுக்கவே, போலீசார் இதை கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் முதலில் பிஸ்னஸ் பிரச்சனை காரணமாக கொலை நடந்து இருக்கலாம் என்று செய்திகள் வந்தது.

என்ன நடந்தது
இந்த வழக்கில் முதலில் கொலைக்கு யாரெல்லாம் காரணமாக இருக்க வாய்ப்புள்ளது என்று போலீசார் லிஸ்ட் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். உயிரோடு இருந்த மகன் அபிஷேக் மாலிக்கிடம் இந்த கொலை தொடர்பாக அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பி வந்துள்ளனர். தொடக்கத்தில் இருந்தே அபிஷேக் இதில் மாறி மாறி வாக்குமூலம் அளித்த காரணத்தால் போலீசார் சந்தேகம் அடைந்து அவரிடம் மேலும் விசாரணை நடத்தி உள்ளனர்.

விசாரணை
இவர் மீது சந்தேகம் வரவே அபிஷேக் கொலை நடந்த அன்று என்ன செய்தார் என்பதை கண்டுபிடிப்பதற்காக சிசிடிவி காட்சிகளை சோதனை செய்துள்ளனர். இதில் அபிஷேக் கொலை நடந்த போது வீட்டிற்கு உள்ளேயே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அவர் பார்ட்டிக்கு சென்று திரும்பியதாக சொன்னது பொய் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர்.

உண்மை
இந்த விசாரணையில் அபிஷேக் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். குடும்பத்தோடு இருந்த பண ரீதியான பிரச்சனை காரணமாக கொலை செய்ததாக அபிஷேக் குறிப்பிட்டார். அப்பாவிடம் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டதாகவும். இதை கொடுக்கவில்லை என்றதும் கொலை செய்ததாகவும் அபிஷக் குறிப்பிட்டார். ஆனால் அப்போதே இந்த கொலைக்கு இது காரணமாக இருக்காது, இதற்கு பின் வேறு காரணம் இருக்கலாம் என்று போலீஸ் சந்தேகித்தது.

திருப்பம்
இதனால் தொடர்ந்து அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரித்தனர். அவரின் நண்பர்களிடமும் விசாரித்தனர். இந்தநிலையில்தான் வழக்கில் பெரிய திருப்பம் ஏற்பட்டது. போலீஸ் சந்தேகப்பட்டது போலவே இந்த கொலைக்கு உண்மையான காரணம் பணம் கிடையாது என்று வாக்குமூலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி அபிஷேக் டெல்லியில் விமான நிலையத்தில் வேலை பார்ப்பதற்காக கோர்ஸ் ஒன்றை படித்து வந்துள்ளார். அங்கு படித்த சக மாணவருடன் தன் பாலின உறவில் அபிஷேக் இருந்துள்ளார். அந்த நபரின் பெயரையும் தனது நெஞ்சில் பச்சை குத்தி இருக்கிறார்.

திருப்பம் கொலை
இந்த விஷயம் குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது. இந்த ஒருபாலின காதலை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. பச்சை குத்தியதை அழித்துவிட்டு வீட்டுக்கு வா.. இல்லையென்றால் வராதே என்று குடும்பத்தினர் கூறி உள்ளனர். இதனால் சில நாட்கள் ஹோட்டலில் தங்கி இருந்த அபிஷேக் கோபம் குறையாத நிலையில் வீட்டிற்கு வந்து குடும்பத்தில் எல்லோரையும் சுட்டுக் கொன்று இருக்கிறார்.

போதை
இந்த கொலையை செய்த போது அபிஷேக் போதையில் இருந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வீட்டில் உள்ளவர்களுடன் பேச வருவது போல வந்த அபிஷேக், அப்பாவின் லைசன்ஸ் பெற்ற துப்பாக்கியை எடுத்து சரமாரியாக வீட்டில் இருந்த எல்லோரையும் சுட்டுக்கொன்று இருக்கிறார். இவரை கைது செய்த போலீசார் தற்போது கோர்ட்டில் ரிமாண்ட் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications