கச்சா எண்ணெய் விலை குறைகிறது... இந்தியாவில் மட்டும் பெட்ரோல் விலை ஏறுகிறது - ராமதாஸ் காட்டம்
சென்னை: 9 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 உயர்த்தப்பட்டு இருக்கும் நிலையில் அதை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
நாடு முழுவதும் கடந்த 4 மாதங்களாக உயர்த்தப்படாமல் இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலையை கடந்த சில நாட்களாக எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.
சாமானிய மக்களை கடுமையாக பாதித்து இருக்கும் இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

பெட்ரோல், டீசல் விலை ரூ.5-க்கும் மேல் உயர்வு
அதில், "சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகளும், டீசல் விலை 76 காசுகளும் உயர்த்தப்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து ஆறாவது நாளாக உயர்த்தப்பட்டிருக்கின்றன. கடந்த 9 நாட்களில் 8 தவணைகளில் பெட்ரோல் விலை ரூ.5.29, டீசல் விலை ரூ.5.33 உயர்த்தப்பட்டிருக்கிறது!

நடுத்தர குடும்ப பட்ஜெட்டில் பெட்ரோலுக்கு ரூ.5,000 செலவு
பெட்ரோல் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் அவற்றின் இரு சக்கர ஊர்திகளின் எரிபொருளுக்காக மட்டும் மாதம் ரூ.5 ஆயிரத்திற்கும் கூடுதலாக செலவிட வேண்டியிருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.106.69 , டீசல் விலை ரூ.96.76 என்பது நினைத்துப் பார்க்க முடியாத விலை ஆகும்!

கச்சா எண்ணெய் விலை குறையும்போது விலையேற்றம் நியாயமல்ல
ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில், உள்நாட்டு சந்தையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருவது நியாயமல்ல. இதனால் அனைத்து மக்களும் பாதிக்கப்படுவார்கள்!

அத்தியாவசிய பொருட்கள் விலை மேலும் உயரும்
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், இனியும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இத்தகைய நிலையைத் தவிர்க்க உற்பத்தி வரிக் குறைப்பின் மூலம் பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு குறைக்க வேண்டும்!" என கேட்டுக்கொண்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications