தமிழில் பேசும் பிரதமர்.. மறுபுறம் இந்தி திணிப்பு? ரோஜ்கார் மேளாவில் இந்தி பேனர்.. மீண்டும் சர்ச்சை!
சென்னை : சென்னை உட்பட நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்ற ரோஜ்கார் மேளா நிகழ்வில் முழுக்க முழுக்க இந்தியிலேயே பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், இன்று சென்னையில் நடத்தப்பட்ட ரோஜ்கார் மேளா நிகழ்வில் இந்தியில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எஃப்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று 208 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அந்த நிகழ்ச்சியின் மேடை உட்பட பல இடங்களில் இந்தியிலேயே விளம்பர பேனர்கள் அமைக்கப்பட்டிருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

ரோஜ்கார் மேளா
வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முத்ரா யோஜ்னா உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில் தொடங்க கடன் வழங்கப்பட்டு வருகிறது. இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பை வழங்க ரோஜ்கார் மேளா திட்டம் உருவாக்கப்பட்டது.

இரண்டாவது கட்டமாக
கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி ரோஜ்கார் மேளாவை (வேலைவாய்ப்பு திருவிழாவை) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அன்றைய தினம் முதற்கட்டமாக 75,226 பேருக்கு அரசு பணிக்கான ஆணைகளை அவர் வழங்கினார். அதன் தொடர்ச்சியாக இன்று 71,000 பேருக்கு அரசுப் பணிக்கான ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக்காட்சி வாயிலாக வழங்கினார்.

45 இடங்களில்
இன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகப் பங்கேற்ற பிரதமர் மோடி, நாடு முழுவதும் 45 இடங்களில் புதிய வேலைவாய்ப்பு பெற்ற 71ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் நடப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அந்த மாநிலங்களில் மட்டும் வேலைவாய்ப்பு மேளா நடக்கவில்லை.

சென்னையில் இந்தி
தமிழ்நாட்டில் சென்னை ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எஃப்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று 208 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அந்த நிகழ்ச்சியின் மேடை உட்பட பல இடங்களில் முழுக்க முழுக்க தமிழ் மொழியைப் புறக்கணித்து இந்தியிலேயே விளம்பர பேனர்கள் அமைக்கப்பட்டிருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

தமிழ் - இந்தி
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழில் பேசுகின்றனர், திருக்குறள் சொல்கின்றனர். தமிழ் மொழி பற்றி உயர்வாகவும் பேசுகின்றனர். தமிழ் மொழி மற்றும் தமிழர் கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்தும் வகையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்வையும் முன்னெடுத்து நடத்தி வருகிறது பாஜக அரசு.

தமிழ் மொழியை புறக்கணித்து
இந்நிலையில், தமிழ்நாட்டில் நடைபெற்ற அரசு நிகழ்வில், முழுக்க முழுக்க தமிழைப் புறக்கணித்து இந்தியில் பேனர் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தி திணிப்புக்கு எதிராக முதல் குரல் எழுப்பும் தமிழ்நாட்டிலேயே, இந்தியை திணிக்கும் வகையில், பாஜக தொடர்ந்து செயல்பட்டு வருவது விவாதங்களைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications