மீண்டும் அதே அதிகாரி.. காலை உணவுத் திட்டம்.. சூப்பராக செயல்படுத்த இளம்பகவத் ஐஏஎஸ் நியமனம்!
சென்னை : பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ்ஸை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
தமிழகம் முழுவதுமுள்ள 1,545 அரசுப்பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது.
அரசு தொடக்கப் பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பள்ளி நாளிலும் காலை உணவு வழங்கப்படும்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக முன்பு 'இல்லம் தேடிக் கல்வி' திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட இளம்பகவத் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

காலை உணவுத் திட்டம்
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 7ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும். முதல் கட்டமாக இத்திட்டம் சில மாநகராட்சிகளிலும் தொலைதூர கிராமப்புறங்களிலும் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணை வெளியீடு
இதுதொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் ஊட்டச் சத்து மிக்க காலை உணவு வழங்குவதற்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம் செய்தல் தொடர்பாக ஆணை வெளியிடப்படுகிறது.

1,545 அரசுப் பள்ளிகளில்
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச் சத்து குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் தமிழ்நாடு முதலமைச்சரால் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு தொடக்கப் பள்ளி மாணவ மாணவியருக்கு முதற்கட்டமாக அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலை வேளைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனை செயல்படுத்தும் பொருட்டு தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப் பகுதிகளில் செயல்படும் 1545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 தொடக்கப்பள்ளி (1 முதல் 5 வகுப்பு வரை) குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை 2022-2023 ஆம் ஆண்டில் முதற்கட்டமாக செயல்படுத்திட ஆணை வெளியிடப்பட்டது.

ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை திறம்பட செயல்படுத்திட ஏதுவாக இல்லம் தேடிக் கல்வி சிறப்பு அலுவலர், க.இளம்பகவத், ஐ.ஏ.எஸ் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின், திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். திட்டத்துக்கான பள்ளிகள், பயனாளிகள், ஒருங்கிணைப்பு மையங்கள், செயல்படுத்தும் அமைப்புகள் ஆகியவற்றை துரிதமாக கண்டறிதல், மூலப்பொருட்கள் கொள்முதல், உள்ளூர் காய்கறிகள் கொள்முதலை மேற்கொள்ளுதல் ஒட்டுமொத்த செயல்பாடுகளை கண்காணித்தல் ஆகியவற்றை ஒருங்கிணைப்பு அலுவலர் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம்பகவத் ஐஏஎஸ்
தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறையின் இயக்குநராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி இளம் பகவத், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 'இல்லம் தேடிக் கல்வி' திட்டம் தொடங்கப்பட்டபோது அதன் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தற்போது, முதலமைச்சர் அறிவித்த சீரிய திட்டமான 'காலை உணவுத் திட்டத்தின்' ஒருங்கிணைப்பு அலுவலராகவும் இளம்பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications