மாஸ்க் அணியாவிட்டால் ரூ200-பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ500 அபராதம்- சென்னை மாநகராட்சி அதிரடி
சென்னை: சென்னை நகரில் முக கவசம் அணியாமல் நடமாடினால் ரூ200 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு என்பது 1.30 லட்சமாக இருந்து வருகிறது.

மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகத்திலும் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு என்பது 4,000-த்தை தாண்டியதாக உள்ளது.
சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,000-க்கும் அதிகமாகி உள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடுமையாக்கி உள்ளது. சென்னையில் முக கவசம் அணியாமல் நடமாடினால் ரூ200 அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல பொது இடங்களில் எச்சில் உமிழ்ந்தால் ரூ500 அபராதம் விதிக்கப்படும். சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ500 அபராதம்; கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்காத வர்த்தக நிறுவனங்களுக்கு ரூ5,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி.