ஓபிஎஸ்ஸால் ஒண்ணுமே செய்ய முடியாது.. பாயிண்டை பிடித்து உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கும் ஈபிஎஸ் டீம்!
சென்னை : அதிமுக பொதுக்குழு தொடங்கும் நேரத்துக்கு 15 நிமிடங்கள் முன்னதாக ஐகோர்ட் தீர்ப்பு வழங்க இருப்பதால், தங்களுக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வரும் என நம்பிக்கையோடு இருக்கிறார்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள்.
Recommended Video
பொதுக்குழு உறுப்பினர்களை அரங்கில் கூட்டிய பிறகு, கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட வாய்ப்பில்லை, நீதிபதியும் அந்த எண்ணத்தின்படி தீர்ப்பை பொதுக்குழு நேரத்துக்கு சற்று முன்னதாக ஒத்தி வைத்துள்ளார் என்கின்றனர் ஈபிஎஸ் தரப்பினர்.
இந்த வழக்கில் ஐகோர்ட் அளிக்கும் தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்யக்கூட நேரம் இருக்காது என்றும் உற்சாகமாக இருக்கின்றனர் எடப்பாடி ஆதரவாளர்கள்.

பொதுக்குழுவுக்கு தடை?
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க உள்ளனர். இதனிடையே, அதிமுக பொதுக்குழு நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் நடத்தப்படும் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

15 நிமிடங்கள் முன்னதாக
ஐகோர்ட்டில் நடைபெற்ற நேற்றைய விசாரணையில், இருதரப்பினரும் காரசாரமான வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திங்கள் காலை 9 மணிக்கு பொதுக்குழு கூட்டம் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை தள்ளிவைத்தார். 11ஆம் தேதி காலை 9.15 மணிக்கு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், 9 மணிக்கு பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

முழுவீச்சில் ஏற்பாடுகள்
அதே நேரம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டத்தில் பொதுக்குழுவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. பொதுக்குழு கூட்டத்துக்கு வரும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தில் க்யூஆர் கோடு, ஆர்எஃப்ஐடி வசதியுடன் கூடிய அடையாள அட்டை வழங்கவும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு.

ஏற்பாடுகள் தயார்
தற்போது, ஸ்ரீவாரு திருமண மண்டபம் பொதுக்குழுவுக்கு தயார்நிலையில் உள்ளது. திறந்தவெளியில் பந்தல் அமைக்கப்பட்டு பொதுக்குழு நிகழ்விற்கு சமூக இடைவெளியை பின்பற்றி 3 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டு வருகின்றன. அலங்கார வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள கட்சி ரீதியான 75 மாவட்டங்களை சேர்ந்த செயற்குழு உறுப்பினர்கள் அமர்வதற்கான கூடங்களும் தயார் நிலையில் உள்ளன. அவர்கள் கையெழுத்திட ஏதுவாக மேஜைகளும், அமைக்கப்பட்டுள்ளன. உணவருந்தும் கூடங்களும் ரெடியாகியுள்ளன.

முந்தைய நாளே
வெளியூர்களில் இருந்து பொதுக்குழு கூட்டத்திற்காக சென்னை வரும் பொதுக்குழு உறுப்பினர்களை அழைத்து வருவதற்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சென்னைக்கு பேருந்து ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் செய்துள்ளனர். தேவையற்ற தாமதத்தை தவிர்க்கும் விதமாக, ஒருநாள் முன்னதாக, 10-ஆம் தேதியே அனைத்து உறுப்பினர்களும் சென்னை வந்துவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தீர்ப்பு சாதகமாக வரும்
இதுதொடர்பாக அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், நீதிமன்ற தீர்ப்பு பொதுக்குழு தொடங்குவதற்கு கால் மணி நேரம் முன்னதாகத்தான் வருகிறது என்றாலும், நாங்கள் பொதுக்கூட்ட அரங்கை தயார் நிலையில் வைத்திருக்கிறோம். எப்படியும் எங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். எல்லோரையும் பொதுக்குழுவில் அமர வைத்த பிறகு பொதுக்குழுவுக்கு தடை விதிக்கப்படாது என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

ஓபிஎஸ்ஸூ அவகாசம் இல்லை
பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓபிஎஸ் தரப்புக்கு எதிரான தீர்ப்பு வந்தால் அவருக்கு மேல்முறையீடு செய்யக் கூட அவகாசம் கிடைக்காது. கால் மணி நேரத்தில் நீதிமன்றம் சென்று அவசரமாக விசாரிக்கச் சொல்ல முடியாது. அதனால், வெற்றி எங்களுக்குத்தான். பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆவது உறுதி. நீதிமன்றத் தீர்ப்பை பொதுக்குழு அரங்கில் இருந்தபடியே கொண்டாடப்போகிறோம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications