டீலா? நோ டீலா? திமுகவை டென்ஷனாக்கிய காங்கிரஸ்.. ராகுலுக்கு இது தெரியுமா? எல்லாம் பிரவீன் ப்ளானாமே!
சென்னை: தமிழக அரசியலில் தமிழக வெற்றி கழகத்தின் வரவுக்குப் பிறகு சில அரசியல் மாற்றங்கள் தென்பட தொடங்கி இருக்கிறது. இதுவரை திமுக அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் 2026 தேர்தலில் விஜயை காரணம் காட்டி கூடுதல் தொகுதிகள் கேட்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்திய காங்கிரஸ் தொகுதி பங்கிட்டு குழு ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லையெனில், 5 மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டதாக சொல்லப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தல் சற்று கடினமாக இருக்கும் என்று கருதுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள். காரணம், நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் முதல் தேர்தலை சந்திப்பது தான். எம்எல்ஏக்கள் வெற்றி பெறுவது, ஆட்சியை பிடிப்பது என விஜய் செய்யாவிட்டாலும் கட்சிகளின் வாக்குகளை பெருவாரியாக பிரிப்பார் என்பதே அதற்கு காரணம்.
அதிமுகவுக்கு கிடைக்க கூடிய ஆட்சிக்கு எதிரான மனநிலை வாக்குகளும், திமுகவுக்கு சாதகமான சிறுபான்மை வாக்குகளை விஜய் பெருவாரியாக பிரிப்பார் என சொல்லப்படுகிறது. இது மட்டுமல்லாமல் பெண்கள், இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்களின் வாக்குகளும் விஜய்க்கு செல்லலாம் என சொல்லப்படுகிறது.

ராகுல் விஜய் கூட்டணி
தற்போதைய சூழலில் ஐந்து முதல் 15 சதவீதம் வரை விஜய்க்கு வாக்குகள் செல்லலாம் என கணிக்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க விஜயால் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதிமுக தங்கள் கூட்டணிக்கு தேமுதிக, பாமகவை கொண்டு வர வேண்டுமென நினைக்கிறது. ஆனால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்றால் கூடுதல் தொகுதிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற பேரத்தை முன் வைப்பதால் அதிமுகவிடம் அதிக சீட்டுகளை கேட்பதாக சொல்லப்படுகிறது.
திமுக காங்கிரஸ் மோதல்
இதே போல திமுக கூட்டணியிலும் சிக்கல் இருப்பதை ஒப்புக்கொள்கின்றனர் அந்த கட்சியினர். காரணம் விஜய் ராகுல் நெருக்கம் காரணமாக தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் மறைமுகமாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் ராகுல் காந்தியின் ஆலோசகரான பிரவீன் சக்கரவர்த்தி விஜயை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக காங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை உறுதியாக கூறினார். அதே நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆஃபர்களை வைத்து திமுகவிடம் அதிக தொகுதிகளை காங்கிரஸ் கேட்பதாக சொல்லப்படுகிறது.
2026 தேர்தல் அழுத்தம்
பிஹார் சட்டசபை தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களவை மட்டுமல்லாது மாநிலங்களவையிலும் பாஜகவுக்கு செல்வாக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் மாநிலங்களவையில் சரிந்த செல்வாக்கை ஈடுகட்ட காங்கிரஸ் அடுத்த கட்ட முயற்சியை எடுத்துள்ளது. அதாவது தமிழகத்தில் சட்டமன்ற தொகுதிகளை திமுக ஒதுக்குவதை ஏற்றுக்கொள்வது என காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது. அதாவது 25 தொகுதிகளுக்கு காங்கிரஸ் தலைமை சரி என ஒப்புக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தமிழகத்தில் இருந்து தர வேண்டும் என கேட்டதாக சொல்லப்படுகிறது.
மாநிலங்களவை கோரிக்கை
தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைவர்களும் அல்லது அது சார்ந்த அமைப்புகளில் பிரதிநிதிகள் தான் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஒதுக்கும் தொகுதிகளுக்கு ஓகே சொன்ன காங்கிரஸ் தலைமை, ஆட்சி அதிகாரத்தில் பங்கு தராவிட்டால் மாநிலங்களவை உறுப்பினர் பதவி, அதாவது ஐந்து எம்பிக்கள் தரவேண்டும் என கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் திமுக தலைமை அதிர்ச்சி அடைந்திருக்கிறது.
திமுக கூட்டணி
காங்கிரஸ் இருக்கும் செல்வாக்குக்கு தமிழகத்தில் அதிக சட்டமன்ற தொகுதிகளில் ஒதுக்க முடியாத சூழலில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்பதால் திமுக அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் திமுக கூட்டணி உடையாது எனவும், இருதரப்பையும் சமாதானப்படுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார் என்கின்றனர் திமுகவினர்.












Click it and Unblock the Notifications