Exclusive ஸ்டாலினுக்கு கேரள அரசை கேட்க தைரியம் இருக்கா? திருட்டுத்தனம்! சவால் விட்ட அர்ஜூன் சம்பத்!
சென்னை : முதல்வர் ஸ்டாலினுக்கு தைரியமிருந்தால் தமிழ்நாட்டை கேரளா கம்யூனிஸ்ட் அரசு கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியாக வைத்திருப்பதைக் கேட்கட்டுமே என சவால் விடுத்துள்ளார் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்.
ஒன் இந்தியாவிற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ள இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், அம்பேத்கர் இந்து விரோதி அல்ல, அவர் கலியுக மனு, அம்பேத்கர் 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஆதரித்திருப்பார் எனக் கூறியுள்ளார்.
மேலும், 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் தடுக்க திமுக அரசு திருட்டுத்தனம் செய்கிறது என்று விமர்சித்துள்ளார் அர்ஜூன் சம்பத்.
ஒரு போஸ்டர்.. மத மோதலை தூண்டும் வகையில் விவாதம்! அர்ஜூன் சம்பத், தடா ரஹீம் மீது வழக்குப்பதிவு!

அம்பேத்கர் இந்து விரோதியா?
ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் பேசியுள்ள அர்ஜூன் சம்பத், "ஆர்.எஸ்.எஸ் தலைவர், விஜயதசமி உரையில் 3 விஷயங்களைக் குறிப்பிடுகிறார். தண்ணீர் தீண்டாமை, கோவில் வழிபாட்டு தீண்டாமை, சுடுகாடு தீண்டாமை, இந்த மூன்றையும் ஒழிப்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் வேலை எனத் தெரிவித்துள்ளார். இந்து சமயத்தில் இருப்பதை ஒழிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் சொல்வதால் அவர் இந்து மத விரோதி என்று சொல்ல முடியுமா? அம்பேத்கரும், இந்து மதத்தில் நிலவிய தீண்டாமைகளில், இந்து மதத்தின் இன்னொரு கூறான பௌத்த மதத்திற்குச் சென்றார். அவரை இந்து மதத்திற்கு எதிரானவர் எனச் சொல்லக்கூடாது.

திருமா அவர்களிடம் கேட்பாரா?
அம்பேத்கரை நாங்கள் தேசிய தலைவராக, சீர்திருத்த வாதியாக ஏற்றுக்கொள்கிறோம். அவரை 'கலியுக மனு' என்கிறோம். மனு என்பவர் மனித குலத்திற்கு தேவையான சட்டங்களை காலத்திற்கு ஏற்றபடி உருவாக்குபவர். ஸ்டாலினை 'மனுநீதி சோழன்' என்ற வாசகத்தோடு போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலினை மனுநீதி சோழனின் வாரிசு என போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள். திருமாவளவன் அவர்களிடம் கேட்க வேண்டும்.

கருணாநிதி குடும்பம்
மனுநீதி சோழனாகிய நீங்கள், மனுநீதிக்கு விளக்கம் சொல்லுங்கள் எனக் கேட்க வேண்டும், எங்களிடம் மட்டும் எவ்வளவு நாள் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். மனு நீதி அவ்வப்போது திருத்தப்பட்டுக் கொண்டே இருக்கும், நாங்கள் எல்லாம் இப்போது மனு நீதியை பின்பற்றுவதில்லை. அம்பேத்கர் சட்டத்தைத்தான் பின்பற்றுகிறோம். கருணாநிதி, வீரமணி குடும்பத்தினர் தான் மனுநீதியை பின்பற்றுகிறார்கள்.

திருமாவளவனுக்கு என்ன உரிமை?
நாங்கள் அம்பேத்கர் சிலையை வணங்கக்கூடாது, அம்பேத்கருக்கு மரியாதை செய்யக்கூடாது எனச் சொல்வதற்கு திருமாவளவனுக்கு என்ன உரிமை இருக்கிறது? அம்பேத்கரின் கொள்கையை நாங்கள் ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு? சாதி அடிப்படையில் மக்களைக் பிரிக்கக்கூடாது எனச் சொன்னவர் அம்பேத்கர். அம்பேத்கர் சாதி வாரியான இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்.

முறியடிப்போம்
10 சதவீத இட ஒதுக்கீடு நியாயமானது, ஏழைகளுக்கான இந்த இட ஒதுக்கீட்டை அம்பேத்கர் இருந்திருந்தாலும் விரும்பியிருப்பார். வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு திட்டமிட்டு, தமிழ்நாட்டில் மட்டும் தீய சக்திகள், ஏழைகளுக்கு எதிரான சக்திகள் அந்த இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள், நாங்கள் அதனை முறியடிப்போம். இதுநாள் வரை ஒரு முறை கூட இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவித்திராத ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதில் இவர்களுக்கு என்ன ஆட்சேபனை?

திருட்டுத்தனம்
10 சதவீத இட ஒதுக்கீட்டை இங்கு மட்டும் அமல்படுத்த மாட்டேன் என்கிறார்கள். அதையும் எவ்வளவு குறுக்கு புத்தியோடு செய்கிறார்கள் என்றால், வருமானச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால் கொடுக்க வேண்டாம் என வாய்மொழி உத்தரவு போட்டு வைத்திருக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட திருட்டுத்தனம் இது.. இந்த குறுக்கு வழிதான் திராவிட மாடல். ஏழைகளுக்கு எதிரான, ஏழைகளை வாக்கு வங்கியாக பார்த்து, அவர்களுக்கு பிச்சை போல ஏதாவது இலவசமாக கொடுத்து வாக்கு பெறும் இந்த தந்திரத்தை முறியடிப்போம்." எனத் தெரிவித்தார்.

பாஜக ஆளும் மாநிலங்களில்
தமிழ்நாட்டின் உரிமை பற்றிப் பேசினால் பிரிவினை கருத்தைத் தூண்டுவதாகச் சொல்லும் பாஜகவினர், அவர்கள் ஆளும் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பெலகாவி உள்ளிட்ட எல்லைப் பிரச்சனையில் இரு மாநில பாஜகவினர் பேசும் கருத்துகள் பற்றியும், கர்நாடகா தலைமைச் செயலர், மகாராஷ்டிரா அமைச்சர்கள் யாரும் கர்நாடகா வரக்கூடாது என கடிதம் எழுதியதைக் குறிப்பிட்டும் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது பற்றி ஒன் இந்தியா நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு அர்ஜுன் சம்பத் பதிலளித்தார்.

ஸ்டாலினுக்கு சவால்
கேரளாவில் இருந்து கம்யூனிஸ்ட் அரசு, தமிழ்நாட்டில் இருக்கும் கண்ணகி கோவில், எல்லைப் பகுதிகளை அளந்து சர்வே எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் வாய் திறக்காமல் இருக்கிறார். கர்நாடகா மகாராஷ்டிரா பிரச்சனையை வைத்து முரசொலி திசைதிருப்புகிறது. தமிழ்நாட்டை கேரளா கம்யூனிஸ்ட் அரசு கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியாக வைத்திருக்கிறது. ஸ்டாலின் தைரியமிருந்தால் அதைக் கேட்கட்டுமே என சவால் விடுத்துள்ளார் அர்ஜூன் சம்பத்.