ஸ்டாலினை நெகிழ வைத்த திமுகவின் கடைக்கோடி தொண்டன் கோவிந்தராசு! சுற்றுப்பயணத்தில் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு
சென்னை: அரியலூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த முதலமைச்சர் ஸ்டாலினை, திமுகவின் கடைக்கோடி தொண்டர் ஒருவர் நெகிழ வைத்த நிகழ்வு நடந்துள்ளது.
அந்த தொண்டரின் வாழ்த்தையும், புகைப்படத்தையும் முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்துடன் இணைத்து வெளியிட்டதில் இருந்தே அதற்கு அவர் எந்தளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது.
2 நாள் சுற்றுப்பயணம் குறித்து கட்சித் தொண்டர்களுக்கு முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் எழுதிய கடிதம் வருமாறு;
திமுகவை நம்பினோர் ஒரு போதும் கைவிடப்படார்! அடுத்தடுத்து வாய்ப்புகள் வழங்கப்படும்! ஸ்டாலின் சமாதானம்!

வாய்ப்பு வரும்போதெல்லாம்
''தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள மகத்தான பொறுப்பினைச் சுமந்துகொண்டு மாநிலத்தின் நிலை உயர்த்திடவும், உரிமை மீட்டிடவும், தொடர்ந்து ஓய்வின்றி உழைத்திட வேண்டியிருப்பதால், அன்பு உடன்பிறப்புகளாம் உங்களுடன் கடிதம் வாயிலாக அடிக்கடி உரையாட முடியவில்லை. எனினும், வாய்ப்பு வரும்போதெல்லாம் கண்ணான கழகத்தினரையும் கனிவான பொதுமக்களையும் நேரில் சந்தித்துக் களிப்புமிகக் கொள்கிறேன்.''

கூடுதல் பேருந்து சேவை
''நவம்பர் 28-ஆம் நாளன்று திருச்சி சென்றவுடன் விமான நிலைய வளாகத்தில் ஏர்போர்ட், கே.கே.நகர் பகுதி மக்களின் குறைகளை கேட்டேன். அப்போது தாய்மார்கள், கே.கே.நகர்- ஒலையூருக்கு கூடுதல் பேருந்து சேவை கேட்டார்கள். உடனே போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் கூறி- அன்றே பேருந்து சேவை -அதுவும் கட்டணமில்லா பேருந்து சேவை துவக்கி வைக்கப்பட்டது. விமான நிலையத்திலிருந்து இறங்கியவுடன் முதலில் நிறைவேற்றி வைத்த மக்கள் கோரிக்கை.''

வானவில் மன்றம்
''பிறகு திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சி ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், "வானவில் மன்றம்" என்ற வண்ணமயமான திட்டத்தைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். கல்வித் துறையில் மற்ற பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழும் தமிழ்நாட்டின் முன்னேற்றப் பாதையில் மற்றுமொரு முக்கியமான மைல்கல்தான் இந்த வானவில் மன்றம் திட்டம்.''

பாசம் பொங்கும் இதயத்தால்
''திருச்சி நிகழ்ச்சிக்குப் பின் அரியலூர் செல்லும் வழியெங்கும் மக்கள் தொடர்ச்சியாகத் திரண்டு நின்று நெஞ்சார வாழ்த்து தெரிவித்தனர். கழகத்தினர் இருவண்ணக் கொடியசைத்து இன்முகத்துடன் வரவேற்பளித்தனர். சாலையின் ஓரமாக நின்றிருந்தவர்களை நேரில் நெருங்கிச் சென்று சந்தித்தபோது, அவர்கள் அன்புடன் என் கைகளைப் பற்றிக்கொண்டும், முகம் முழுவதும் மலர்ச்சியை வெளிப்படுத்தியும், பாசம் பொங்கும் இதயத்தால் வாழ்த்தினர். ''

கடைக்கோடி தொண்டர் கோவிந்தராசு
''சிலர் கோரிக்கை மனுக்களையும் நம்பிக்கையுடன் அளித்தனர். அங்கு வரவேற்பளித்த தொண்டர்களில் ஒருவர் - நான் சென்ற முறை சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றபோது என்னுடன் போட்டோ எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கொடுத்தார். அந்தப் புகைப்படத்தின் பின்பக்கத்தில் "தங்களின் பொற்கால ஆட்சி சிறப்பாக இருக்கிறது. மக்கள் பாராட்டுகின்றனர். என் மனம் மட்டற்ற மகிழ்ச்சி" என்று எழுதியிருந்தார். மக்களுக்கான் இந்த ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பது அந்த கடைக்கோடி தொண்டர் கோவிந்தராசுவின் எழுத்தில் பிரதிபலித்தது கண்டு மகிழ்வுற்றேன். ''

நிம்மதியுடன் வாழ்ந்திட
'' அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைக்கும் ஆட்சியாக இருப்பதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சி. ஒவ்வொரு தமிழரும் நிம்மதியுடன் வாழ்ந்திட கழக அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்திடும் என்கிற உறுதியுடன்தான் நான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன்.''