நாங்கள் போய் ஆள் பிடிப்பது இல்லை.. அவர்களாகவே வருகிறார்கள்.. ஒரே போடாக போட்ட ஜெயக்குமார்!
சென்னை: பாஜகவில் இருந்து ஆட்களை எடுக்க வேண்டிய நிலையில் திராவிட கட்சிகள் உள்ளன என்றும் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்களை திராவிட கட்சிகள் இழுக்கின்றன என்றும் அண்ணாமலை கூறியிருந்த நிலையில், நாங்கள் போய் ஆள் பிடிப்பது இல்லை என்றும் அதிமுக வளர்ச்சியை பார்த்து அவர்களாக வருகிறார்கள் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வரும் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தேர்தல் பணிகள் என தற்போதே கட்சிகள் இலைமறைகாயாக செய்ய தொடங்கியுள்ளன.
இதனால், தேர்தல் களமும் மெல்ல மெல்ல சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கூட்டணி இடையேயான மோதல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.

அதிமுகவில் இணையும் பாஜக நிர்வாகிகள்
இதற்கு முக்கிய காரணமாக பாஜக நிர்வாகிகள் பலர் வரிசையாக அதிமுகவில் அடுத்தடுத்து இணைந்து வருவது பார்க்கப்படுகிறது. பாஜகவில் முக்கிய நிர்வாகியாக இருந்த ஐடி விங் நிர்மல் குமார் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்து கொண்டார். அவரைத் தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களாக பாஜக ஐடி விங் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

அதிமுக பாஜக மோதல்
அண்ணாமலையை விமர்சித்து விட்டு அடுத்தடுத்து பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருவது பாஜக தலைமைக்கும் அதிமுக தலைமைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தச் சூழலில் பாஜக நிர்வாகிகள் விலகல் குறித்து அமர் பிரசாத் ரெட்டி , கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுக இப்படி செய்து இருக்கக் கூடாது என்று சாடியிருந்தார்.

அண்ணாமலை பரபரப்பு பேட்டி
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை, பாஜகவில் இருந்து ஆட்களை எடுக்க வேண்டிய நிலையில் திராவிட கட்சிகள் உள்ளன என்றும் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்களை திராவிட கட்சிகள் இழுக்கின்றன. திராவிட கட்சிகளின் இந்த செயல் பாஜகவின் வளர்ச்சியை காட்டுவதாக கூறியிருந்தார். அண்ணாமலையின் இந்த பேட்டியும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெயக்குமார் பதில்
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலையின் இந்த பேட்டி தொடர்பாக கூறியதாவது:- ஒரு கட்சியில் சேருவது ஒருவரின் விருப்பத்தை பொறுத்தது. அந்த விருப்பத்தின் அடிப்படையில் அதிமுகவில் சேருகிறார்கள்.. நாங்கள் போய் ஆள் பிடிப்பது இல்லை. அதிமுக கட்சி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து சக்தி வாய்ந்த இயக்கமாக மாறி இருக்கும் நிலையில் பலம் வாய்ந்த கட்சியாக மாறியிருப்பதால் அனைத்து கட்சிகளில் இருந்தும் வருகிறார்கள். பாஜகவில் இருந்து மட்டும் இல்லை. எல்லா கட்சியில் இருந்து வருவார்கள். இன்னும் கொஞ்ச நாளில் திமுகவில் இருந்தும் வருவார்கள் கவலைப்படாதீர்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications