தெளிய விட்டு தெளிய விட்டு தாக்கும் மழை...காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு அதிகனமழை
அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: நவம்பர் மாதத்தில் 3வது முறையாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. 24 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழ்நாட்டில் நாளை முதல் 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், காரைக்கால், புதுச்சேரி, கேரளாவில் அதிகன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்தது. திருவள்ளூர் தொடங்கி கன்னியாகுமரி வரைக்கும் ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. அணைகள் நிரம்பியுள்ளதால் ஆறுகளில் உபரி நீர் திறந்து விடப்படுகிறது.
காவிரியாற்றிலும் கொள்ளிடம் ஆற்றிலும் பல ஆயிரம் கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. தென்பெண்ணை, பாலாற்றில் விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கடலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. ஆற்றங்கரையோரம் கட்டப்பட்டிருந்த வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

கனமழைக்கு வாய்ப்பு
கடந்த சில நாட்களாக மழை குறைந்து வெயில் அடித்தாலும் ஆறுகளில் வெள்ளம் குறைந்தபாடில்லை. வெப்பச்சலனம் வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சியின் காரணமாக ஆங்காங்கே மழை பெய்தது.
இந்த நிலையில் மீண்டும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்தம்
தென்மேற்கு வங்கக்கடல் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் தெற்கு தமிழ்நாடு கடல் பகுதிகள் இடையே வரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகனமழை
தமிழ்நாட்டில் நாளை முதல் 26ஆம் தேதி வரைக்கும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், காரைக்கால், புதுச்சேரி, கேரளாவில் 25 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை அதி கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களில் மழை
ஒரே மாதத்தில் 3வது முறையாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications