சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏற்கனவே செலுத்திய தொகை அதிகமாக இருப்பின், வரும் மின் கணக்கீட்டில் சரி செய்யப்படும்.. தங்கமணி

Google Oneindia Tamil News

சென்னை: ஏற்கெனவே செலுத்தப்பட்ட தொகை அதிகமாக இருப்பின், நுகர்வோரின் எதிர்வரும் கணக்கீட்டில் அந்தத் தொகை சரி செய்யப்படும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார். அத்துடன் மின் கட்டண விவகாரத்தில் முக ஸ்டாலின் மக்களை குழப்புவதாகவும் சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாகவும் அமைச்சர் தங்கமணி பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறை அமைச்சர் தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''தமிழக அரசு, கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமாக எடுத்ததன் காரணமாகத்தான் இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில்தான் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களின் சதவீதம் அதிகமாகவும், இறப்பு விகிதம் மிகக்குறைவாகவும் இருந்து வருகிறது.

புதுவையில் ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் பட்ஜெட் தாக்கல்- கலைஞர் பெயரில் சிற்றுண்டி, இலவச மின்சாரம்!புதுவையில் ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் பட்ஜெட் தாக்கல்- கலைஞர் பெயரில் சிற்றுண்டி, இலவச மின்சாரம்!

மின்மிகை மாநிலம்

மின்மிகை மாநிலம்

மின்சாரம் என்பது மக்களின் அத்தியாவசியத் தேவை என தற்போது கூறும் எதிர்க்கட்சித் தலைவர் முந்தைய திமுக ஆட்சியின் மெத்தனத்தால் நிலவிய கடுமையான மின்வெட்டின் காரணமாக, தமிழ்நாடே இருளில் மூழ்கி இருந்ததை மறந்துவிட்டு சந்தர்ப்பவாத அரசியல் மட்டுமே செய்து வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், அவரைத் தொடர்ந்து தமிழக அரசும், கடந்த 10 ஆண்டுகளாக எடுத்துவரும் பல்வேறு சீரிய நடவடிக்கைகளால் மின் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லாத வகையில், தமிழ்நாட்டில் தரமான மின்சாரம் தங்குதடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, தமிழ்நாடு தொடர்ந்து மின்மிகை மாநிலமாகவும் திகழ்ந்து வருகின்றது.

மின் அளவீடு 4 மாதங்கள்

மின் அளவீடு 4 மாதங்கள்

கொரோனா தொற்று பரவாமல் இருக்கத்தான், ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு நடைமுறை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களிலும், பல்வேறு நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது. தொற்று பரவாமல் இருக்க வேண்டும் என்ற காரணத்தால்தான், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகப் பணியாளர்கள் வீடுதோறும் சென்று மின் கணக்கீடு செய்யவில்லை. அதற்கு பதில், தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்கள் (LT Service), தங்களுடைய ஜனவரி-பிப்ரவரி மாத கணக்கீட்டுப் பட்டியலின்படி, மார்ச்-ஏப்ரல் மாதங்களுக்கு மின் கட்டணத்தைச் செலுத்துமாறு கோரப்பட்டது. தற்போது, தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், மின் கணக்கீடு செய்யும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முந்தைய மாத தொகை கழிப்பு

முந்தைய மாத தொகை கழிப்பு

இந்த மின் அளவீடு 4 மாதங்களுக்கு உள்ள மின் பயன்பாடு என்பதால், நான்கு மாத காலத்திற்கான மின் நுகர்வு, இரண்டு மாதங்களுக்கான (bi-monthly) வீதப்பட்டி அடிப்படையில் சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த மின் நுகர்வு இரண்டு மாதங்களுக்கான வீதப்பட்டிப்படி மின் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. கணக்கீடு செய்யும்பொழுது ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கான நுகர்விலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு முதல் கொண்டு வந்த 100 யூனிட்டுகள் இலவச மின்சாரப் பயனை அனைத்து வீட்டு மின் உபயோகிப்பாளருக்கும் வழங்கிய பின்பு கணக்கீடு செய்து, மீதம் செலுத்த வேண்டிய தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட தொகையில், ஏற்கெனவே மார்ச்-ஏப்ரல் 2020 மாதங்களில் முந்தைய மாத மின் கணக்கீட்டின்படி செலுத்தப்பட்ட தொகையானது கழிக்கப்பட்டுள்ளது.

 தொகை சரி செய்யப்படும்

தொகை சரி செய்யப்படும்

மேலே கூறியபடி கணக்கீடு செய்ததில் ஏற்கெனவே செலுத்தப்பட்ட தொகை அதிகமாக இருப்பின், நுகர்வோரின் எதிர்வரும் கணக்கீட்டில் அந்தத் தொகை சரி செய்யப்படும். மேற்கண்ட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கணக்கீட்டு முறை தவறு எனத் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில், மேற்குறிப்பிட்ட கணக்கீட்டு முறை சரியானது என்பதனை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பு அளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மேற்கண்ட கணக்கீட்டு முறையினால்தான், ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கான கணக்கீட்டிலும், தனித்தனியே 100 யூனிட் இலவச மின்சாரம் நுகர்வோருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

சந்தேகம் இருந்தால்

சந்தேகம் இருந்தால்

இவ்வாறு கணக்கீடு செய்தது விதிகளுக்கு உட்பட்டதே என்றும், அது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நேர்மைத் தன்மையைக் காட்டுகிறது எனவும் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கணக்கீடு குறித்து பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், ஒவ்வொரு நுகர்வோரும் தனித்தனியே அவர்களுடைய கணக்கீட்டு முறையை வெளிப்படையாகவும், தெளிவாகவும் காணும் வகையில் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. கணக்கீட்டில் சந்தேகம் ஏதும் இருக்கும் பட்சத்தில், நுகர்வோர்கள் இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் தெள்ளத்தெளிவாக தனது தீர்ப்பைக் கூறிய பிறகும், மின்சாரக் கட்டணம் குறித்த கணக்கீட்டு விவரம் இவ்வாறு மிகத் தெளிவாக இணையதளத்தில் வெளியிட்ட பின்னரும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் திரும்பத் திரும்ப, "மின்சார ரீடிங் எடுத்ததில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன என மக்கள் கூறுகின்றனர்" எனவும், "தவறான அடிப்படையில் கணக்கீடு" எனவும், "மின்சார வாரியத்திற்கு லாபம்" எனவும் உண்மைக்கு மாறான செய்தியை கூறிக்கொண்டிருப்பது, மக்களைக் குழப்ப முயல்வதுதான்.

 வன்மையாக கண்டிக்கத்தக்கது

வன்மையாக கண்டிக்கத்தக்கது

ஆனால், அவரது எண்ணம் ஈடேறாது. இது எதிர்க்கட்சித் தலைவர் செய்யும் சந்தர்ப்பவாத அரசியலின் உச்சகட்டம். எதிர்க்கட்சித் தலைவர், தன்னுடைய தொலைக்காட்சி பேட்டியில், அதிக மின் கட்டணம் சம்பந்தமாக சில ஆவணங்களைக் காண்பித்தார். அவற்றில் ஒன்றில் மட்டுமே, நுகர்வோரின் விவரம் தெளிவாக தெரிந்ததனால், அதை மின்சார வாரியம் ஆய்வு செய்தது. அந்த ஆய்வில், அந்த நுகர்வோர், வீட்டு மின் நுகர்வோர் இல்லை எனவும், தொழில் மின் நுகர்வோர் எனவும் தெரியவந்தது. தொழில் மின் நுகர்வோர் அட்டையை காண்பிப்பது, மக்களை திசை திருப்பும் காரியமாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

00 யூனிட் இலவச மின்சாரம்

00 யூனிட் இலவச மின்சாரம்

மின் கணக்கீட்டு வீதப்பட்டி, அதாவது slab-ஐ மாற்றி மின் கட்டணத்தை ஏற்றி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் லாபம் பார்க்க வேண்டும் என்று மின் கணக்கீடு செய்வதுமில்லை; அதேபோல லாப நோக்கத்தை கருத்தில் கொண்டு வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மின்சாரம் விநியோகிப்பதும் இல்லை. எந்த ஒரு அரசும், வீட்டு மின் நுகர்வோர்களுக்கான கணக்கீட்டின் மூலம் லாபம் பார்க்க வேண்டும் என்று செயல்படுவதில்லை. இந்த அடிப்படையில்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் அளித்தார் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் நினைவில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில், வீட்டு மின் நுகர்வோர்களுக்கான தற்போதைய மின் கட்டணம், அதன் உற்பத்தி செலவை விட மிக, மிக குறைந்த அளவிலேயே உள்ளது. மேலும், அண்டை மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின் கட்டணம் மிகக் குறைவாக உள்ள நிலையில், கட்டணத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்கள் என்பதும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் லாபம் பார்க்கின்றது என கூறுவதிலும், எள்ளளவும் உண்மை இல்லை. முந்தைய திமுக ஆட்சியில் இருண்ட மாநிலமாக இருந்த தமிழ்நாட்டை, தொலைநோக்குடன் தனது திடமான செயலாற்றலால், மின்மிகை மாநிலமாக மாற்றி ஒளிரச்செய்த ஜெயலலிதா 2016-ல் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தவுடன், ஒவ்வொரு வீட்டு மின் நுகர்வோருக்கும் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்க ஆணையிட்டார். இதன் மூலம் சுமார் 2.1 கோடி குடும்பங்களுக்கு மேல் பயன்பெற்று வருகின்றனர்.

 70 லட்சம் ஏழைகள் பயன்

70 லட்சம் ஏழைகள் பயன்

இந்தச் சலுகை மக்களுக்கு வழங்கப்பட்ட பெரிய சலுகையாக எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரியவில்லையா? இந்தச் சலுகையினால் மின்சார வாரியத்திற்கு ஏற்படும் செலவை ஈடுகட்ட, வருடத்திற்கு சராசரியாக 2,878 கோடி ரூபாய் கடந்த 4 வருடங்களாக தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. இதன்பொருட்டு இந்த 4 வருடங்களில் 11,512 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகை இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இல்லாத சலுகையாகும். பேரிடர் காலத்தில் மட்டுமல்லாமல், அனைத்து காலங்களிலும், தொடர்ந்து 4 ஆண்டுகளைக் கடந்து, பொதுமக்களின் நன்மை கருதி இந்தச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இது, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் அறிந்த விஷயம். மேலும், 100 யூனிட்டிற்குள் மின் நுகர்வு செய்யும் சுமார் 70 லட்சம் ஏழை, எளிய சாமானிய குடும்பங்களுக்கு விலையில்லா மின்சாரமே வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சலுகை திமுக ஆட்சிக்காலத்தில் கொடுக்கப்பட்டதா? அல்லது எதிர்க்கட்சித் தலைவர் மேற்கோள் காட்டும் கேரளா, மஹாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கொடுக்கப்படுகிறதா என்பதை அவரே தெளிவுபடுத்த வேண்டும். ஆனால், இதனை பாராட்ட மனமில்லாத எதிர்க்கட்சித் தலைவர், கரோனா காலத்திற்கு மட்டுமே வெறும் 80 யூனிட்டுகள் சலுகையாக வழங்கும் கேரளத்தைப் போன்றும், மின் கட்டணத்தில் 5-7 சதவீதம் மட்டுமே குறைத்து சலுகை வழங்கும் மகாராஷ்டிராவைப் போன்றும் தமிழ்நாட்டில் வழங்க வேண்டும் என்கிறார். தமிழ்நாட்டில் வீட்டு பயனீட்டாளர்கள் அனைவருக்கும், முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது, மேலும், 300 யூனிட் பயன்படுத்தும் குடும்பங்கள் 500 ரூபாய் செலுத்தினால் போதும். ஆனால், இதேபோல் 300 யூனிட் பயன்படுத்தும் குடும்பங்கள் கேரளாவில் 1,165 ரூபாயும், மகாராஷ்டிராவில் 1,776 ரூபாயும் கட்டணமாக செலுத்துகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் தான் வீட்டு உபயோகத்திற்கு மின் கட்டணம் மிக மிக குறைவாக உள்ளது.

திசை திருப்பும் நாடகம்

திசை திருப்பும் நாடகம்

தமிழ்நாட்டை விட மிக அதிக வீட்டு மின்கட்டண விகிதப்பட்டி உள்ள மகாராஷ்டிரா மற்றும் கேரளத்தை மேற்கோள் காட்டுவதன் மூலம் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் போராட்டம் நடத்த விரும்புகிறாரா? அவர்களைப் போல் தமிழ்நாட்டிலும் மிக அதிக மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் விரும்புகிறாரா? பொதுமக்களுக்கு தமிழ்நாட்டில் அரசு தொடர்ந்து வாரி வழங்கும் மின் சலுகைகளை மறைத்து, பிற மாநிலங்களில் கொடுக்கப்படும் சிறிய அளவிலான சலுகைகளைப் பற்றிக் கூறுவது "கனி இருப்ப காய் கவர்ந்தது" போன்றதாகும். மின்சாரம் என்பது மக்களது மிகமிக அவசியத் தேவை என்று கூறும் ஸ்டாலின், அந்த மின்சாரத்தை அவர்கள் ஆட்சிக்காலத்தில் சரிவர வழங்காமல் தமிழ்நாட்டினை இருளில் ஆழ்த்திவிட்டு, அவர்கள் ஆட்சிக் காலத்தில் கொடுத்த அரைகுறை மின்சாரத்திற்கு எந்தவித சலுகையும் அளிக்காமல், தற்போது மின்சாரத்திற்கு சலுகை என கூப்பாடு போடுவது, மக்களை திசை திருப்பும் நாடகம் மட்டுமே. அது ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது. எதிர்க்கட்சித் தலைவர், நீதிமன்றமே ஏற்றுக்கொண்ட மின்கட்டண கணக்கீட்டு முறையைக் குளறுபடி என்கிறார். ஆனால் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை என்கிறார். இப்படி முரண்பட்ட கருத்துகள், திமுக செய்யும் முரண்பாடான அரசியலை தெளிவாகக் காட்டுகிறது.

முதல்வர் கூறியுள்ளார்

முதல்வர் கூறியுள்ளார்

முதல்வர் ஈரோட்டில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், தமிழ்நாட்டில் மின் கட்டணம் எவ்வாறு கணக்கீடு செய்யப்படுகின்றது என்பது குறித்து விரிவாக தெளிவுபடுத்தியுள்ளார்கள். சலுகைகள் பற்றி பேசும் எதிர்க்கட்சித் தலைவருக்கு, கரோனா காலத்தில் பொதுமக்களைக் காக்க அரசு கொடுத்து வரும் சலுகைகளைப் பற்றி குறிப்பிடாமல் இருப்பது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றதாகும். "வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ" என்ற முதுமொழிக்கு ஏற்ப தற்போது பேசியுள்ளது, அவருடைய மலிவான அரசியலைக் காட்டுகின்றது. உங்கள் ஆட்சிக் காலத்தில் இருண்ட தமிழ்நாட்டைக் கண்ட மக்கள் ஒருபோதும் இதனை நம்ப மாட்டார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதை உங்களுக்கு வெகு விரைவில் தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் உணர்த்துவார்கள்''. இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

English summary
tamilnadu electricity: Minister Thangamani said that If the amount already paid is higher, it will be corrected in the forthcoming calculation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X