எல்லாம் சரியா வேலை செய்யுதா? காவலர்கள் ரெடியாக இருக்கனும்! டிஜிபி அலுவலத்திலிருந்து பறந்த உத்தரவு!
சென்னை : கலவரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழகத்தில் உள்ள ஆயுதப்படை காவலர்கள், சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரியும் இளம் காவலர்களுக்கும் ஒவ்வொரு வாரமும் இரண்டு அல்லது மூன்று முறை கவாத்துப் பயிற்சி வழங்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் சுமார் 90 இந்து அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

டிஜிபி சைலேந்திர பாபு
இந்த நிலையில் தமிழகத்தில் ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்களுக்கு கலவரத்தை கட்டுப்படுத்தும் பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பட்டுள்ள சுற்றறிக்கையில்," மாவட்டம் மற்றும் மாநகர ஆயுதப்படையில் உள்ள காவலர்கள், சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணிபுரியும் இளம் காவலர்களுக்கும் ஒவ்வொரு வாரமும் இரண்டு அல்லது மூன்று முறை கவாத்துப் பயிற்சி வழங்க வேண்டும்.

காவலர்களுக்கு பயிற்சி
இப்பயிற்சியை ஆயுதப் படையில் உள்ள உயர் அதிகாரிகள் கண்காணிக்கவும், கலந்து கொள்ளவும் அவர்களை அறிவுறுத்த வேண்டும். ஆயுதப்படையில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்கள் கலவர சம்பவங்களில் படையை வழி நடத்துவதற்கு அவ்வப்போது உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.

சரியாக வேலை செய்கிறதா?
ஆயுதப்படையில் கேடயம், லத்தி, ரப்பர் தோட்டாக்கள், பிளாஸ்டிக் தோட்டாக்கள், பம்ப் ஆக்சன் கன், கேஸ் கன், கேஸ் செல்கள் மற்றும் இதர ஆயுதங்கள் போதுமான அளவில் உள்ளதா? சரியாக வேலை செய்கிறதா? என அவ்வப்போது தணிக்கை செய்வதுடன், எவ்வாறு கையாள வேண்டும்? என கவாத்து பயிற்சியின்போது உரிய பயிற்சி வழங்க வேண்டும். கலவரத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் வஜ்ரா, வருண் மற்றும் இதர வாகனங்களை முறையாக பராமரித்து தயார் நிலையில் வைப்பதற்கு அறிவுறுத்தப்பட வேண்டும்.

முக்கிய உத்தரவு
ஒலி பெருக்கிகள் மூலம் போராட்டக்காரர்களை கலைப்பதற்கும், போராட்டம் நடக்கும்போது அதனை ஒளிப்பதிவு செய்யவும் காவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். எனவே நகர மற்றும் மாவட்ட ஆயுதப்படை காவலர்களை தயார் நிலையில் வைத்து, முக்கிய நிகழ்வுகள் மற்றும் அவசரகால பணிகளுக்கு உட்படுத்த அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications