சென்னையில் ஷாக்.. தனியார் மீன் குடோனில் 200 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்..அதிகாரிகள் எச்சரிக்கை
சென்னை: சென்னை சிந்தாதிரிபேட்டை தனியார் மீன் குடோனில் விற்பனைக்கு அனுப்ப இருந்த 200 கிலோ கெட்டு போன மீன்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரசாயன மருந்து தெளித்த மீன்கள் அல்லது கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். கடையின் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகாரிகள் ஆய்வு
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கே.கே.எஸ். அன் கோ என்ற தனியாருக்கு சொந்தமான மீன் குடோனில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அந்த குடோனில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த மீன்களை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது அவை அனைத்தும் கெட்டுப்போன மீன்கள் என்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

200 கிலோ மீன்
பல நாட்களுக்கு முன் பதுக்கி வைக்கப்பட்டு, கெட்டுப்போன அந்த மீன்களை ரசாயன மருந்து தெளித்து விற்பனைக்கு அனுப்ப முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 200 கிலோ அளவுக்கான அந்த மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் கெட்டுப்போன மீன்களை ஓரிடத்தில் போட்டு அழித்தனர். ''மீன் வியாபாரிகள் ரசாயன மருந்து தெளித்து அல்லது கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்யக்கூடாது.

அதிகாரிகள் எச்சரிக்கை
நல்ல தரமான மீன்களை மட்டுமே மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.ரசாயன மருந்து தெளித்த மீன்கள் அல்லது கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். கடையின் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற தரமற்ற மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று காசிமேடு, நொச்சிக்குப்பத்தில் உள்ள தனியார் குடோன்களிலும் ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் கோரிக்கை
''எந்த வயதினரும் சாப்பிடக்கூடிய அசைவ உணவுகளில் மீன் மிகவும் முதன்மையானதாகும். உடலுக்கு வலு சேர்க்கக்கூடிய பல்வேறு சத்துக்கள் மீனில் உள்ளன. எனவே கெட்டுப்போன மீனை விற்பனை செய்து மக்களின் உயிருடன் விளையாடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இதேபோல் தனியார் மீன் குடோன்களில் அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும்'' என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடல்நல பாதிப்புகள் என்ன?
''பொதுவாகவே கடல் மீன்களில்தான் ஃபார்மலின் என்னும் ரசாயணம் கலக்கப்படுகிறது. ஆற்று மீன், குளத்து மீன்கள் அன்றைக்கே விற்பனை செய்யப்படுவதால் ஃபார்மலின் கலக்கப்படுவதில்லை. உணவுப் பொருட்களில் ஃபார்மலினை பயன்படுத்தினால் புற்றுநோய் அபாயம் உண்டு என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது. மேலும், கண்களில் எரிச்சல், தோலில் எரிச்சல், தொண்டை எரிச்சல், வயிற்றெரிச்சல், குமட்டல், வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்'' என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications