வருங்கால வைப்பு நிதி பணம் எடுப்பதில் சிக்கலா? நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மக்களுக்கு அறிவிப்பு
தென்காசி: பி.எப். பணம் எடுப்பதில் சிக்கலா? ஓய்வூதியம் கிடைக்கவில்லையா? இ.எஸ்.ஐ. சேவையில் ஏதாவது பிரச்சனையா? இதற்காக சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அலையாமல், தங்கள் மாவட்டத்திலேயே அதிகாரிகளிடம் குறைகளை தெரிவிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குறைகளைக் கேட்டுத் தீர்வு காண சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. மேற்கண்ட 3 மாவட்டங்களிலும் எங்கே சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது என்ற விவரங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
வேலைக்கு செல்லும் பலருக்கும் மாதச் சம்பளத்தில் பி.எப். எனப்படும் வருங்கால வைப்புநிதிக்காக ஒரு தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த பணம் எதிர்கால சேமிப்பாக மட்டுமல்லாமல், ஓய்வூதியம் மற்றும் காப்பீடு போன்ற பலன்களையும் வழங்குகிறது.

வருங்கால வைப்பு நிதி
அந்தவகையில், ஊழியர்களின் எதிர்கால நலனுக்காக உருவாக்கப்பட்ட சேமிப்புத் திட்டம்தான் இது.. ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் பொதுவாக 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். நிறுவனமும் தனது பங்களிப்பை செலுத்தும். இந்தப் பணத்துக்கு வட்டி கிடைக்கும்.
இதன் மூலம் ஊழியர்கள் ஓய்வு பெறும்போது சேமித்த தொகையைப் பெறலாம். மருத்துவச் செலவு, வீடு வாங்குதல், குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற தேவைகளுக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டு பணம் எடுக்கலாம். மேலும், ஓய்வூதியம் மற்றும் ஊழியர் பணியிலிருக்கும்போது உயிரிழந்தால் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்கும் வசதிகளும் உள்ளன.
பிஎப் பணத்தை எப்போது எடுக்கலாம்
அதேபோல, பணியிலிருக்கும்போதே சில குறிப்பிட்ட தேவைகளுக்காக பி.எப். பணத்தை முன்கூட்டியே எடுக்க முடியும். மருத்துவ செலவு, குழந்தைகளின் கல்வி, திருமணம், வீடு வாங்குதல் அல்லது கட்டுதல் போன்ற காரணங்களுக்காக விதிமுறைகளுக்கு உட்பட்டு பணம் பெறலாம்.
வேலையை விட்டு விலகிய பிறகு முழுத்தொகையை பெறுவதற்கும் விதிமுறைகள் உள்ளன. எவ்வளவு பணம் எடுக்கலாம், எத்தனை மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பது பணம் எடுக்கும் காரணத்தைப் பொறுத்து மாறுபடும். அதனால்தான் விண்ணப்பிக்கும் முன்பு EPFO விதிகளை சரிபார்ப்பது அவசியம் என்கிறார்கள்.
நவம்பர் 27-ல் குறைதீர்க்கும் கூட்டம்
ஊழியர்கள் தங்களது பி.எப். பிரச்சனைகளுக்காக அலுவலகங்களுக்கு அலையாமல், அவர்களது மாவட்டத்திலேயே அதிகாரிகளைச் சந்தித்து குறைகளை தெரிவிக்க 'வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் 2.0' என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
EPFO எனப்படும் வருங்கால வைப்புநிதி நிறுவனம் 2023 ஜனவரி முதல் இந்த மாவட்ட அளவிலான நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதமும் 27-ம் தேதி நடத்தி வருகிறது. இதில் பி.எப். உறுப்பினர்கள், நிறுவனங்கள், ஓய்வூதியம் பெறுவோர் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். முடிந்தவரை உடனடியாகத் தீர்வு வழங்கப்படும். மற்ற புகார்கள் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த வகையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வரும் நவம்பர் 27-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. EPFO மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (ESIC) இணைந்து நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.
பி.எப். மற்றும் இ.எஸ்.ஐ. உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழில் அதிபர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் அமைப்புகள் இதில் கலந்து கொள்ளலாம். தங்களுடைய குறைகளை அதிகாரிகளிடம் நேரடியாக தெரிவித்து தீர்வு காண இந்தக் கூட்டம் வாய்ப்பளிக்கும்.
கூட்டம் நடைபெறும் இடங்கள்
நெல்லை மாவட்டத்தில் அகஸ்தியர்பட்டியில் உள்ள கேம்பிரிட்ஜ் மெட்ரிக் பள்ளியில் கூட்டம் நடைபெறுகிறது... தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம் ரெயில் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீமுருகன் டைல்ஸ் ஒர்க்ஸ் நிறுவனத்தில் கூட்டம் நடைபெற உள்ளது... தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்டரங்கில் கூட்டம் நடைபெறுகிறது. நெல்லை மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் சிவசண்முகம் இதனை தெரிவித்துள்ளார்.
பி.எப். பணம் கிடைப்பதில் சிக்கல், ஓய்வூதியத் தொகை தொடர்பான பிரச்சனை அல்லது இஎஸ்ஐ சேவையில் குறை இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் பிரச்சனைகளை தெரிவிக்கலாம்.




Click it and Unblock the Notifications
