• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வெளுக்குது வெயிலு.. அதுக்கு இதமா ஒரு ஃபிளாஷ்பேக்.. ஹீரோயின் சிலுக்கு!

|

கொரோனா ஒரு பக்கம் கொன்னு எடுக்குது, வெயில் மறுபக்கம் வெளுத்து வாங்குது, பங்குச் சந்தை படுத்தே விட்டது இத்தனை கொடுமைகளுக்கு மத்தியில் என்னத்த வாழ்ந்து, என்னத்த சாதிச்சு என்று சில நேரங்களில் வாழ்க்கையே வெறுத்துவிடுகிறது. இப்படி பதைபதைக்க வைக்கும் செய்திகளுக்கு நடுவில் திடீரென மயக்கும் போதை விழிகளுடன் சில வாட்ஸ் அப் குரூப்புகளில் கண்ணில் பட்டார் நம்ம தென்னகத்து மர்லின் மன்றோ சில்க் ஸ்மிதா.

சில்க் வாழ்ந்த காலம் அன்றைய இளைஞர்களுக்கு எத்தனை வண்ணமயமாக இருந்தது என திடீரென ஒரு ஃபிளாஷ்பேக் தோன்றி, இன்றைய கவலைகளை எல்லாம் மறக்கடிக்க வைத்தது. அந்த ஃபிளாஷ்பேக்கின் விளைவுதான் இந்த கட்டுரை. ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு பல விஷயங்கள் தேவைப்படும். ஆனால் இவரது ஒரே நடனம் இருந்தால் போதும், அந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என தமிழ் சினிமா நம்பிய காலம் உண்டு. அந்த நடிகைக்காக தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் எல்லாம் தவம் கிடந்த நாட்களும் உண்டு.

அன்றைய உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் கூட, இவருடைய ஒரு பாடல் காட்சி, தங்கள் படத்தில் கட்டாயம் தேவை என எதிர்பார்த்திருந்தனர்.

விலைபோகாமல் பெட்டியில் தூங்கிய பல படங்கள் இவரது ஒரே ஒரு பாடலை இணைத்ததால் வெற்றிப் படங்களாக மாறின. அந்தளவிற்கு 90 –களில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தேவையாக விளங்கினார்…. நடிகை சில்க் ஸ்மிதா.

பாதி கடிச்ச ஆப்பிள்

பாதி கடிச்ச ஆப்பிள்

ஒருமுறை ஷுட்டிங் ஸ்பாட்டில் சில்க் கடித்துவிட்டு மிச்சம் வைத்திருந்த ஆப்பிள் துண்டு, பல ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனதாக செய்திகளும் உண்டு. அதுபோலவே சில்க் உட்கார்ந்த நாற்காலியும் பல ஆயிரம் ரூபாய்க்கு விலைபோனதாக பரபரப்பான பேச்சுக்களும் உண்டு. ஆந்திராவை பிறப்பிடமாகக் கொண்ட விஜயலட்சுமிக்கு சிறு வயதிலேயே திருமணம் ஆனது. தொடர்ந்து பல கசப்பான அனுபவங்கள். கட்டிய கணவனுக்குக் கொஞ்ச நாளிலேயே கசந்துபோனார். வறுமையும், பிரச்சனைகளும் துரத்த, பிழைப்பு தேடி சென்னை வந்தார். மேக்கப் கலைஞராக சினிமா உலகில் நுழைந்த விஜயலட்சுமி, நடிகர் வினு சக்கரவர்த்தியின் கண்ணில் பட்டார்.

கண்கள் பவர்

கண்கள் பவர்

போதையேற்றும் விஜயலட்சுமியின் கண்கள், வினு சக்கரவர்த்தியைக் கவர, அவர் மூலம் `வண்டிச்சக்கரம்` படத்தில் சாராயக்கடையில் வேலை பார்க்கும் சிலுக்கு என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார். சாராயத்தைக் குடிக்காமல், அதை ஊற்றித்தந்த சிலுக்கைப் பார்த்ததிலேயே பலருக்கும் போதை ஏறியது. படமும் சூப்பர் ஹிட் ஆனது. விஜயலட்சுமி, சில்க் ஸ்மிதா ஆனார். வெற்றிப் பயணம் தொடங்கியது. தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் வாய்ப்புகள் குவியத் தொடங்கின. காலையில் சென்னை, பிற்பகலில் பெங்களூரு, இரவில் மும்பை என பறந்துகொண்டே இருந்தார் சில்க்.

 சில்க்குக்கு வந்த சிலிர்ப்பு

சில்க்குக்கு வந்த சிலிர்ப்பு

‘'சென்னைக்கு வந்த புதிதில் சைக்கிள் ரிக்‌ஷாவில் போகக் கூட காசு இல்லை. ஆனால் இன்னைக்கு ஒரே நாளில் 3 முறை விமானத்தில் பறக்கிறேன் ''- ண்ணு சில்க் ஒருமுறை இது பற்றி சிலிர்ப்புடன் சொல்லியிருக்கிறார். குறுகிய காலத்தில் 450 படங்களுக்கு மேல் நடித்தார் சில்க் ஸ்மிதா. ஆனால் சினிமா உலகம் ஒரு கவர்ச்சிப் பொருளாகத்தான் அவரைப் பயன்படுத்தியது. கவர்ச்சியைத் தாண்டி சில்க்கிடம் அபாரமான நடிப்புத் திறனும் இருந்ததை சினிமா உலகம் முழுமையாகக் கண்டுகொள்ளவில்லை.

கவர்ச்சி முத்திரை

கவர்ச்சி முத்திரை

‘அலைகள் ஓய்வதில்லை', ‘நீங்கள் கேட்டவை', ‘தாலாட்டு கேட்குதம்மா', ‘மூன்றாம் பிறை' போன்ற படங்களில் சிறந்த குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் சில்க். ஆனால் சில்க் மீது குத்தப்பட்ட கவர்ச்சி முத்திரைக்கு முன்பு இதெல்லாம் எடுபடாமல் போய்விட்டது.

புகழின் உச்சியில் இருந்த சில்கை, ஆணவம் பிடித்தவர், அகங்கார மனப்பான்மை கொண்டவர் என பத்திரிகைகள் வர்ணித்ததுண்டு. ஆனால் தேடிய பொருளை தான் மட்டும் அனுபவிக்காமல் உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு வாரி இறைத்தவர் சில்க் என்கிற உண்மை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எளியவர்கள் மீது மிகவும் பரிவு கொண்டவர் சில்க் ஸ்மிதா.

நக்சலைட் ஆக வேண்டும்

நக்சலைட் ஆக வேண்டும்

ஒருமுறை செய்தியாளர் ஒருவர் சில்க்கிடம், ‘'உங்களது நிறைவேறாத ஆசை என்ன'' என்று கேட்டார். அதற்கு சில்க் சொன்ன பதில் என்ன தெரியுமா?

''ஒரே ஒரு ஆசைதான். நான் ஒரு ‘நக்சலைட்' ஆக வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் அது நடக்கவில்லை'' என்றார். இப்படியொரு பதிலை சில்க்கிடமிருந்து எதிர்பார்க்காத செய்தியாளர் கொஞ்சம் நக்கலாக ‘' நக்சலைட் என்றால் யார், அவர்களின் பின்னணியெல்லாம் தெரியுமா'' என்றார்.

அடுத்த 10 நிமிடங்களுக்கு சில்க் சொன்ன கருத்துக்கள், அவரது இன்னொரு பக்கத்தை படம் பிடித்தது. சமூகப் பிரச்சனைகள் பற்றிய அவரது சரியான புரிதலையும் வெளிப்படுத்தியது. ‘'கஷ்டப்படும் ஏழைகளை அரசாங்கம் கைதூக்கி விடணும். வாழ்க்கையே கேள்விக்குறியானால் அவங்க போராடாமல் என்ன செய்வாங்க'' என்கிற சில்க் கேட்ட கேள்வி, சம காலத்திற்கும் பொருந்தும்.

சில்க் தொட்ட உச்சம்

சில்க் தொட்ட உச்சம்

சினிமாவில் உச்சம் தொட்ட சில்க் ஸ்மிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏகப்பட்ட சோகங்கள். படங்களுக்கு நிதியுதவி செய்ததில் பெருத்த நஷ்டம். சில்க் ஈட்டிய பணத்தின் மீது மட்டும் குறியாக இருந்த உறவுக் கூட்டம், ஒரு கட்டத்தில் அதை மொத்தமாக சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்தது. ஆபாச நடிகை என்னும் முத்திரை, சில்க் ஸ்மிதாவை ஒழுக்கமற்ற வாழ்க்கை வாழ்பவராகச் சித்திரித்தது. கை கொடுப்பதாகச் சொன்ன காதலரும், கடைசியில் துரோகம் செய்ய... நொந்துபோன சில்க் அந்த விபரீத முடிவுக்கு வந்தார்.

கடைசியில் தற்கொலை

கடைசியில் தற்கொலை

1996ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி சென்னையில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு இறந்தார். கவர்ச்சி நாயகியாக ஆராதிக்கப்பட்ட சில்க் ஸ்மிதா, தூக்கில் தொங்கியபடி இறந்துகிடந்த காட்சி, அவலத்தின் உச்சம்! சில்க்கை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாகவும் செய்திகள் கசிந்தன. ஆனால் தற்கொலைதான் என அடித்துச் சொன்னது போலீஸ். நடிகைகள் உள்ளிட்ட சினிமா கலைஞர்களை நட்சத்திரங்கள் என்கிற அடைமொழியுடனேயே அழைக்கிறோம். பெயருக்கு ஏற்றார்போல பல நடிகைகளின் வாழ்க்கை, மின்னல் வேகத்தில் மின்னி மறைந்துவிடுகிறது. ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, கோழி கூவுது விஜி என ஒரு நீண்ட பட்டியல் உண்டு.

இதில் சில்க் ஸ்மிதா தனித்துவமானவர். இறந்து 24 ஆண்டுகள் ஆகியும் இன்றைக்கும் கூகுள் தேடலில் பல நேரங்களில் சில்க் ஸ்மிதா முன்னணி இடத்தில் இருப்பது, மறைந்தும் மங்காத அவரது கவர்ச்சிக்கு சரியான உதாரணம்!

என்ன சொல்லுங்க.. சிலுக்கு.. சிலுக்குதான்..!

-கௌதம்

 
 
 
English summary
Silk Smitha is an actress woth special talents compared with her contemporaries.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X