உஷார்..! மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்.. கற்ற பாடத்தை மறக்கலாமா? தீவிர ஆக்ஷன் எடுக்கப்படுமா?
தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுத்துள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆனால், மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்து வருவது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கக் காரணமாகிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இப்போதெல்லாம் பொதுமக்கள் மாஸ்க் அணிந்திருப்பதையே பார்க்க முடிவதில்லை. கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படாவிட்டால், மீண்டும் அதிகமான பரவலுக்கு வழிவகுக்கும் என்ற நிலை உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட உடல் நலம் மற்றும் பொருளாதார பாதிப்புகளைக் கண்கூடாக கண்ட நாம் இனியும் இன்னொரு அலை உருவாகக் காரணமாக இருந்துவிடக்கூடாது என்பதை உணர்வது அவசியம்.

மீண்டும் கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக வெகுவாக அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் தற்போது 402 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இல்லாத நிலை உள்ளது.

தமிழ்நாட்டிலும் பரவல்
இந்திய அளவில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு 500க்கும் குறைவாகவே இருந்து வந்தது. ஆனால், கடந்த வாரம் 500 என்ற எண்ணிக்கையை எட்டியது. சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா பாதிப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. தற்போது இந்தியா முழுவதும் இந்த பாதிப்பு பெருகிக் கொண்டு இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் எனத் தெரிவித்தார்.

இளங்கோவனுக்கு கொரோனா தொற்று
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்க் கூட அணிவதில்லை
இப்படியாக, மீண்டும் கொரோனா தொற்று வேகமெடுப்பது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படாதது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலுக்கு எதிரான மிக முக்கியமான நடவடிக்கையாக பரிந்துரைக்கப்பட்ட முகக் கவசத்தைக் கூட இப்போதெல்லாம் மக்கள் யாரும் அணிவதில்லை.

முன்னெச்சரிக்கை அவசியம்
கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த சமயத்தில் உடல் நலப் பாதிப்புகள், உயிரிழப்புகள் ஒருபக்கம், கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் ஒருபக்கம் என பெரும் பாதிப்புகளைச் சந்தித்தோம். மீண்டும் அப்படியொரு நிலை வந்துவிடக் கூடாதென்றால், விழிப்புணர்வு முயற்சிகளை தீவிரப்படுத்துவதோடு, மருத்துவ முகாம்களையும் நடத்த வேண்டும், தமிழ்நாடு அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.












Click it and Unblock the Notifications