Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Madhya Kailash: தரமில்லாத மத்திய கைலாஷ் மேம்பாலம்! அது என்ன L Shape-ஆ? W வடிவமா? அன்புமணி அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மத்திய கைலாஷில் அமைக்கப்பட்டிருப்பது எல் வடிவ மேம்பாலமா, இல்லை W வடிவ மேம்பாலமா? சிறிதும் தரமின்றி கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம் குறித்து விசாரணை தேவை என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட L வடிவ மேம்பாலம் மிக மோசமான தரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. சற்று நேரத்திற்கு முன் அந்தப் பாலத்தில் பயணம் செய்த போது அதன் மோசமான தரத்தை நானே அனுபவித்துத் தெரிந்து கொண்டேன்.

madhya kailash Chennai anbumani

ரூ.61 கோடி மக்கள் பணத்தைக் கொட்டி அமைக்கப்பட்டுள்ள பாலம் சிறுவர்களால் விளையாட்டுக்கு கட்டப்பட்டதை விட மிக மோசமான தரத்துடன் அமைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

652 மீட்டர்

மத்திய கைலாஷ் பாலத்தை கடந்த 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தான் முதல்வர் திறந்து வைத்தார். ஆனால், 652 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களை தூக்கித் தூக்கி போடும் அளவுக்கு மேடும் பள்ளமுமாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

டபிள்யூ வடிவம்

அந்த பாலத்தில் பயணிக்கும் போது W வடிவத்தில் அமைக்கப்பட்ட பாலத்தில் பயணித்த உணர்வு தான் ஏற்பட்டது. சாலையே அமைக்கப்படாத மலைப்பாதைகளில் பயணிப்பதை விட மிக மோசமான அனுபவத்தை இந்தப் பாலம் மக்களுக்கு அளிக்கும். இதற்கு காரணம் மிக மோசமான வடிவமைப்பும், கட்டுமானமும் தான்.

மொத்தம் 652 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தை கட்டுவதற்கான ஒப்பந்தத் தொகையாக ரூ.60.68 கோடி , அதாவது ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.100 கோடி என்ற அளவில் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையைக் கொண்டு உலகத்தரத்தில் பாலத்தை அமைக்க முடியும்.

ஆனால், இந்த பாலம் உள்ளூர் தரத்தில் கூட இல்லை. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்ப்ட்ட மூன்றாவது மாதத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தைக் கட்டிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரின் மேற்பார்வையில் கட்டப்பட்ட பாலம் இந்த லட்சணத்தில் தான் இருக்கும்.

தரம் இல்லை

தமிழ்நாட்டில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டபட்ட எந்தப் பாலமும் தரமானதாக இல்லை. அதற்குக் காரணம் பாலம் கட்டுவதற்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் நடைபெறும் ஊழல்கள் தான். இத்தகைய ஊழல்களை சென்னை உயர் நீதிமன்றமே சுட்டிக்காட்டியிருக்கிறது. மத்திய கைலாஷ் பாலம் இவ்வளவு மோசமான தரத்தில் கட்டப்பட்டிருப்பதற்கும் ஊழல் தான் காரணமாக இருக்க முடியும்.

ஊழல்கள்

எனவே, மத்திய கைலாஷ் பாலத்தை கட்டுவதில் ஊழல்கள் நடந்ததா? என்பது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும். மிக மோசமான தரத்தில் இந்தப் பாலத்தைக் கட்டிய ஒப்பந்ததாரர் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.' எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மேம்பாலம் திறப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 15.2.2026 அன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை - அடையாறில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 60 கோடியே 68 இலட்சம் ரூபாய் செலவில் ராஜீவ் காந்தி சாலை மற்றும் சர்தார் பட்டேல் சாலையை இணைக்கும் மத்திய கைலாஷ் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

ராஜீவ் காந்தி சாலை

ராஜீவ் காந்தி சாலையானது மத்திய கைலாஷ் பகுதியில் சர்தார் பட்டேல் சாலையிலிருந்து தொடங்குகிறது. இந்த இரண்டு சாலைகளும் சந்திக்கும் இடம் "T" வடிவிலானதாகும். இச்சாலை சந்திப்பில், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கும் நேரத்திலும் முடிவுறும் நேரத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடனும், காலவிரயத்துடனும் இச்சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

வாகனங்கள் சிரமமின்றி..

மத்திய கைலாஷ் சந்திப்பில் வாகனங்கள் சிரமமின்றி கடந்து செல்வதற்கு வாகன செறிவுகளின் அடிப்படையில் சர்தார் பட்டேல் சாலையிலிருந்து ராஜீவ் காந்தி சாலைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் தற்போது அமைக்கப்பட்டுள்ள இருதட ஒருவழிச்சாலை மேம்பாலத்தினை பயன்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிண்டி டூ ஓஎம்ஆர் சாலை

அவ்வாறு, கிண்டியிலிருந்து ராஜீவ் காந்தி சாலைக்கு (OMR) செல்லும் வாகனங்கள் அனைத்தும் இப்பாலத்தினை பயன்படுத்தும்போது அடையாறு பகுதியிலிருந்து கிண்டி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் எவ்வித தங்குதடையின்றி செல்ல வழி ஏற்படும். மத்திய கைலாஷ் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சமிக்ஞையும் விலக்கிக் கொள்ளப்படும். மேலும், கிண்டியிலிருந்து அடையாறுக்கும், OMR சாலையிலிருந்து கிண்டிக்கும் செல்லும் வாகனங்கள் இலகுவாக இடதுபுறப் பயணம் (Free left movement) மேற்கொள்ள இயலும்.

எல் வடிவம்

இந்த "L" வடிவ இருதட ஒருவழிச்சாலை மேம்பாலம் 60 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவில், இருவழித்தடம் அகலம் கொண்டதாகவும், ஒருவழி வாகன போக்குவரத்து கொண்டதாகவும், வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் மொத்த நீளம் அணுகு சாலை உட்பட 652 மீட்டர் ஆகும்.

ராஜீவ் காந்தி சாலை

சர்தார் பட்டேல் சாலையிலிருந்து ராஜீவ் காந்தி சாலைக்கு பிரிந்து செல்லும் இடத்தில் பாலம் வளைவாகவும், இவ்வளைவானது 45 மீட்டர் ஆரம் (Radius) கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளைவுப் பகுதியில் பாலத்தின் அகலம் கூடுதலாக்கப்பட்டதுடன், மணிக்கு 30 கி.மீ வேகத்தில் மட்டுமே பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு

மேலும், கூடுதல் பாதுகாப்புக்காக பாலத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள தடுப்புசுவரின் உயரமும் அதிகரிக்கப்பட்டு, வாகனங்கள் இவ்வளைவில் செல்லும் போது சிரமமின்றி கடந்து செல்லும் வண்ணம் குறுக்குவெட்டு சாய்வுடன் (Super elevation) வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வளைவுப் பகுதியில் எவ்வித பயமின்றி பொதுமக்கள் பயணிக்கலாம். எனினும், பாலத்தின் மீதான பயணத்திற்கு வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வேக கட்டுப்பாட்டிற்கான எச்சரிக்கை பலகைகள் பாலத்தின் தடுப்புச்சுவரில் பொருத்தப்பட்டுள்ளது.

ஓடுதளத்தில் வழித்தட கோடுகள்

இப்பாலத்தின்மீது பயணிக்கும் வாகனங்கள் இரண்டு வழித்தடங்களிலும் ஒன்றுக்கொன்று இடையூறின்றி பயணிக்க ஏதுவாக பாலத்தின் ஓடுதளத்தில் வழித்தட கோடுகள் (Lane marking) அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பாதுகாப்பான பயணத்திற்கு தேவையான மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெரிசல்

இந்த மேம்பாலம் திறக்கப்படுவதன் மூலம் ராஜீவ் காந்தி சாலை, கிண்டி, அடையாறு, மத்திய கைலாஷ் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பொதுமக்களின் பயண நேரமும் குறையும். இவ்வாறு தமிழக அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+