வெதர் அப்டேட்! 9 மாவட்டங்களுக்கு அலர்ட்.. அடுத்த 2 மணி நேரத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு
சென்னை: காஞ்சி, திருவாரூர், நாமக்கல் உட்பட வட, டெல்டா மற்றும் உள் தமிழகம் என 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டை பொருத்த அளவில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி தொடங்கியது. இதற்கிடையில் மாண்டஸ் புயல் பரவலான மழையை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 1 தொடங்கி டிசம்பர் 12ம் தேதியான நேற்று வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 40 செ.மீ அளவுக்கு மழை பொழிந்துள்ளது.

பருவமழை
இது இயல்பான மழை பொழிவுதான். சென்னையை பொறுத்த அளவில் இயல்பான அளவை விட 16 சதவிகிதம் கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. அதாவது சென்னையில் இக்காலகட்டத்தில் இயல்பாக 74 செ.மீ மழை பொழிவு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு 86 செ.மீ என மழை பொழிந்துள்ளது. இதற்கு மாண்டஸ் புயலும் ஒரு காரணமாகும். தற்போது புயல் கரையை கடந்திருந்தாலும் கூட அது விட்டுச் சென்ற மழை மேகங்கள் காரணமாக வட தமிழகம் பரவலான மழையை பெற்று வருகிறது. இம்மழை அடுத்த ஒரு சில நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மழை காரணமாக வட தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 2 மணி நேரத்தில்
அதாவது திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் ஆட்சியர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். நேற்று மழை ஓரளவு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் நாள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்ததால் பிற்பகலுக்கு பின்னர் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. எனவே இன்று முன்னெச்சரிக்கையாக முழுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அடுத்த 2 மணி நேரத்தை பொருத்த அளவில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வட தமிழக பகுதிகள்
அதன்படி காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாமக்கல் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், வட தமிழகத்தை பொருத்த அளவில் அடுத்த 3 மணி நேரத்தில் நெமிலி, திருத்தணி, ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம், குன்றத்தூர், திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் திருப்போரூர் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்கறி விலை உயர்வு
தொடர் மழை காரணமாக சென்னையில் காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. அதாவது ஒரு கிலோ மகாராஷ்டிரா வெங்காயம் 24/20/18, ஆந்திரா வெங்காயம் 14/13, நவீன் தக்காளி 30, நாட்டு தக்காளி 30/25, உருளை 30/25/23, சின்ன வெங்காயம் 100/70/50, ஊட்டி கேரட் 40/35/25 என விற்கப்படுகிறது. இதில் கடந்த வாரம் உருளை, வெங்காயம் கேரட், சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவை 10 ரூபாய் குறைந்து விற்பனையாகி இருந்தது. ஆனால் தற்போது வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications