போதும்..நான் வர்றேன் தனியா? தனி கட்சி தொடங்கும் ஓ.பன்னீர்செல்வம்? முன்னாள் ர.ர. சொன்ன முக்கிய தகவல்!
சென்னை : அதிமுகவில் அதிகார யுத்தம் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனி கட்சி துவங்க இருப்பதாக அதிமுகவில் நீண்ட காலமாக ஜெயலலிதாவின் ஆதரவாளராக பயணித்தவரும், தற்போது காங்கிரஸ் கட்சியில் இருக்கும் முக்கிய தலைவருமான ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக சிறப்பு பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அந்த நிகழ்விலிருந்தே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எண்ணிக்கை வெகுவாகச் சரிந்துள்ளது.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றம் சென்றார். நீதிமன்றமும், எடப்பாடி தலைமையில் நடந்த பொதுக்குழு செல்லும் என்று அறிவித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அதிமுகவில் கொடிகட்டி பறந்த சேடப்பட்டி முத்தையா! கடைசியில் மனம் வெறுத்து வெளியேறிய கதை தெரியுமா?

ஓங்கும் இபிஎஸ்
இந்த நிலையில், சுமார் இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்து இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்றுக் கொண்டார். எடப்பாடி கட்சி அலுவலகம் வருகையையொட்டி வழிநெடுக அவருக்கு ஆட்டம், பாட்டம், மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்தியடைந்த ஓபிஎஸ் தரப்பு அதிமுக அலுவலக சாவி வழக்கை பெரிதும் நம்பி இருந்தது.

கடும் சோர்வு
அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைத்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த அதிமுக அலுவலக சாவி விவகாரம் தொடர்பான ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். இதனால் கடும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், கடந்த சில வாரங்களாகவே ஓபிஎஸ் முகாமுக்கு சறுக்கல் தான் ஏற்பட்டு வருகிறது. பொதுக்குழுவில் அவமதிப்பு, நிர்வாகிகள் எடப்பாடி தரப்புக்கு தாவியது, அதிமுக அலுவலகத்துக்கு செல்ல அனுமதி மறுப்பு என அடுத்தடுத்த அடிகளால் கடும் சோர்வில் உள்ளனர் அவரது அணியினர்.

தனி கட்சி
இந்த நிலையில் தான் ஓ.பன்னீர்செல்வம் தனி கட்சி ஆரம்பிக்கப் போவதாக தகவல் வந்திருக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசு கூறியிருக்கிறார். தொடர்ந்து நீதிமன்றங்களை தோல்வியை சந்தித்து வரும் ஓ.பன்னீர் செல்வத்தின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என அனைவருமே எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் திருநாவுக்கரசரின் இந்த தகவல் ஆனது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருநாவுக்கரசர்
வெறும் காங்கிரஸ் கட்சியை மட்டும் சேர்ந்தவர் என்றால் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்று இருக்காது. அதிமுகவில் எம்ஜிஆர் மறைவின் போது ஜெயலலிதாவுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்களில் ஒருவர் திருநாவுக்கரசர். பல்வேறு இக்கட்டான சூழல்களை ஜெயலலிதாவுக்கு அரணாக இருந்து பாதுகாத்தவர். பின்னர் பல்வேறு காரணங்கள் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் தான் தற்போது அவர் ஓ பன்னீர்செல்வம் தனி கட்சி துவங்க இருப்பதாக கூறி இருக்கிறார்..

திடீர் பரபரப்பு
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக பேசிய திருநாவுக்கரசர்," ஓ.பன்னீர்செல்வம் தனி கட்சி ஆரம்பிக்க போவதாக தகவல் வருகிறது. சசிகலா அடிக்கடி அதிமுகவை கைப்பற்றிய திருவெண் என்று அறிக்கை விடுகிறார் அதிமுகவிலிருந்து தினகரன் பிரிந்து ஒரு தனி கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகிறார். இந்த விஷயங்களை எல்லாம் மக்கள் எப்படி அங்கீகரிக்கிறார்கள் என்பதை பொறுத்து தான் அரசியல் களம் மாறும் என பேசி இருக்கிறார். அதிமுகவில் தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வரும் ஓ பன்னீர்செல்வம் விரைவில் தணைக்கட்சி தொடங்குவார் என ஏற்கனவே யூகங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் திருநாவுக்கரசரின் இந்த வேட்டியானது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.