சென்னை மக்களே.. தேவையின்றி இனி வெளியே போகாதீர்கள்.. ஆக்ஷனில் இறங்கியது காவல்துறை !
சென்னை: சென்னையில் தேவையின்றி வெளியே வருபவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது. ஊரடங்கை மீறுவதை தடுக்க இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 30ஆயிரத்தை தாண்டி உள்ளது. மாநிலத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு மிகமிக உச்சமாக உள்ளது. சென்னையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 6991 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஒரே நாளில் சென்னையில் 88 பேர் இறந்ததாக அரசு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் சென்னையில் 42579 பேர் நோய் தொற்றால் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அக்கறையில்லை
சென்னையில் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு உரிய வசதிகளையும் ஏற்படுத்துவதும், ஆக்ஸிஜன் வசதி உள்ள படுக்கைகளை ஒதுக்குவதும் மிகமிக கடினமான சூழல் நிலவுகிறது. ஆனால் சென்னையில் பலர் முககவசம் அணியாமல், வாகனங்களில் அதிக அளவில் சென்று வருகின்றனர். கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது ஊரடங்கு தானா என்ற கேள்வி எழுந்தது.

கடும் ஊரடங்கு
எதை பற்றியும் கவலைப்படாமல் பலர் சமூக இடைவெளியின்றி வெளியில் சுற்றி வருவதால் தான் சென்னையில் மிக வேகமாக கொரோனா தொற்று உயர்வதாக புகார் எழுந்தது. காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடும் ஊரடங்கு தேவை என்றும் நேற்று பலர் சமூக வலைதளங்களில் குரல் எழுப்பினர்.

கடும் நடவடிக்கை
இதையடுத்து தமிழக காவல்துறை நேற்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியிட்டது, இதன்படி இன்று முதல் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றுபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும் என்று எச்சரித்தது. தேவையின்றி வெளியில் வாகனங்களில் வரும் மற்று நடமாடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும். அரசின் அறிவுரைகளை பின்பற்றி சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியது

500 அபராதம்
இதன்படி சென்னையில் தேவையின்றி வெளியே வருபவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது. எச்சரிக்கையை மீறி வெளியில் சுற்றுபவர்கள் மீது சென்னை போலீசார் வழக்கமான நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். அபாரதமும் விதித்து வருகிறார்கள். சென்னை மட்டுமல்ல, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், வேலூர் உள்பட தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் கடும் நடவடிக்கை பாய தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications