தேச பாதுகாப்பில் திமுக அரசுக்கு அக்கறை இல்லை.. உளவுத்துறையை முறையாக பயன்படுத்தவில்லை- அண்ணாமலை பரபர!
சென்னை : தேசப் பாதுகாப்பில் சிறிதும் அக்கறை காட்டாத அரசு இது. நாங்கள் தொடர்ந்து எச்சரித்து வந்தாலும் திமுக அரசு விழித்துக் கொள்ளவில்லை என கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உளவுத்துறையை அரசியல் ரீதியாகவே பயன்படுத்தி வருகின்றனர். பயங்கரவாதத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டனர் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
முறையான அதிகாரிகள் பதவியில் இருந்திருந்தால் இந்தச் சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும் என கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை கார் வெடிப்பு
கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டைமேடு வழியாக கடந்த 23-ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் சென்ற கார் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் காரை ஓட்டிவந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் ரசாயனப் பொருட்கள் கண்டறியப்பட்டன. அதைத்தொடர்ந்து, 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

தற்கொலைப்படை தாக்குதல்?
ஜமேஷா முபின் வீடு அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சம்பவத்துக்கு முந்தைய நாள் இரவு 11.25 மணிக்கு முபின் வீட்டில் இருந்து அவர் உள்ளிட்ட 5 பேர் ஒரு பெரிய மூட்டையை தூக்கிச் சென்று காரில் ஏற்றும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து முபினுடன் தொடர்பில் இருந்த நபர்கள், அவரது கூட்டாளிகள் விசாரிக்கப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, , திட்டமிட்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதா என்று அவர்களிடம் தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.

என்.ஐ.ஏ விசாரணை
வெடிபொருட்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், கைது செய்யப்பட்டவர்கள் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று என்.ஐ.ஏ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. உடனடியாக களத்தில் இறங்கிய என்.ஐ.ஏ தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே, கோவை கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை நேற்று பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.

அண்ணாமலை
இந்நிலையில் இன்று ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "உள்நாட்டுப் பாதுகாப்பு, தேசப் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறிதும் அக்கறை காட்டாத அரசு இது. 2019ல் இலங்கையில் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கும் இந்த கோவை சம்பவத்திற்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. ஆனால், பாஜக மத பிரிவினையை தூண்டுவதாக திமுக விமர்சிக்கிறது. நாங்கள் உண்மை நிலவரங்களையே சொல்கிறோம்.

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்
பலியான ஜமேசா முபினின் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் இது தற்கொலைப்படை தாக்குதல் என்பதை தெளிவாகச் சொல்கிறது. ஆனாலும், பயங்கரவாதம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யக் கூட இந்த திமுக அரசு தயங்குகிறது. தீபாவளிக்கு முன் தினம் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. 1998ல் வணிக வளாகங்களை குறிவைத்து கோவையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டிருக்கலாம்.

முறையான அதிகாரிகள் இல்லை
தமிழக உளவுத்துறை இந்தியாவிலேயே சிறப்பானது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உளவுத்துறையை அரசியல் ரீதியாகவே பயன்படுத்தி வருகின்றனர். பயங்கரவாதத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டனர். முதல்வரின் இமேஜை உயர்த்தும் வேலைகளிலேயே அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர். முறையான அதிகாரிகள் பதவியில் இருந்திருந்தால் கோவையில் நடந்த இந்தச் சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும். நாங்கள் தொடர்ந்து எச்சரித்து வந்தாலும் அரசு விழித்துக் கொள்ளவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications