தேமுதிக அலுவலகத்தில் கையெடுத்து கும்பிட்ட விஜயகாந்த்.. உற்சாகத்தை வெளிப்படுத்திய தொண்டர்கள்!
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேசியக் கொடி ஏற்றி வைத்து தொண்டர்களை சந்தித்துள்ளார்.
Recommended Video
நாடு முழுவதும் 76ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியும், தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கொடியேற்றி உரையாற்றினர். இதனைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் தேசியக் கொடியேற்றி வருகின்றனர். அதேபோல் பல்வேறு கட்சியினரும் அவர்களது கட்சி அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர்.
டெல்லி: டிராலியில் 2215 தோட்டாக்கள்! சுதந்திர தினத்தை சீர்குலைக்க திட்டமா? 6 பேரிடம் தீவிர விசாரணை

விஜயகாந்த் உடல்நிலை
இந்த நிலையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேசிய கொடியை ஏற்றி உள்ளார். உடல் நிலை சரியில்லாமல் அவதியுற்று வரும் விஜயகாந்த், சில ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.

புகைப்படங்கள்
இதனால் அவரது கட்சி நடவடிக்கைகளை அவரது குடும்பத்தினரே மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில்கூட அவர் போட்டியிடவில்லை. அவரது பெயர்களில் அறிக்கைகளும், அவ்வப்போது குடும்பத்தினருடன் விஜயகாந்த் இருக்கும் புகைப்படங்கள் மட்டுமே வெளியிடப்படும்.

விரல் அகற்றம்
அதுமட்டுமல்லாமல் சில நாட்களுக்கு முன் நீரழிவு பிரச்சனையால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது. இதனிடையே உடல்நிலை நலிந்த நிலையில், சமூக வலைதளங்களில் வெளியாகிய புகைப்படம் திரையுலகினர் உட்பட அனைவரையும் கலங்க செய்தது.

உற்சாகத்தில் தொண்டர்கள்
இந்த நிலையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று காலை அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தேசிய கொடியை ஏற்றினார். நீண்ட நாட்களுக்கு பின் வெளியே வந்த விஜயகாந்தை பார்க்க அவரது கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள், ரசிகர்கள் அனைவரும் பெருமளவில் திரண்டனர். விஜயகாந்தை பார்த்த உற்சாகத்தில் தொண்டர்கள் ஆரவாரம் செய்து உற்சாகத்தை வெளிப்படுத்த, அவர்களின் ஆரவாரத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் விஜயகாந்த் கையெடுத்து குடும்பிட்டு, வெற்றிக் குறியை காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.