ஆரஞ்சு லட்டா? மஞ்சள் லட்டா? எது நல்லது? தீபாவளி ஸ்வீட்ஸ் ‘பரிதாபங்கள்’.. உஷார் மக்களே?
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி வாங்கும் இனிப்பு பொருட்கள் தரமாக இல்லை எனில் உடனடியாக 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்று அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திருமணமான ஜோடிகள் தலை தீபாவளி கொண்டாடத் தயாராகி இருப்பார்கள். பலருக்கும் வகைவகையான பலகாரங்கள் சீராக வர இருக்கும். தீபாவளி பண்டிகையை ஒட்டி பலர் தீபாவளி லேகியம் கூட வாங்கி வைத்திருப்பார்கள். அஜீரண கோளாறு வராமல் தடுக்க இதைப் பல காலமாகப் பலருக்கும் பயன்பட்டு வருகிறது. இதை எல்லாம் விடப் பலரும் கவனிக்க வேண்டியது இனிப்பு வகைகள் சாப்பிடும் அளவுக்குத் தரமாக இருக்கிறதா என்பது?

அவசர கதியில் பல கடைகள் இனிப்பு வகைகளை தரமற்று தயாரிக்கத் தொடங்கி விடுவார்கள். அதன் தரத்தைச் சரியாக நிர்ணயம் செய்யமாட்டார்கள். எனவே வாங்கும் தின்பண்டங்கள் தரம் இல்லை என்றால் உடனடியாக உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன் உங்களுக்கு நல்ல நீதியையும் பெற்றுத் தருவார்கள்.இது இல்லாமல் FSSAI இணையதளத்திலும் புகார் அளிக்கலாம்.
இனிப்பு வகைகளைத் தரம் பார்த்து வாங்குவது எப்படி உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் சதீஷ்குமார், விழிப்புணர்வு தரும் சில டிப்ஸ் கொடுத்துள்ளார். அதைக் கொண்டு இனிப்பு பண்டங்களைப் பார்த்துப் பரிசோதித்து வாங்கலாம். சதீஷ்குமார்,"முதலில் அதிக அடர்த்தியான நிறங்கள் கொண்ட பலகாரங்களைத் தவிர்க்க வேண்டும். அதை வாங்குவதும் உண்பதும் உடல் ஆரோக்கியத்திற்குக் கெடுதல். பயன்படுத்தும் எண்ணெய் சரியானதாக இருக்கிறதா? நெய் சரியாக உள்ளதா எனப் பார்த்து வாங்க வேண்டும். பலர் நெய்யில் செய்வதாகச் சொல்வார்கள். ஆனால் வனஸ்பதியில் செய்திருப்பார்கள். தீபாவளி நேரங்களில் நிறையப் பலகாரங்களைச் செய்வார்கள். அதிக எண்ணெய் பயன்பாடு இருக்கும். மீந்து போன எண்ணெய்யை மறுநாள் பயன்படுத்துவார்கள். புதிய எண்ணெய்யை மாற்றமாட்டார்கள்.

நாங்கள் ஒரு கடைக்கு பரிசோதனை செய்யச் சென்றால், முதலில் அதன் நிறத்தைத்தான் பார்ப்போம். அதைவைத்தே அதன் தரம் எப்படி என்பது பற்றிய ஒரு முடிவை எடுத்துவிடலாம். உதாரணமாகச் சிலர் லட்டு வாங்குவார்கள். அது சிகப்பு நிறத்தில் இருக்கும். அப்படியான லட்டினை வாங்கக் கூடாது. சிலர் மஞ்சள் நிறத்திலிருந்தால் அது சாதாரண விசயம் என எடுத்துக்கொள்கிறார்கள். அதுவும் ஆபத்துதான். மஞ்சள் நிறமாகத் தெரியவும் செயற்கையாக நிறம் சேர்க்கிறார்கள். இரண்டும் ஆபத்துதான். சாதாரண லட்டுகளை வாங்கலாம். நிறம் முகத்தில் அடிப்பது போல் இருந்தாலே அதைத் தவிர்க்கவேண்டும். 100பிபிஎம் அளவு நிறம் சேர்க்கலாம். இவை அந்த அளவை மீறியவை.
சில கடைகளில் மில்க் ஸ்வீட்ஸ் பண்டங்களில் நீலம், ஸ்கை ப்ளூ, பச்சை கலர், ஆரெஞ்ச் என விதவிதமான கலர்களை மேலே ஒரு லேயராக பயன்படுத்தி இருப்பார்கள். அதை உண்பதால் வயிற்றுப் பிரச்சினைகள் வரக்கூடும். கட்டாயம் இவற்றைக் குழந்தைகளுக்குத் தரக்கூடாது. மிக்சரில் பச்சை நிறம் உள்ள பட்டாணியைப் பயன்படுத்தி இருப்பார்கள். அது உண்மையான பச்சைப் பட்டாணி கிடையாது. ரசாயனம் கலந்த பட்டாணி. முறுக்கு, ஜிலேபி, ஜாங்கிரி வகைகளில் கூட சிவப்பு ரசாயன வண்ணத்தைச் சேர்ப்பார்கள். கலர் இல்லாத சாதாரண முறுக்கை வாங்க வேண்டும்.

அதேபோல் இனிப்பு வகைகள் மீது சிலர் பேப்பர் போல ஜொலிக்கும் ஒருவகை பேப்பரை ஒட்டி இருப்பார்கள். அதன் அளவு குறைவாக இருந்தால் தவறில்லை. ஆனால், அதை தொட்டுப் பார்க்கும் போது கையில் அந்த சில்வர் பேப்பர் ஒட்டும் அளவுக்கு இருந்தால், அது ஆபத்து. அதை வாங்கவே கூடாது. இந்த அலுமினியம் போன்ற கலவைகள் வயிற்றுக்குக் கெடுதல் தரும். அதிகம் உட்கொள்வதால் கிட்னி கெட்டுப் போகவும் வாய்ப்பு உள்ளது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications