’எதற்கும் துணிந்தவன்’ சூர்யாவை ஏன் மிரட்டுறீங்க? என்ன பிரச்சனை? பாமக மீது பாயும் சிபிஎம்
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள ‛எதற்கும் துணிந்தவன்' படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்ததாக பாமகவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநில மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செயலில் ஈடுபடுவதை பாமக நிறுத்திக் கொள்ள வேண்டும்'' என கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு ஜெய்பீம் படம் வெளியானது. இந்த படம் வன்னியார்களுக்கு எதிராக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் படம் உருவாக்கப்பட்டுள்ளது என கூறியிருந்தார். இதற்கு நடிகர் சூர்யாவும் அவருக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அறிக்கையில் தனிநபரையும், எந்த சமுதாயத்தையும் அவமதிக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என தெரிவித்திருந்தார்.

எதற்கும் துணிந்தவனுக்கு எதிர்ப்பு
இருப்பினும் தொடர்ச்சியாக நடிகர் சூர்யாவுக்கு பாமகவைச் சேர்ந்த சிலரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சூர்யா நடிப்பில் வெளியாக இருந்த எதற்கும் துணிந்தவன் படத்துக்கு தடை விதிக்க கோரி பாமக நிர்வாகி சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வன்னியர் மக்களிடம் சூர்யா மன்னிப்பு கேட்காதவரை படத்தை தியேட்டர்களில் வெளியிட அனுமதிக்க கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கும் பாமக தலைமைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாமக தலைமை வட்டாரத்தில் தெரிவித்தாலும், இது பாமகவின் எதிர்ப்பாக்க பிம்பிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சூர்யா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாமகவுக்கு கண்டனம்
இதனிடையே, சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படம் இன்று தியேட்டர்களில் வெளியானது. படம் வெளியாகும் தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாமகவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது: திரைக்கலைஞர் சூர்யா உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள "எதற்கும் துணிந்தவன்" என்ற திரைப்படம் 10.3.2022 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாமகவை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள திரையரங்கு உரிமையாளர்களை சந்தித்து நடிகர் சூர்யா நடித்துள்ள இந்தப் படத்தை திரையிடக்கூடாது என கடிதம் கொடுத்து மிரட்டி வருகின்றனர்.

தேவையற்ற பதற்றம்
நடிகர் சூர்யா ஜெய்பீம் என்ற சிறந்த திரைப்படத்தில் நடித்ததோடு அந்தப் படத்தையும் தயாரித்து வெளியிட்டிருந்தார். இந்தப் படம் வெளியானபோது பாமகவினர் பல்வேறு வகையான மிரட்டல்களை விடுத்தனர். எந்தவொரு தனிப்பட்ட பிரிவினரையும் இழிவுபடுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லையென படத்தின் இயக்குநர் தெளிவுபடுத்திவிட்டார். நடிகர் சூர்யாவும் உரிய விளக்கமளித்தார். ஆனாலும், சூர்யா பகிரங்க மன்னிப்புக் கேட்கும் வரை அவர் தொடர்புடைய எந்தத் திரைப்படத்தையும் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என பாமகவினர் மிரட்டுவது கலைச் சுதந்திரத்திற்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் எதிரானது. தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நோக்கமுடையது.

பாமக நிறுத்த வேண்டும்
ஜெய்பீம் திரைப்படக் கலைஞர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு விழா நடத்தி ஊக்குவித்தது. இத்தகைய திரைப்படங்கள் மென்மேலும் வரவேண்டியது காலத்தின் தேவையாகும். இந்நிலையில், சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செயலில் ஈடுபடுவதை பாமக நிறுத்திக் கொள்ள வேண்டும். பாமகவின் இச்செயலுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் வலுவாக கண்டன குரலெழுப்ப வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
Recommended Video

உரிய பாதுகாப்பு
மேலும் நடிகர் சூர்யாவின் திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாவதற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கேட்டுக் கொள்கிறது'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications