அருள் விக்னேஷ் விவகாரம்.. உதயநிதி அழுத்தம்.. மாறுபடும் திருமா, தாகூர் குரல்கள்.. விஜய் முடிவு?
சென்னை: கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர் விவகாரத்தில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது புகார், வழக்குப் பதிவு, விசாரணை என அடுத்தடுத்து நகர்ந்து வரும் நிலையில், முதல்வர் விஜய் இதுவரை வெளிப்படையாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் இந்த விவகாரத்தில் வெவ்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அப்படியென்றால் கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் திமுக ஆளுநர் வரை சென்று புகார் அளித்துள்ளது. எம்எல்ஏவை கைது செய்ய வேண்டும், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

கள்ளக்குறிச்சி கலெக்டர்
இந்த விவகாரம் ஆரம்பத்தில் கள்ளக்குறிச்சி பொறுப்பு அமைச்சர் வன்னியரசுவிடம் சென்றதாக செய்திகள் வெளியாகின. அவர் சமரசம் செய்ய முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இந்தத் தகவலை வன்னியரசு செய்தியாளர்களிடம் மறுத்தார்.
இதுகுறித்து அவர் அளித்த விளக்கத்தில், "நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம்தான் நிற்போம். இது குறித்து முதல்வரோ அல்லது சம்பந்தப்பட்டவர்களோ எனக்கு அறிக்கை கொடுங்கள் என்று சொன்னால் நான் அதைப்பற்றி பேசுவேன். ஏனென்றால் இதுவரை யாருமே அது குறித்து என்னிடம் பேசவும் இல்லை. பெண்கள் தொடர்பாக இது மாதிரியான செய்தியை பரப்புவது, பெண்களை பாதிப்புக்குள்ளாக்குவது, அச்சுறுத்துவது, வேலை செய்ய விடாமல் சீர்குலைப்பது என்பது எப்போதுமே தொடர்ந்து நடப்பதுதான்" என்று விளக்கம் அளித்திருந்தார்.
அதாவது, தனக்கு இந்த விவகாரம் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண் பக்கமே விசிக நிற்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.
காங்கிரஸ் ஆதரவு
இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் ஆரம்பத்தில் தெரிவித்த கருத்து அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியது. அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில் அவரை ஊடகங்கள் குற்றவாளியாகச் சித்தரிப்பது சரியல்ல என்ற வகையில் அவர் பேசினார்.
"மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்த முதல் தலைமுறை எம்எல்ஏ. அவர். செய்தியாளர்கள் சந்திப்பில்கூட, பாவமாக எனது போனைப் பாருங்கள், சிசிடிவி காட்சிகளைப் பாருங்கள் என்கிறார்.. அவர் மீது ஊடக விசாரணை நடத்துவது எந்த விதத்தில் நியாயம்?" என மாணிக்கம் தாகூர் கூறியிருந்தார்.
அவருடைய இந்த கருத்துக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. "அவரை ஏதோ ஒன்றும் அறியாத சின்ன குழந்தை போல தன் இடுப்பில் தூக்கிவைத்துக் கொண்டு காப்பாற்றப் பார்த்தது வெட்கக்கேடு என்று விமர்சித்தது.
பாஜக நிர்வாகி வானதி சீனிவாசனும் காங்கிரஸ் கட்சியினர் தவெகவினரின் தவறுகளுக்கு எல்லாம் முட்டுக் கொடுப்பதாக குற்றம்சாட்டினார்.
ஆனால், ஆட்சியர் நேரடியாக புகார் அளித்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு, மாணிக்கம் தாகூரின் நிலைப்பாட்டில் மாற்றம் தெரிந்தது. குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண் அதிகாரியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
துரை வைகோ கருத்து
அதேபோல மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவும் இந்த விவகாரத்தில் கருத்து சொல்லும்போது, "ஆட்சியர் புகார் அளித்துள்ளாரா, புகார் அளித்திருந்தால் அதைப் பற்றிப் பேசுங்கள்" என்ற வகையில் அவர் பேசியது கவனத்தைப் பெற்றது.
இதனிடையே, கார்த்தி சிதம்பரமும் இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கை தொடர்பாகத் தனது கருத்தை சொல்லும்போது, "கள்ளக்குறிச்சி ஆட்சியரின் உடமைக்கும் உயிருக்கும் சம்பந்தப்பட்ட எம்எல்ஏவால் ஆபத்து இருக்கிறதென்றால் அவரை கைது செய்யலாம். அது போன்ற பாதிப்பு இல்லையென்றால் அவரை கைது செய்ய வேண்டியதில்லை" என்று கார்த்தி சிதம்பரம் கருத்து கூறினார்.
திருமாவளவன் நிலைப்பாடு
இந்த சூழலில்தான் விசிக தலைவர் திருமாவளவன் தற்போது தெரிவித்துள்ள கருத்து கவனத்தைப் பெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும், மாநில அரசின் சட்டப்பூர்வ நடவடிக்கையில் நம்பிக்கை இருப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரசு வேகமாக செயல்படுவதாகவும், இந்தப் பிரச்சினை ஆட்சியைக் கவிழ்க்கும் அளவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதன் மூலம், தவெக ஆட்சியில் கூட்டணிக் கட்சியாக இருக்கும் விசிக, இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரும் நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்பது தெளிவாகிறது.
ஆனால், இதை எம்எல்ஏவுக்கு ஆதரவான நிலைப்பாடு என்று மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது. காரணம், வன்னியரசு ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண் பக்கமே விசிக நிற்கும் என்று கூறியிருக்கிறார். குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விஜய் என்ன செய்வார்?
இதுவரை இந்த விவகாரத்தில் விஜய் பொதுவெளியில் நேரடியாகப் பேசி தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் விசாரணை முடிவைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் சொன்னதாக மட்டுமே தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக தரப்பில் உதயநிதி ஸ்டாலின் டிஜிபியிடம் புகார் அளித்து எம்எல்ஏவை கைது செய்யவும், சிபிஐ விசாரணை நடத்தவும் கோரிக்கை வைத்துள்ளார். ஆளுநரையும் சந்தித்து இதே கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.
ஒருபுறம் எதிர்க்கட்சிகள் நடவடிக்கை கோரி அழுத்தம் கொடுக்கின்றன. மறுபுறம் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கருத்துகள் வெவ்வேறு திசைகளில் செல்கின்றன.
பாலில் ஒரு துளி விஷம்
நேற்றைய தினம் ஒரு சேனலுக்கு மூத்த அரசியல் திறனாய்வாளர் ராஜகம்பீரன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "ஒரு பாலில் ஒரு துளி விஷம் கலந்துவிட்டால், அந்தப் பாலை மீண்டும் பயன்படுத்த முடியாது. அதுபோல, ஒரு தவறை நியாயப்படுத்துவதற்கு நீங்கள் முயற்சி செய்தால், பேசுபவர்கள்தான் அவமானப்படுவார்கள். துரை வைகோவுக்கும் அவமானம் ஏற்படும். மாணிக்கம் தாகூருக்கும் அவமானம் ஏற்படும்.
கூட்டணி கட்சியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், ஒரு குற்றவாளியை பாதுகாக்கும் இடமாக தவெக மாறிவிடக்கூடாது. தவெக குற்றவாளிகளின் கூடாரம் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு விஜய்க்கு இருக்கிறது. கூட்டணிக் கட்சிகள் எவ்வளவு ஆதரவாகப் பேசினாலும், பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதுதான் அறம் சார்ந்த அரசியலாகவும், நீதி சார்ந்த அரசியலாகவும் இருக்க முடியும்.
பாதிக்கப்பட்ட பெண் மீதே மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது, அவர் ஏன் புகார் அளிக்கவில்லை, ஏன் அன்றைக்கே தெரிவிக்கவில்லை, ஏன் இப்போதுதான் தெரிவிக்கிறார் என்று கேள்விகளை எழுப்புவது ஆகியவை பெண்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கும்.
இதன் மூலம் தவெக பெண்களுக்கு எதிரான கட்சி என்ற பிம்பம் உருவாகிவிடும். அது இந்த ஆட்சிக்குப் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்." என்று ராஜகம்பீரன் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
கூட்டணி தலைவர்கள்
ஆக, திருமாவளவன் மாநில அரசின் விசாரணையில் நம்பிக்கை தெரிவிக்கிறார். மாணிக்கம் தாகூர் ஆரம்பத்தில் எம்எல்ஏவுக்கு ஆதரவாகப் பேசிய நிலையில், பிறகு சட்ட நடவடிக்கையை வலியுறுத்துகிறார். துரை வைகோ புகார் தொடர்பான விளக்கத்தைக் கேட்கிறார். கார்த்தி சிதம்பரம் கைது நடவடிக்கைக்கு ஆபத்து இருக்கிறதா என்பதை அடிப்படையாகக் கூறுகிறார்.
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் விஜய் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதுதான் இப்போது எழுந்துள்ள முக்கியமான கேள்வி...!!!




Click it and Unblock the Notifications
