1973 திண்டுக்கல் இடைத்தேர்தலுக்கு நிகரானது.. எடப்பாடி பலம் நிரூபிக்கப்படும்.. ராஜன் செல்லப்பா பேட்டி
சென்னை: 1973ம் ஆண்டு நடைபெற்ற திண்டுக்கல் இடைத்தேர்தலை போல், அதிமுகவுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முக்கியமானது என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். அதேபோல் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறிய அவர், இந்த இடைத்தேர்தல் மூலமாக எடப்பாடி பழனிசாமியின் பலம் நிரூபிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவா் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா. 46 வயதான இவர், கடந்த ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனைத்தொடா்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பொதுவாக தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடக்கும். அதேபோல் இடைத்தேர்தல்கள் மற்ற முக்கிய தேர்தல்களுடன் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிப்.27ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்றுமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மாவட்டத்தில் அமலுக்கு வந்தன. திமுக ஆட்சிக்கு வந்தபின், நடக்க உள்ள முதல் இடைத்தேர்தல் என்பதால் மக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம்
இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார்? மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படுமா? அப்படி ஒதுக்கப்பட்டால் எந்த்க சின்னத்தில் போட்டியிடும்? அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும்? இடைத்தேர்தல் காரணமாக ஓபிஎஸ் - இபிஎஸ் இணைப்பு சாத்தியமா என்ற கேள்விகள் எழுந்தன.

அதிமுக - தமாக
இதனிடையே தமாக தலைவர் ஜிகே வாசனை அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் சந்தித்து ஆலோசித்துள்ளனர். இதுகுறித்து அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறுகையில், இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக தலைமை என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது தெரியவில்லை. ஆனால் கூட்டணியாக நல்ல புரிதலோடு இருக்கிறது.

1973 திண்டுக்கல் இடைத்தேர்தல்
அதிமுகவும் தமாகவும் நல்ல உறவில் இருக்கிறார்கள். அதேபோல் இந்த இடைத்தேர்தலை நல்ல வாய்ப்பாக தொண்டர்கள் பார்க்கிறார்கள். எங்களை பொறுத்தவரை இது திண்டுக்கல் இடைத்தேர்தல் போன்று தான். 1973ம் ஆண்டு அதிமுக வெற்றிபெற்று நிரூபித்து காட்டியது போல், இந்த இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அனைவருக்கும் நிரூபித்து காட்டுவார்.

பலம் யாருக்கு?
இந்த இடைத்தேர்தல் வெற்றி மூலம் தொண்டர்களின் பலத்தை அடையாளப்படுத்தி, நிரூபிக்கக் கூடிய தேர்தலாக இருக்கும். ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை, கடந்த முறை மட்டுமே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. அதற்கு முன், அதிமுக வேட்பாளர் தான் நிறுத்தப்பட்டு வெற்றிபெற்றார் என்று தெரிவித்தார்.

சின்னம் கிடைக்குமா?
தொடர்ந்து, இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற கேள்விக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டாலும் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடும். இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் நல்ல முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்றால், என்ன நடக்கும் என்ற விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை.

ராஜன் செல்லப்பா நம்பிக்கை
இன்றைய சூழலில் திமுக மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் மக்கள் மத்தியில் திமுகவுக்கும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கும் இடையிலான போட்டியாகவே பார்க்கப்படுகிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்று நம்புவதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications