ஒரே மாதம்.. சிக்கிய 2 அமைச்சர்கள்! அந்தரத்தில் தொங்கிய பிடிஆர்.. நடுவில் சிக்கிய மா.சுப்ரமணியன்
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனை லிஃப்டில் சிக்கிய நிலையில், நேற்று பழனியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ரோப்காரில் சென்றபோது அது நடுவழியில் நின்றது. இரண்டுக்கும் என்ன காரணம்?
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார்.
மலைக்கோவிலுக்கு சென்ற நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பழனி முருகனை தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ரோப்கார் வழியாக அமைச்சர் கீழே இறங்கினார்.

மின் தடை
முன்னதாக மலைக் கோவிலுக்கு மேலே செல்வதற்காக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அடிவாரத்தில் இருந்து ரோப் காரில் புறப்பட்டார். அப்போது அங்கு திடீரென மின்சார தடை ஏற்பட்டது. இதன் காரணமாக அமைச்சர் பிடிஆர் சென்ற ரோப்கார் பாதியிலேயே அந்தரத்தில் தொங்கியபடி நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தரத்தில் தொங்கிய அமைச்சர்
மின் தடை காரணமாக அந்தரத்தில் தொங்கிய பழனி ரோப்காரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் உள்ளிட்ட அதிகாரிகளும் சிக்கிக் கொண்டனர். சுமார் இரண்டு நிமிடங்கள் ரோப்கார் நடுவழியிலேயே நின்ற நிலையில், மின் இணைப்பு கிடைத்தவுடன் ரோப் கார் மீண்டும் இயக்கப்பட்டது.

சிக்கிய மா.சுப்ரமணியன்
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்றிருந்தார். அங்குள்ள அறுவை சிகிச்சை துறை கட்டிடத்தின் லிப்டில் அவர் சென்றபோது லிஃப்ட் பழுதானது. இதனால் அமைச்சர் மருத்துவர்களுடன் நடு லிஃப்டில் சிக்கிக்கொண்டார்.

லிஃப்ட் பழுது
இதை அடுத்து லிஃப்டின் எமெர்ஜென்சி கதவு வழியாக அவரை அங்கிருந்த ஊழியர்கள் வெளியே அழைத்து வந்தனர். அவரை தொடர்ந்து லிஃப்டில் சிக்கிய மருத்துவர்களும் அதே வழியே கீழே இறங்கினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் பழுதான லிஃப்ட்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பொதுப்பணித்துறை விளக்கம்
இது குறித்து பொதுப்பணித்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், "சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கை அறுவை சிகிச்சைச் சிறப்பு மேற்படிப்பு துவக்கம் மற்றும் புனரமைக்கப்பட்ட நூற்றாண்டு நிர்வாக கட்டட அலுவலகம் திறப்பு விழாவிற்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் பங்கேற்க 29.11.2022 அன்று அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றார்கள். மின்தூக்கியில் செல்லும்போது, மின்தூக்கியை பராமரிக்க வேண்டிய பொறியாளர்களின் கவனக்குறைவாலும், சரிவர பராமரிக்காததாலும் பாதி வழியில் பழுதடைந்து நின்று விட்டது.

2 பேர் பணியிடை நீக்கம்
இது தொடர்பாக அமைச்சர், மருத்துவமனையில் நோயாளிகளிடம் விசாரித்த வகையில் இது போன்று அடிக்கடி லிஃப்ட் பழுதடைந்து விடுகிறது எனத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, இதற்கு பொறுப்பான பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளர் டி.சசிந்தரன் மற்றும் உதவிப் பொறியாளர் வி.கலைவாணி ஆகிய இருவரையும் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அசம்பாவிதங்களை தவிர்க்க நடவடிக்கை
மேலும், முதன்மைத் தலைமைப் பொறியாளர் பொதுப்பணித்துறை அவர்கள், இனிவரும் காலங்களில் இதுபோன்று நிகழ்வுகளை தவிர்க்கும் பொருட்டு, விரிவான சுற்றறிக்கை ஒன்றினை, 25.11.2022 அன்று அனைத்து மின் பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ளார். அதில், மருத்துவமனைகளில் உள்ள மின்தூக்கிகள் (Lifts) மற்றும் இதர மின் சாதனங்கள் சரியாக இயங்குவதை சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்." என அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications