சிறு தவறு கூட நடக்கக் கூடாது! உடனுக்குடன் ஆக்ஷன் தேவை! கலெக்டர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கறார்!
சென்னை: தொலைபேசி மூலமாகவோ - வாட்ஸ்அப் வழியாகவோ பொதுமக்களிடம் இருந்து வரக்கூடிய கோரிக்கைகளை கலெக்டர்கள் உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அதிகாரிக்கு அனுப்பினோம், உடனே சரிசெய்து கொடுத்தார்கள் என்று தான் பொதுமக்கள் பேச வேண்டுமே தவிர எதையும் செய்யவில்லை என யாரும் பேசிவிடக்கூடாது என பாடம் எடுத்தார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி மாவட்ட ஆட்சியர்களுடன் பேசிய அவர் இதனைக் கூறினார். மேலும் அவர் ஆற்றிய உரையின் விவரம்;

பிரச்சனைகளை வெல்வோம்
ஒரு பிரச்சனையின் தீவிரத்தை நாம் உணர்ந்தால் - அந்த பிரச்சனையைப் பாதி வென்றதாகப் பொருள். ஒரு பிரச்சனையை எதிர்கொள்ள நாம் நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டால் - அந்தப் பிரச்சனையை முழுமையாக வென்றுவிட்டதாகவே அது அமைந்துவிடும். வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்கள் அனைத்திலும், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இவை பெரும்பாலும் முடிந்திருக்கும் என்றே நான் கருதுகிறேன்.

கடமை -பொறுப்பு
இம்முறை மழைநீர் தேங்காதவாறும், வெள்ளம் ஏற்படாதவாறும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது அனைத்து மாவட்ட நிர்வாகத்தினுடைய கடமையும் பொறுப்பும் ஆகும். அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து பேரிடர் காலங்களில் மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய முக்கிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்திற்குத்தான் இருக்கிறது. இதனை உங்களது சார்நிலை அலுவலர்கள் அனைவருக்கும் நீங்கள் உணர்த்தி செயல்பட வைக்க வேண்டும்.

நேரடி சேவை
குறிப்பாக, மக்களுக்கு நேரடி சேவை வழங்கும் துறைகளில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்க வேண்டும்;மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் கைப்பேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும்;

யாருக்கு முன்னுரிமை
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முன்கூட்டியே மீட்டு, நிவாரண மையங்களில் பாதுகாக்க அதற்குரிய ஏற்பாடுகளை நீங்கள் செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல, அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்க வேண்டும். பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும்போது முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

பலவீனமான சுற்றுச் சுவர்
பழுதடைந்த / பலவீனமான சுற்றுச் சுவர்களை அப்புறப்படுத்த வேண்டும்.வயல்வெளிகளில் பயிர் சேதம் ஏற்படாத வகையில் மழைநீர் வடிவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்குதல், பால் விநியோகம் மற்றும் மின்சாரம் வழங்கல், சமுதாய உணவுக்கூடம், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.

தனித்தனியாக இயங்காமல்
மழைக்காலத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அலுவலர்களும், வருவாய்த்துறை, பொதுப்பணித் துறை, தீயணைப்புத் துறை, வேளாண் துறை ஆகிய பல்வேறு துறை அலுவலர்களும் தனித்தனியாக இயங்காமல், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அரசுத் துறையுடன் சேர்ந்து மக்களும் ஒருங்கிணைந்து செயல்படும் சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

24 மணிநேரமும்
ஒவ்வொரு மாநகராட்சிப் பகுதியிலும் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும் அவசர உதவி மையங்கள் முறையாக செயல்படுவதை கண்காணிப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். நிவாரண மையங்களில் பொதுமக்களைத் தங்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, அவர்களுக்குத் தரமான உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு நிவாரண முகாமிற்கும் ஒவ்வொரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்படவேண்டும்.

சிறு தவறுகள்
நம்முடைய கவனத்திற்கு வரும் பிரச்சனைகளை உடனடியாக நிவர்த்தி செய்து தர வேண்டும். தொலைபேசி மூலமாகவோ - வாட்ஸ்அப் வழியாகவோ வரக்கூடிய கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்யுங்கள். அதிகாரிக்கு அனுப்பினோம், உடனே சரிசெய்து கொடுத்தார்கள் என்று பொதுமக்கள் சொல்வதுதான், மிகப்பெரிய பாராட்டாக இருக்க முடியும். சிறு தவறு என்றாலும் பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தும். அதேநேரத்தில் சிறு உதவி என்றாலும், அது பெரிய நல்ல பெயரையும் ஏற்படுத்தும் என்பதையும் யாரும் மறந்துவிட வேண்டாம்.












Click it and Unblock the Notifications