ரெண்டு லட்டு தின்ன ஆசையா? விநாயகர் சதுர்த்தியன்று தவெகவினருக்கு நல்ல செய்தி! நாளை அறிவிக்கும் விஜய்!
சென்னை : விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வந்த மகிழ்ச்சி செய்தியால் உற்சாகத்தில் இருக்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர். கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர் பதிவு செய்யப்பட்ட நிலையில் அதனை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை இதனை தவெக தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும், மாநாடு தொடர்பான அறிவிப்பும் நாளை வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தற்போதைக்கு வசூலிலும் ரசிகர் பட்டாளத்திலும் நம்பர் ஒன் நடிகராக இருக்கும் விஜய் அடுத்ததாக அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கிறார். கடந்த பல ஆண்டுகளாகவே அரசியலை நோக்கியே அவரது நகர்வுகள் இருந்திருக்கிறது.

ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றியது, கிளைக் கழக நிர்வாகிகள் வரை நியமனம் செய்தது, ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் கட்சியினரை போட்டியிட வைத்தது என விஜய் மறைமுகமாக அரசியல் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் அவர் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே கூறப்பட்டது. சொன்னது போலவே பிப்ரவரி மாதத்தில் அரசியல் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததோடு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரையும் அறிவித்தார். அதற்குப் பிறகு ஆலோசனைக் கூட்டம், கோட் சூட்டிங், மாணவர்கள் சந்திப்பு என பிசியாக இருந்த அவர் 2026 தேர்தலில் களமிறங்குவது உறுதி என அறிவித்திருக்கிறார். ஆனால் அதற்கு முன்னதாக சினிமாவில் இருந்து வெளியேறப் போவதாக அறிவித்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் அவர் நடித்து வெளியாகி உள்ள கோட் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளிலேயே 120 கோடி ரூபாய்க்கு மேல் கலெக்ஷனை அள்ளியுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பல இடங்கள் பார்த்த பிறகு விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் தேதி நடக்க இருப்பதாகவும் அதற்காக அனுமதி அளிக்க வேண்டும் என விழுப்புரம் காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது.
21 கேள்விகளை காவல்துறையினர் கேட்ட நிலையில் அதற்கு பதிலும் அளிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் அனுமதி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டில் 55 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தொகுதிக்கு ஒருவர் அவர்களுக்கு கீழ் 5 பேர் என நியமனம் செய்யப்பட்டு தொண்டர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் மாநாடு தொடர்பாக இதுவரை விஜய் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி நாளன்று வெற்றிக் கழகத்தினருக்கு இரு முக்கிய செய்திகள் கிடைத்திருக்கிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக நாளை தான் அது வெளியாகும். முதலாவதாக தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு தேதி மற்றும் பிற அறிவிப்புகளை நாளை விஜய் கட்சியினருடன் பகிர்ந்து கொள்கிறார். நாளை அறிக்கை வாயிலாகவோ அல்லது வீடியோ வாயிலாகவோ விஜய் மாநாடு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.
இந்த நிலையில் மற்றொரு மகிழ்ச்சி செய்தியாக தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்தை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதமே தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது அதற்கான அங்கீகார உத்தரவு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த செய்தியையும் நாளை ரசிகர்கள் மற்றும் கட்சியினருடன் விஜய் பகிர்ந்து கொள்ள உள்ளார். மேலும் விஜய்யின் அறிவிப்பு வெளியான உடனேயே தமிழகம் முழுவதும் இருக்கும் தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடவும் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த தகவல் எப்படியோ கசிந்துள்ள நிலையில் நாளை பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட முடிவு செய்திருக்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளும் தொண்டர்களும்..












Click it and Unblock the Notifications