காணும் பொங்கல்..சென்னை முதல் குமரி வரை..சுற்றுலா தலங்களில் உற்சாக கொண்டாட்டம்
சென்னை: காணும் பொங்கலை ஏராளமானோர் இன்று உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். சென்னை மற்றும் புறநகரில் உள்ள சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்துள்ளனர். இவர்கள் வசதிக்காக மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 15,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை திங்கட்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாட்டுப்பொங்கல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. உழவுதொழிலுக்கு உதவும், விவசாயிகளுக்கு தோள் கொடுக்கும் மாடுகளை போற்றும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
பொங்கல் பண்டிகையில் மூன்றாம் நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் தினத்தன்று மக்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்களை சந்தித்து பெரியோர்களின் ஆசி பெற்று தங்கள் அன்பையும் உணவு பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். மேலும் பொழுதுபோக்கு இடங்களுக்கு சென்று மகிழ்வர்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சென்னையில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் மெரினா கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களில் அதிகளவில் குவிந்தனர். மெரினா கடற்கரையில் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை சாலையிலும், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை எங்கும் மனித தலைகளாக காணப்பட்டது.
போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, இணை கமிஷனர்கள் திஷா மிட்டல், சிபி சக்கரவர்த்தி ஆகியோரது தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் தலா ஒரு தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறையும், சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 போலீஸ் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
பெற்றோருடன் கடற்கரைக்கு வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்காக போலீசாரால் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள 11 உதவி மையங்களிலும், பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலும் வழங்கப்படுகிறது. இந்த அடையாள அட்டையில் குழந்தை, பெற்றோர் பெயர், முகவரி, செல்போன் எண் ஆகிய விவரங்கள் உள்ளன.
அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்சுகளில் மருத்துவ குழுவினரும், மீட்பு பணிகளுக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்களும், மோட்டார் படகுகள் மற்றும் 140க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். 12 முக்கியமான இடங்களில் அதிக ஒளித்திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு தற்காலிக கட்டுப்பாட்டு அறையில் அகன்ற திரைகளில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மெரினா கடற்கரை மட்டுமல்லாது பெசன்ட்நகர் எலியட்ஸ் பீச், கோவளம் ஆகிய இடங்களில் மக்கள் அதிகமாக கூடினர். அசம்பாவிதத்தை தடுக்க மெரினா, பெசன்ட் நகர், கோவளம் உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகிய இடங்களிலும் கூட்டம் அதிகமாக கூடியது. பொதுமக்கள் அதிகம் கூடும் கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் போன்ற இடங்களிலும் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலையிலேயே சுற்றுலா தலங்களில் மக்கள் அதிகமாக கூடினர்.
மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் அண்ணா சதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கோவளம், மாமல்லபுரம், பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை விடப்படும். இன்று காணும் பொங்கல் என்பதால் பூங்கா திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னை மாநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உதவி ஆணையர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் என மொத்தம் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினருக்கு உதவியாக 1,000 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதே போல உதகையில் காலை முதலே குளிரையும் பொருட்படுத்தாமல் பொட்டானிக்கல் கார்டனில் குவிந்தனர். கொடைக்கானலிலும் காலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கொடிவேரி அணையில் ஏராளமானோர் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரையில் ஏராளமானோர் காலை முதலே கூடினர். அதிகாலையில் சூரிய உதயத்தை கண்ட மக்கள் மாலையில் சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசித்தனர்.












Click it and Unblock the Notifications