மேகதாது விவகாரம்.. டெல்லி செல்லும் வைகோ.. மதிமுக மா.செ. கூட்டம் ஒத்திவைப்பு..!
சென்னை: மதிமுக மாவட்ட மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் வரும் ஜூன் 25ம் தேதி நடக்கவிருந்த நிலையில், தேதி மாற்றம் செய்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் ஜூன் 23ம் தேதிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக வழக்கு தொடுத்துள்ளது. இந்தநிலையில் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்கே ஹல்தர், வரும் 23ம் தேதி நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார். இது தமிழக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் அறிக்கை
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவிரி உரிமை காக்க தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடும். மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் என்று உறுதியளித்தார். அதுமட்டுமல்லாமல், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டமன்ற கட்சிகளின் குழு டெல்லி செல்லும் என்று தெரிவித்திருந்தார்.

டெல்லி செல்லும் தமிழக குழு
இதனைத்தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்திக்க தமிழக அரசு சார்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் தமிழக குழு டெல்லி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தக் குழுவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உடன் செல்லவுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

வைகோ அறிக்கை
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என தமிழக அரசு வலியுறுத்தி வருகின்றது. இதுகுறித்து, தமிழக சட்டமன்றக் கட்சிகள் அடங்கிய குழு, டெல்லிக்குச் சென்று, மத்திய அமைச்சரைச் சந்தித்து, தமிழக அரசின் நிலையை எடுத்துக் கூற இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கின்றார். அந்தக் குழுவில் நானும் பங்கேற்க வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேட்டுக்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

மாவட்டச் செயலாளர் கூட்டம் மாற்றம்
இதனைத்தொடர்ந்து வரும் ஜூன் 25ம் தேதி சென்னை தாயகத்தில் நடைபெற இருந்த, மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 3 நாட்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில், மதிமுக உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வரும் ஜூன் 28ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications