மதுவும், புகைப் பழக்கமும் எலும்புகளைப் பாதிக்கும்.!எச்சரிக்கும் எலும்பியல் மருத்துவர்கள்!!
எலும்பு முறிவிற்கு பிறகு ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகும் எலும்புகள் கூடுவதில்லை. இதற்கு முக்கிய காரணம், வயது முதிர்வு, மது, புகைக்கும் பழக்கம் மற்றும் சத்துக் குறைபாடு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: மது மற்றும் புகைப் பழக்கம் உள்ளோரின் எலும்புகள் விரைவாகவே வலுவிழக்கும். எலும்பு முறிவு அல்லது எலும்பு தொடர்பான சிகிச்சையின் போது, அது கடும் தாக்கத்தை உண்டாக்கும் என எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். திண்டுக்கல்லில் நடந்த கருத்தரங்கில் பேசிய எலும்பியல் மருத்துவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
திண்டுக்கல்லில், எலும்பு முறிவு மருத்துவர்கள் நடத்திய மாநாட்டின் கருத்தரங்கில் இதனைத் தெரிவித்தனர். 2 நாட்கள் நடைபெற்ற மாநாட்டில், 450க்கும் மேற்பட்ட எலும்பு முறிவு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
அதில் எலும்பு முறிவுக்காக செய்யப்படும் நவீன சிகிச்சைகள், அது தொடர்பான ஆராய்ச்சிகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

எலும்பு முறிவு சிகிச்சை
ஒரு சிலருக்கு எலும்புகள் கூடாமல் உள்ள நிலைக்கு, என்ன மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்தும் ஆய்வுகள் மற்றும் ஆலோசனைகள் செய்யப்பட்டது. இந்திய எலும்பு முறிவு மருத்துவக் கழகத் தலைவர் டாக்டர் ரமேஷ்சென் மற்றும் செயலர் டாக்டர் நவீன் தக்கார் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொண்டார். தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் மருத்துவ வல்லுனர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மது, புகைப்பழக்கம்
தமிழ்நாடு எலும்பு முறிவு மருத்துவக் கழகத் தலைவர் டாக்டர். வனசேகர் தலைமை தாங்கினார். அப்போது பேசிய மருத்துவர்கள், "எலும்பு முறிவிற்கு பிறகு ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகும் எலும்புகள் கூடுவதில்லை. இதற்கு முக்கிய காரணம், வயது முதிர்வு, மது, புகைக்கும் பழக்கம் மற்றும் சத்துக் குறைபாடு. அவர்களுக்கும் என்ன மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும்? எலும்பு கூடுவதற்கு வேறென்ன வழி உள்ளது?" என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

அதிகரிக்கும் விபத்துகள்
மேலும், "தற்போது இந்தியா முழுதும் விபத்துக்கள் அதிகரித்துள்ளன. விபத்து ஏற்பட்டோர், தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பட்சத்தில் முதலில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறோம். 48 மணி நேரத்திற்கு பிறகே அதற்கான கட்டணத்தை வசூலிக்கிறோம். பணம் இருந்தால் மட்டுமே சிகிச்சை என நாங்கள் வற்புறுத்துவதில்லை. முதலில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கிறோம். மேலும், முதல்வர் காப்பீடு திட்டம் உள்ளிட்ட அரசு திட்டங்களையும் மருத்துவமனை ஏற்றுக்கொள்கிறது. காப்பீட்டு திட்டங்கள் குறித்தும் 'தகவல் பலகைகள்' மருத்துவமனை முன்பு வைக்கப்பட்டுள்ளன என்றனர்.

எலும்பு முறிவு சிகிச்சை கருத்தரங்கம்
மாநாடு ஏற்பாடுகளை தலைவர் டாக்டர். ஜோசப் கிறிஸ்டோபர் பாபு, செயலர் டாக்டர். ஆனந்த் பொருளாளர் டாக்டர். ஈஸ்வரகுமார் மற்றும் திண்டுக்கல் மாவட்ட எலும்பு முறிவு மருத்துவர்கள் இணைந்து செய்திருந்தனர். எலும்பு முறிவு சிகிச்சை முறையில் பயன்படுத்தப்படும் நவீன சாதனங்கள், கருவிகள், உபகரணங்கள் அடங்கிய 35 ஸ்டால்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications