ஜெயலலிதா பாணியில்.. உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பாஜகவுக்கு அதிர்ச்சி தந்த அதிமுக
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக - பாஜக இடையேயான கூட்டணியில் இழுபறி நிலவி வரும் நிலையில், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக அதிரடியாக வெளியிட்டுள்ளது.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வரும் மார்ச் 4இல் மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி
இந்தத் தேர்தலில் மொத்தம் 7 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட அதே கூட்டணியுடன் திமுக களமிறங்குகிறது. அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. இவை தவிர பாமக, அமமுக, தேமுதிக மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்குகின்றன.

சர்ச்சை
சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பாஜகவின் நயினார் நாகேந்திரன், சட்டசபையில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை என்றும் அதிமுக மக்கள் பிரச்சனையைச் சட்டமன்றத்தில் எப்போதுமே பேசுவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். இது அதிமுக - பாஜக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

பேச்சுவார்த்தை
இந்தச் சூழலில் அதிமுக - பாஜக இடப்பங்கீடு தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குக் கூட நயினார் நாகேந்திரன் செல்லவில்லை. இப்படி அதிமுக மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமார் 4 மணி நேரம் நீட்டித்து. இருப்பினும், அதில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இடப்பங்கீடு உறுதி செய்யப்படும் என பாஜக தலைவர் அண்ணாலை செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

என்ன காரணம்
அப்போது பாஜக தான் போட்டியிட விரும்பும் இடங்கள் கொண்ட பட்டியலை அதிமுகவிடம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குறைந்தது 20% இடங்களை ஒதுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கோவை, ஓசூர், திருப்பூர், நாகர்கோவில் மாநகராட்சிகளில் அதிக வார்டுகளில் போட்டியிட வேண்டும் என பாஜக விரும்பியது.

அதிமுக தரப்பு
ஆனால், 8 முதல் 10% வார்டுகள் மட்டுமே ஒதுக்க முடியும், அதுவும் மாவட்ட வாரியாக மட்டுமே முடிவு செய்யப்படும் என அதிமுக தரப்பில் கூறப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக 100 வார்டுகள் கொண்ட கோவையில் பாஜக 30 வார்டுகளை கேட்டுள்ளது. இருப்பினும், கோவையில் தான் அதிமுக அதிகபட்ச எம்எல்ஏக்களை கொண்டுள்ளது. இதனால் 8 முதல் 10 வார்டுகள் வரை மட்டுமே கொடுக்க முடியும் என அதிமுக கூறியுள்ளது. அதேபோல தலைநகர் சென்னையில் 200 வார்டுகள் உள்ள நிலையில், அதில் பாஜக 50 வார்டுகளை கேட்கும் நிலையில் 20 வார்டுகள் மட்டுமே தர அதிமுக முன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே வேட்பு மனு தொடங்கியுள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பான முடிவை இன்று மாலைக்குள் தெரிவிக்குமாறு பாஜக தரப்பிடம் அதிமுக கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

தலைமை
அதிமுக இப்படி மிகக் குறைவான வார்டுகளை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளது பாஜகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று இடப்பங்கீடு பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. மாறாக அண்ணாமலை திருச்சியில் கட்சியின் மூத்த தலைவர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த விஷயத்தில் டெல்லி தலைமை இறுதி முடிவை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே இடப்பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி நிலவும் நிலையில், அதிமுக தரப்பில் இப்போது முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்
கடலூர் மாநகராட்சி, தர்மபுரி, விழுப்புரம் நகராட்சிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடலூர் மாநகராட்சியில் 43 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளது. அதேபோல நகராட்சிகளில் சிதம்பரம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, விழுப்புரம், திண்டிவனம், தர்மபுரி நகராட்சியில் 31 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

ஜெயலலிதா பாணி
பொதுவாக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா தான் இப்படி கூட்டணி பேச்சுவார்த்தை முடியும் முன்னரே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு கூட்டணிக் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுப்பார். முன்னதாக கடந்த 2011 தேர்தலில் கூட அதிமுக - தேமுதிக தொகுதிப்பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டது. அப்போது தேமுதிக அதிக இடங்களைக் கேட்டதாகக் கூறப்பட்டது. அப்போது அதிரடியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விஜயகாந்த்திற்கு அதிர்ச்சி கொடுத்தார் ஜெயலலிதா. அதன் பின்னரே அதிமுக கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட தேமுதிக சம்மதித்தது.

கூட்டணி தொடருமா
கடந்த சட்டசபைத் தேர்தலிலும் கூட கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி நிகழ்ந்த போது, முதற்கட்டமாக 6 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில், இப்போதும் அதே பாணியில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமை! கடந்த 2019ல் தொடங்கி மொத்தம் 3 முக்கிய தேர்தல்களை - 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டசபை மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல், அதிமுக - பாஜக கூட்டணி சந்தித்துள்ளது. இந்தக் கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தொடருமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்!












Click it and Unblock the Notifications