தமிழகத்தில் வறண்ட வானிலை....ஜனவரி 6 வரை பனிமூட்டம் - அப்போ மழை அவ்ளோதானா?
இன்று முதல் ஜனவரி 6ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் காலை நேரங்களில் பொதுவாக பனிமூட்டம் காணப்படும்.
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த இரு தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று முதல் ஜனவரி 6ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் காலை நேரங்களில் பொதுவாக பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் இறுதியில் தொடங்கியது. நவம்பர் மாதம் முழுவதும் மழை கொட்டித்தீர்த்தது. டிசம்பர் மாத இறுதியில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது.
டெல்டா மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த அதிகனமழையால் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்கதிர்கள் சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வெள்ளநீர் வடிந்தால் மட்டுமே பயிர்களை அறுவடை செய்ய முடியும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவு மழை எங்கும் பதிவாகவில்லை.

லேசான மழை
இந்த நிலையில் சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இன்றும் நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். டிசம்பர் 6ஆம் தேதி தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

மிதமான மழை
டிசம்பர் 7ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். டிசம்பர் 8ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஜனவரி 6 வரை பனிமூட்டம்
இன்று முதல் ஜனவரி 6ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் காலை நேரங்களில் பொதுவாக பனிமூட்டம் காணப்படும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும். அதிகபட்ச வெப்பநிலை 29 குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

மீனவர்கள் கவனம்
இன்று ஜனவரி 4ஆம் தேதி குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். நாளை ஜனவரி 5ஆம் தேதி குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications