இந்த ரகசியம் செல்லூர் ராஜூக்கு தான் தெரியும்.. எனக்கு தெரியாது.. அமைச்சர் ஐ பெரியசாமி பொளேர்
சென்னை : பயிர்கடன் தள்ளுபடி விவகாரம் குறித்து சட்டசபையில் நேற்று பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி, அதிமுக ஆட்சியில் பயிர் கடன் தள்ளுபடி செய்ய 3 நாளில் 16 லட்சம் பேரின் பட்டியலை தயாரித்தது எப்படி? என்று கேள்வி எழுப்பியதுடன், இந்த ரகசியம் செல்லூர் ராஜுக்குத்தான் தெரியும், தனக்கு தெரியாது என்றார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவு மற்றும் உணவுத் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் ஐ பெரியசாமி பதில் அளித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசும் போது , அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன் தள்ளுபடியில் ரூ.516 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், நாமக்கல், சேலம் மாவட்டத்தில் மட்டும் ரூ.503 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் கூறினார்.

தள்ளுபடி
இதனிடையே விவாதத்தின் போது பேசிய முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பயிர் கடனில் நடந்த முறைகேடுகளை கூட்டுறவு துறை அமைச்சர் இங்கே சொன்னார். இந்த முறைகேடுகள் நடக்க எங்கள் ஆட்சியில் அனுமதிக்கவில்லை. 2016-2021ல் பயிர் கடனை எப்படி எல்லாம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது குறித்து வரைமுறை கொடுத்துள்ளோம். தேர்தல் அறிவிப்பு வரும் முன்பு தள்ளுபடி அறிவிக்கப்படுகிறது. அறிவிக்கப்பட்டவர்களுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அரசு துறை சார்ந்த பணியாளர்கள் அனைவரும் அதில் ஈடுபட வேண்டும் என்று பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பினார். அதனால் தவறு நடந்தவர்கள் மீது சட்டப்படி நீங்கள் நடவடிக்கை எடுக்காம் என்று செல்லூர் ராஜூ கூறினார்.

ஐ பெரியசாமி கேள்வி
அதற்கு பதில் அளித்து அமைச்சர் ஐ பெரியசாமி கூறுகையில், பயிர் கடன் தள்ளுபடி செய்வது குறித்து பிப்ரவரி 5ம் தேதி முடிவெடுத்து 8ம் தேதி பதிவாளர் அரசாணை போட்டதாக சொன்னார். இவ்வளவு நேரத்திற்குள் மொத்தம் 16 லட்சம் பேர் கடன் தள்ளுபடி செய்ய தகுதியுடைவர்கள் என்ற பட்டியலை எடுத்துவிட்டனர். அவ்வளவு சீக்கிரமாக குறுகிய காலத்துக்குள் எப்படி தயார் செய்தார்கள் என்றே தெரியவில்லை.

கடன் தள்ளுபடி
இந்த ரகசியம் செல்லூர் ராஜுக்கு தான் தெரியும். எனக்கு தெரியாது. அவசரமாக அள்ளித்தெளித்துள்ளனர். ஒரு கடன் சங்கத்தில் அதிகபட்சமாக 4 கோடி ரூபாய் வரை கடன் தள்ளுபடி செய்யலாம். ஆனால் ஒரு சங்கத்தில் 10 கோடி ரூபாய் வரை தள்ளுபடி செய்துள்ளனர். இப்படி தள்ளுபடி செய்தால் சாதாரண விவசாயி எங்கே போவான்.

மக்களின் வரிப்பணம்
கடன் தள்ளுபடி செய்வதற்கு ஒரு அளவு வேண்டாமா. இது சாதாரண பணம் அல்ல. மக்களின் வரிப்பணம். ஏழைகளுக்கு போய் சேர வேண்டிய பணம். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இதற்காகத்தான் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற தவறுகள் வரக்கூடாது. இது போன்ற தவறுகள் நடக்காமல் இருப்பது ஒரு பொது நீதியாக இருக்க வேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள்" இவ்வாறு ஐ பெரியசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications