சிறுமி சீரழிப்பு வழக்கில் சிறைக்கு போன நாஞ்சில் முருகேசன் திடீரென சசிகலாவுடன் சந்திப்பு
சென்னை: பெங்களூருவில் 4 ஆண்டு சிறை தண்டனையை நிறைவு செய்துவிட்டு தமிழகம் திரும்பியிருக்கும் சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் இன்று சந்தித்து பேசினார்.
2011 சட்டசபை தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நாஞ்சில் முருகேசன். கடந்த ஆண்டு இவர் மீது தாய், மகள் இருவரை சீரழித்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பெற்ற தாயை சீரழித்த கையோடு மகளையும் தாம் மட்டுமல்லாமல் நண்பர்களுக்கும் விருந்தாக்கினார் நாஞ்சில் முருகேசன் என்பது புகார். இந்த வழக்கில் தப்பி ஓடி தலைமறைவாக இருந்தவர் நாஞ்சில் முருகேசன். பின்னர் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அதிமுகவில் இருந்தும் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சென்னை திரும்பிய சசிகலாவை நாஞ்சில் முருகேசன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முருகேசன், தவறு செய்தவர்கள்தான் நன்றி கெட்டவர்கள். விரைவில் அனைவரும் சசிகலா காலில் விழுவார்கள் என்றார்.
ஏற்கனவே நாஞ்சில் முருகேசன் அதிமுக கொடியை பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த கோரி கன்னியாகுமரி மாவட்ட போலீசில் அதிமுகவினர் புகார் மனு கொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.