ஜெய் பீம்: விடுங்க.. இந்த 2 கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க! காடுவெட்டி குரு மகன் கனலரசன் ஆவேசம்
சென்னை: ஜெய் பீம் திரைப்படத்தில் அக்னி கலசத்திற்கு பதிலாக உதயசூரியன் சின்னத்தை வைக்க முடியுமா அல்லது குரு என்ற பெயருக்கு மாற்றாக ஸ்டாலின் என்று அந்த கதாபாத்திரத்துக்கு பெயர் சூட்ட முடியுமா என்று வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் காடுவெட்டி குரு மகன் கனலரசன் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஜெய்பீம் திரைப்படத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் தொலைபேசியில் பேசும்போது அதன் பின்னணியில் வன்னியர் சங்கத்தின் சின்னமான அக்னி கலசம் ஒரு காலண்டரில் இடம் பெற்றிருந்ததாக சர்ச்சை எழுந்தது.
சப்-இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திற்கு குரு மூர்த்தி என்ற பெயர் சூட்டப்பட்டிருந்ததும், அக்னி கலசம் காலண்டரும் இணைத்து பார்க்கப்பட்டு இது காடுவெட்டி குருவை மறைமுகமாக விமர்சனம் செய்வதை போல இருக்கிறது என்று வன்னியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.

பாமக கேள்விகள்
இந்த விஷயத்தில் பாமக கட்சியும் களம் இறங்கி நடிகர் சூர்யாவுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. அக்னி கலசம் காலண்டர் கிராபிக்ஸ் மூலமாக தற்போது மாற்றப்பட்டுள்ளது என்றபோதிலும் சூர்யா உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வன்னியர் சங்கம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது. சிதம்பரம் நீதிமன்றத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நேற்று வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

கருத்து சுதந்திரம்
இந்த நிலையில்தான் காடுவெட்டி குரு மகன் கனலரசன் ஒரு வீடியோ பதிவில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருக்கிறார். ஜெய்பீம் திரைப்படத்தில் பெரும்பான்மையான சமூகமான வன்னியர் சமூகத்தை மோசமாக சித்தரிக்கும் வகையில் காட்சி அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. அக்கினி கலசம் படம், வில்லன் வீட்டு காலண்டரில் வைக்கப்பட்டு இருக்கிறது. இதை தட்டி கேட்டால் கருத்து சுதந்திரம் என்று பதில் சொல்கிறார்கள்.

உதய சூரியன் காலண்டர்
கருத்து சுதந்திரம் பேசுகிற இயக்குனர் ஞானவேல் அல்லது நடிகர் சூர்யாவாக இருக்கட்டும் உங்களிடம் நான் ஒன்று கேட்கிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால் வன்னியர் சங்கம் கலசத்திற்கு பதிலாக அங்கு உதயசூரியன் காலண்டர் அல்லது இரட்டை இலை படம் வரைந்த காலண்டர் வைக்க முடியுமா. குரு என்ற பெயருக்கு மாற்றாக ஸ்டாலின் அல்லது எடப்பாடி பழனிசாமி என்று பெயர் சூட்ட முடியுமா. இதை செய்யத் துணிவு கிடையாது உங்களுக்கு. அந்த இடத்தில் வன்னியர் சங்க காலண்டரை வைத்துவிட்டு வில்லன் கதாபாத்திரத்திற்கு குரு என்று பெயர் சூட்டுவது மட்டும் எப்படி நியாயமாகும்.

பாதிக்கப்பட்ட பார்வதி
உண்மையிலேயே இந்த படத்தை நீங்கள் ஒரு நல்ல கண்ணோட்டத்துடன் எடுத்து இருந்தால் பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாவை சந்தித்து அவரிடம் அனுமதி பெற்றிருக்கவேண்டும். மொத்தத்தில் நீங்கள் செய்திருப்பது திருட்டுத்தனம். இது அனைவருக்குமே தெரிகிறது. நீங்கள் நியாயமாக இருந்தால் உங்கள் லாபத்தில் சரிபாதியை பார்வதிக்கு கொடுக்க வேண்டும். இவ்வாறு கனலரசன் அந்த வீடியோ பதிவில் தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video

மாரிதாஸ் கேள்வி
முன்னதாக, யூடியூப் பிரபலம் மாரிதாஸ் வெளியிட்ட யூடியூப் பதிவில், காலண்டர் காட்சி, திட்டமிட்டு தான் வைக்கப்பட்டு இருக்கிறது. எதேர்ச்சையாக நடக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். ஏனென்றால் வேறு பல காட்சிகளிலும் அந்தந்த காட்சி அமைப்புக்கு ஏற்றவாறு பின்னணியில் காலண்டர்கள் வைக்கப்பட்டு இருக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டி இந்த காட்சியில் மட்டும் அக்னி கலசம் வைக்கப்பட்டு இருக்கிறது எனவே அனைத்து காட்சிகளிலும் எந்த காலண்டரை வைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்த படக்குழு இதை தெரியாமல் வைக்க வாய்ப்பு இல்லை. அவர்கள் நோக்கம் உள்நோக்கம் கொண்டது. அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications