ரூமில் அமர்ந்திருந்தால் வேலைக்கு ஆகாது! ஸ்பாட் ரிப்போர்ட் என்ன? நேரடியாக களமிறங்கும் ஸ்டாலின்!
அரசின் திட்டங்களால் அனைத்து தரப்பினரும் பயன்பெறுகிறார்களா என்பதை அறிய முதல்வர் கள ஆய்வு
சென்னை: ''கள ஆய்வில் முதலமைச்சர்'' என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து தமிழ்நாடு முழுவதும் மண்டலம் வாரியாக சுற்றுப்பயணம் செல்வதன் மூலம் முதல்வர் ஸ்டாலின் மக்களின் கவனம் ஈர்த்திருக்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொள்ளும் இந்த கள ஆய்வின் முக்கிய நோக்கமே அரசின் திட்டங்களும், அறிவிப்புகளும் அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேர்கிறதா என்பதை நேரடியாக அறிந்துகொள்வது தான்.
அதுமட்டுமின்றி நாடாளுமன்றத் தேர்தலும் நெருங்கி வருவதால் அதற்கு முன்னதாகவே மக்களின் குறைகளை தீர்த்து தீர்வு வழங்கி அரசின் திட்டங்களை பரவலாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் மிக உறுதியாக இருக்கிறார்.
இதனால் தான் அதிகாரிகள், அமைச்சர்கள் என ஒரு பெரிய டீமுடன் கள ஆய்வு நடத்தி ஆன் தி ஸ்பாட்டில் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கவுள்ளார் முதல்வர்.

புதிய திட்டம்
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை மக்களை சந்திக்க வேண்டும் என்பதிலும், பயணம் செய்ய வேண்டும் என்பதிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். அரசு நிகழ்ச்சிகளிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் 8,549 கிமீ தூர சுற்றுப்பபயணம் மேற்கொண்டார். முதுகு வலி, கொரோனா, என பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்ட போதிலும் ஓரிரு நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு வழக்கம் போல் சுழன்று கொண்டிருந்தார்.

ஒரு பெரிய டீம்
இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி ''கள ஆய்வில் முதலமைச்சர்'' என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து தனது ஆய்வு சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த பயணத்தில் முதலமைச்சருடன் முக்கிய அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், துறை வாரியாக உயர் அதிகாரிகள் என ஒரு பெரிய பட்டாளத்தினரே உடன் பயணிக்க உள்ளனர். மண்டல வாரியாக சுற்றுப்பயணம் செய்து 2 முதல் 3 நாட்கள் தங்கி கள ஆய்வு நடத்தும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

பயணத்தின் நோக்கம்
இதனிடையே முதல் பயணமாக பிப்ரவரி 1 ஆம் தேதி வேலூர் மண்டலத்திற்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்கு 2 நாட்கள் தங்கி கள ஆய்வு நடத்துகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொள்ளும் இந்த கள ஆய்வின் முக்கிய நோக்கமே அரசின் திட்டங்களும், அறிவிப்புகளும் அனைத்து மக்களையும் சென்று சேர்கிறதா என்பதை நேரடியாக அறிந்துகொள்வது தான். அவர்களுக்கு அதைச் செய்திருக்கிறோம், இவர்களுக்கு இதைக் கொடுத்திருக்கிறோம் என வெறும் எண்ணிக்கையின் அடிப்படையில் அதிகாரிகள் கொடுக்கும் தரவுகளை காட்டிலும் நேரடி ஆய்வின் மூலம் யதார்த்த நிலைமையை அறிந்து கொள்ள முடியும் என்பது முதலமைச்சர் போடும் கணக்கு.

பட்ஜெட் கூட்டத் தொடர்
மார்ச் மாதம் இறுதியில் தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கு முன்னதாகவே முதல்வர் ஒரு ரவுண்டு வந்துவிடுவார் எனத் தெரிவிகப்படுகிறது. இதனிடையே நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அது குறித்தும் முதல்வர் தரப்பில் சில அரசியல் கணக்குகள் போடப்பட்டிருக்கலாம் என்றும் அதன் வெளிப்பாடாக கூட இந்த கள ஆய்வு பயணம் அமைந்திருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

மக்களுக்கு தீர்வு
இதனிடையே எது எப்படியோ முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொள்ளும் இந்த கள ஆய்வின் மூலம் அரசு அறிவித்த திட்டங்கள், அறிவிப்புகள் இன்னும் பரவலாக பாமர மக்களை சென்று சேரும் என்பது மட்டும் உறுதியாகிறது. இதனிடையே நேற்றைய தினம் சேலத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசின் திட்டங்களை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications