ஷூவில் மறைந்திருந்த நாகப்பாம்பு! உங்க ஏரியாவில் கனமழை விடாமல் பெய்யுதா? இதை தவறாமல் படியுங்கள்
சென்னை: நாடு முழுவதும் பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. இதனால் மனிதர்கள் மட்டுமல்லாது கால்நடைகள், இதர ஊர்வன உயிரினங்களும் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளன. இந்நிலையில், ஷூ-க்குள் நாகப்பாம்பு ஒன்று பதுங்கியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குஜராத் தொடங்கி அசாம் வரையிலும், மகாராஷ்டிரா தொடங்கி தெலங்கானா, தமிழ்நாடு வரையிலும் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

வெள்ளம்
ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. ஒருபுறம் விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டாலும் மழை தொடர்வதால் அவர்களும் கவலையடைந்துள்ளனர். இதனால் மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பை சந்தித்து வருகிறது. மனிதர்கள் மட்டுமல்லாமல் கால்நடைகளும் இந்த கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. சமீபத்தில் ஒடிசா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.

பாம்பு
இதில் எதிர்பாராத விதமாக சிக்கிக் கொண்ட யானையும் அதன் பாகனும் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் கரை சேர்ந்தனர்.ஆனால் ஆடு, மாடு உள்ளிட்ட இதர கால்நடைகளுக்கு இதுபோன்ற நல்வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி 125 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. ஆக அதீத மழை அனைத்து உயிரினங்களின் வாழ்வாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வனச்சரக அதிகாரியான சுசாந்தா நந்தா டிவிட்டரில் சமீபத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் வீட்டு வாசலில் இருந்த ஒரு ஷூவில் நாகப்பாம்பு பிடிபட்டது காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

பருவமழை
பொதுவான பருவமழை காலங்களில் ஊர்வன வகை உயிரினங்கள் பாதுகாப்பான மற்றும் கதகதப்பான இடங்களுக்கு புலம் பெயர்வது இயல்பானது. அந்த வகையில் இந்த பாம்பு ஷூவில் பதுங்கி இருந்துள்ளது. நல்வாய்ப்பாக இதை வீட்டிலிருந்தவர்கள் முன்னமே பார்த்து எச்சரிக்கையடைந்துள்ளனர். பின்னர் தொழில்முறை பாம்பு பிடிப்போரை வரவைத்து அந்த நாகப்பாம்பை லாவகமாக பிடித்து வெளியேற்றியுள்ளனர்.

வீடியோ
இந்த வீடியோவின் கீழ், "பருவமழை காலங்களில் கவனமாக இருங்கள். நீங்கள் நினைத்து பார்க்காத இடங்களில் கூட ஊர்வன உயிரினங்களை காண்பீர்கள். எனவே இதை கையாள உரியவர்களை அணுக வேண்டும்" எனவும் குறிப்பிட்டு வீடியோவை போஸ்ட் செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு பயனர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications