ஓபிஎஸ் கேட்ட அஜெண்டா ரெடி.. பொதுக்குழுவில் ஒரு ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் எடப்பாடி தரப்பு!
சென்னை : அதிமுக பொதுக்குழுவில், ஒற்றைத் தலைமை குறித்த விவாதத்தைக் கிளப்பி, சிறப்புத் தீர்மானமாக அதைக் கொண்டு வந்து நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டுள்ளனராம்.
இந்த முயற்சி நீதிமன்றத்தில் செல்லுபடியாகாமல் போகும் என்ற நிலை இருந்தாலும், பொதுச் செயலாளர் பதவியைப் பெற இந்தப் பொதுக்குழுவிலேயே முடிந்தவரை மோதிப் பார்த்துவிடலாம் என்ற கணக்கில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவின் ஒற்றைத் தலைமை மோதலால், வரும் ஜூன் 23ல் சென்னையில் நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு, அதிமுகவினரை தாண்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பொதுக்குழு கூட்டம்
அதிமுக செயற்குழு,பொதுக்குழு கூட்டம் ஜூன் 23 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்காக, தீர்மானங்கள் தயாரிக்கும் குழுவின் கூட்டம், கடந்த 18ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

விடாப்பிடிடாக எடப்பாடி
இந்நிலையில், இன்று மீண்டும் தீர்மானக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுக்குழு கூட்டம் நடத்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், எடப்பாடி தரப்பினரோ, பொதுக்குழுவை நடத்தியே தீருவது என உறுதியாக இருக்கின்றனர். இந்நிலையில், இரண்டு தரப்பினரும் அடங்கிய தீர்மானக் குழுவினர் தீர்மானங்களை தயாரித்து முடித்துள்ளனர்.

ஓ.பி.எஸ் கடிதம்
இதற்கிடையே நேற்று பொதுக்குழு கூட்டம் தொடர்பான பொருள் அடங்கிய அஜெண்டா கிடைக்கப்பெறவில்லை என கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், பல மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் தன்னிடம் முறையிட்டுள்ளதாகவும், கூட்டத்திற்கான அஜெண்டாவை நிர்ணயம் செய்து கூட்டத்தை நடத்துவது அவசியம் என சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவிப்பதாலும் பொதுக்குழு கூட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைக்கலாம் என இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதினார் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். இந்தக் கடிதம் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி வேகம்
இதன் காரணமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் பொதுக்குழு கூட்டத்திற்கான அஜெண்டாவை தயார் செய்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த எடப்பாடி பழனிசாமி தனது தரப்பினரை வேகப்படுத்தியுள்ளார். அதன்படியே, என்னென்ன விஷயங்கள் பொதுக்குழுவில் பேசப்படும், என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்பது குறித்த பட்டியல் வேகவேகமாக இறுதி செய்யப்பட்டுள்ளதாம்.

23 தீர்மானங்கள்
அ.தி.மு.க கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க அரசு முடக்குவதைக் கண்டித்தும், ஆளும்கட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் தீர்மானங்கள் கொண்டு வரப்படுகிறது. இது தவிர முல்லைப் பெரியாறு அணை, மேகதாது, காவிரி பிரச்சனை போன்ற பொதுவான பிரச்சினைக்குரிய தீர்மானங்களும் இடம்பெறுகின்றன. இந்த தீர்மானங்களை யார் யார் முன்மொழிவது, வழிமொழிவது என்பது போன்ற பட்டியலும் தயாராகியுள்ளதாம்.

ஒற்றைத் தலைமை தீர்மானம் இல்லை
இந்தப் பட்டியலில் ஒற்றைத் தலைமை தீர்மானம் குறித்தோ, கட்சியின் நிர்வாக மாற்றம் தொடர்பாகவோ எந்தத் தீர்மானமும் இல்லை. பொதுக்குழுவில் இந்த 23 தீர்மானங்களையும் நிறைவேற்றிய பிறகு, ஒற்றைத் தலைமை குறித்த விவாதத்தைக் கிளப்பி, சிறப்புத் தீர்மானமாக அதைக் கொண்டு வந்து நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டுள்ளனராம்.

நிறைவேற்றி விடலாம்
பொதுக்குழுவில் தனக்கு போதிய ஆதரவு இருப்பதால், ஓ.பி.எஸ் எதிர்ப்பை மீறி இந்த சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றி விடலாம் என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. அதேநேரம், இது தொடர்பாக ஓ.பி.எஸ் நீதிமன்றத்தை நாடினால், இந்தத் தீர்மானம் செல்லுபடி ஆகாமல் போக வாய்ப்பிருப்பதாக சட்ட வல்லுநர்கள் கூறியதையும் மனதில் வைத்திருக்கிறார் ஈபிஎஸ்.
Recommended Video

மோதிப் பார்க்க திட்டம்
எது எப்படியோ.. பிரச்சனை இந்த அளவுக்கு வந்து விட்ட பிறகு, தனக்கு ஆதரவாளர்கள் பலமும் அதிகரித்துள்ளதால் இப்போது கூடும் பொதுக்குழுவிலேயே வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்கிற கணக்கில், பொதுச் செயலாளர் பதவியைப் பெற முடிந்தவரை மோதிப் பார்த்துவிடலாம் என்ற கணக்கில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்..!












Click it and Unblock the Notifications