ரெடியா? தமிழகம் முழுவதும் பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கம்.. நாளை டிக்கெட் முன்பதிவு.. முழுபட்டியல்
சென்னை: வரும் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர் திரும்பி வரும் நிலையில் அவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சிறப்பு ரயில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஜனவரி 14ல் சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ள நிலையில் அதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு துவங்கி நடைபெற உள்ளது. இதுதவிர மேலும் பல இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் பயணிக்க உள்ளது.
பொங்கல் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் தங்கி பணியாற்றி வரும் மக்கள் சொந்த ஊர் திரும்ப தயாராகி வருகின்றன. பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று முதல் 14ம் தேதி வரை 3 நாட்களுக்கு 16,932 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை கோயம்பேடு, கேகேநகர், மாதவரம், தாம்பரம் மெப்ஸ், தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் பூந்தமல்லி ஆகிய 6 இடங்களில் இருந்து தமிழ்நாட்டின் அனைத்து இடங்களுக்கும் தனித்தனியே பஸ்கள் இயங்கி வருகின்றன.

தென்மாவட்ட சிறப்பு ரயில்கள்
இதேபோல் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்தது. அதன்படி ஏராளமான சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயங்க துவங்கி உள்ளன. நாளை திருநெல்வேலி-சென்னை எழும்பூர் (06022) சிறப்பு ரயில், தாம்பரம் -நாகர்கோவில் (06041) சிறப்பு ரயில் இயங்க உள்ளது. வரும் 16ம் தேதி நாகர்கோவில்-தாம்பரம் (06042), தாம்பரம்-திருநெல்வேலி (06057) இயங்க உள்ளது.

கோவை டூ திண்டுக்கல்
அதேபோல் வரும் 17 ம் தேதி கெச்சுவேலி -தாம்பரம் இடையே சிறப்பு ரயில் (06044), திருநெல்வேலி -தாம்பரம் இடையே (06058) சிறப்பு ரயில், ஜனவரி 18 ம் தேதி தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் (06045) இயங்க உள்ளது. இதுதவிர நாளை முதல் ஜனவரி 18 ம் தேதி வரை இருமார்க்கமாக கோயம்புத்தூர் - திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் (06077/06078) இயங்க உள்ளது.

கூடுதல் சிறப்பு ரயில்
இந்த நிலையில் தான் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு கூடுதலாக சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி ஜனவரி 14ல் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜனவரி 14ல் சிறப்பு ரயில்
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை தாம்பரம்-திருநெல்வேலி இடையே அதிவிரைவு (சூப்பர்பாஸ்ட்) சிறப்பு ரயில் (வண்டி எண் 06049/06050) இயக்கப்பட உள்ளது. ஜனவரி 14ல் தாம்பரத்தில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்படும் தாம்பரம்-திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் (06049) மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலியை சென்றடைய உள்ளது. அதேபோல் மறுமார்க்கத்தில் திருநெல்வேலி- தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06050) திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 18 மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை டிக்கெட் முன்பதிவு
இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை (ஜனவரி 13) காலை 8 மணிக்கு துவங்க உள்ளது. ரயிலில் 3 அடுக்கு கொண்ட 2 ஏசி பெட்டிகள், இரண்டடுக்கு படுக்கை வசதி கொண்ட 13 பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் இருக்கும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.












Click it and Unblock the Notifications