தமிழகம் முழுக்க உற்சாக வரவேற்பு.. நாளை சென்னை வருகிறது செஸ் ஒலிம்பியாட் ஜோதி.. 'டிராபிக் ஜாம்' உஷார்
சென்னை: செஸ் ஒலிம்பியாட் ஜோதி மக்களின் உற்சாக வரவேற்புடன் தமிழகம் முழுவதும் பயணித்து சென்னை வர உள்ளது. நாளை மாலை சென்னையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் முன்கூட்டிய திட்டமிடலுடன் பயணம் மேற்கொள்ள சென்னை காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Recommended Video
தமிழகத்தில் வரும் 28 ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது. இதனையொட்டி, சென்னையில் அதற்கு முன்தினமான ஜூலை 27ம் தேதி மாலை 4 மணி முதல் 7 மணி வரை செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநில கல்லூரி மைதானத்தில் தொடங்கி, காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, ராஜாமுத்தையா சாலை வழியாக நேரு உள் விளையாட்டு அரங்கம் சென்று முடிவடையும்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்கவுள்ளனர். இதனையொட்டி, அந்த வழித்தடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் அன்றைய தினம் முன்கூட்டிய திட்டமிடலும் பொதுமக்கள் பயணங்களை மேற்கொள்ள போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில், சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. வரும் 28ம் முதல் ஆகஸ்ட் 10 வரை, செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளை சேர்ந்த 2000-க்கும் வீரர் - வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இதற்கான விரிவான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. இந்த பிரம்மாண்ட செஸ் போட்டியை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்
இந்தப் போட்டி குறித்து நாடு முழுவதும் விழிப்புணாவு ஏற்படுத்தும் வகையில் கடந்த 19ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். இந்த ஜோதி நாடு முழுவதும் பயணித்து நேற்று தமிழகம் வந்தடைந்தது. வழியெங்கும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அதன் ஒரு பகுதியாக ஒலிம்பியாட் தொடர் ஜோதி ஓட்டம் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் மதுரையில் இருந்து ஒலிம்பியாட் ஜோதி நேற்று இரவு நெல்லை வந்து சேர்ந்தது.

நெல்லையில் ஜோதி
நெல்லை சார் ஆட்சியர் ரிஷப் இந்த தொடர் ஜோதியினை பெற்று வந்து பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தின் உள் விளையாட்டு அரங்கில் பொதுமக்கள் பார்வைக்காக வைத்தார் தொடர்ந்து இந்த உள் அரங்கில் இரவு முழுவதும் தொடர் செஸ் போட்டிகள் நடைபெற்றது காலை 7 மணி வரை நடந்த இந்த போட்டியில் மாணவர்கள், முதியவர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு ஆர்வமுடன் விடிய விடிய செஸ் விளையாடினர். அதனைத் தொடர்ந்து இன்று காலை ஒலிம்பியாட் தொடர் ஜோதி ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இரவு முழுவதும் செஸ் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டவர்களில் சிறப்பாக விளையாடிய 10 பேர் மற்றும் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டினார்.

கன்னியாகுமரி
பின்னர் சபாநாயகர் ஒலிம்பியாட் தொடர் ஜோதி ஒட்டத்தை தொடங்கி வைத்து விழிப்புணர்வு பலூன்களை பறக்கவிட்டார் இந்த பேரணி நெல்லை மாநகரம் மற்றும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளுக்கு சென்று ஒலிம்பியாட் செஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்.

கடல் மார்க்கமாக பயணித்த ஜோதி
ராமேஸ்வரம் தனுஷ்கோடி அரிச்சல் முனையிலிருந்து 44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் ஜோதி ஓட்டத்தை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார். இன்று காலை 6 மணிக்கு தனுஸ்கோடி ,அரிச்சல் முனையில் இருந்து 44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் ஜோதி ஓட்டத்தை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் துவக்கி வைத்தார். பின்னர் தொடர் ஜோதி கடலோர காவல் படை கமாண்டண்ட்யிடம் கயாக்கர்ஸ்ஸிடம் ஒப்படைக்கப்பட்டு , தேசிய ஹாக்கி வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டு , பாம்பன் பாலம் வழியாக மண்டபம் பூங்காவில் நிறைவடைந்தது.

செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு வரவேற்பு
செஸ் ஒலிம்பியாட் ஜோதி கன்னியாகுமரி விரைவு ரயில் மூலம் சென்னை கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட கவுன்சிலர்கள் கனகராஜ், பாஸ்கர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜிலாசத்தியானந்த், மாநகர காவல்துறை துணை ஆணையர் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் செஸ் ஒலிம்பியாட் ஜோதி எடுத்துச் செல்லப்படுகிறது. தங்கள் பகுதிக்கு வரும் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வரவேற்க, பொதுமக்களும், விளையாட்டு வீரர்களும், அரசு அதிகாரிகளும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications